ஹங்கேரி பட விழா: காதல் என்றால் கொல்வேன்!

ஹங்கேரி பட விழா: காதல் என்றால் கொல்வேன்!
Updated on
1 min read

காதலுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்வதுண்டு. அதற்காகக் காதல் வயப்பட்ட நொடிப்பொழுதிலேயே உயிரைக் கொடுக்க முடியுமா என்ன? லிஸாவைப் பார்த்துக் காதல்கொள்ளும் அத்தனை ஆண்களுக்கும் உடனடி மரணம் நேருகிறது. இப்படிப்பட்ட திகிலூட்டும் கதை மீது நகைச்சுவை தூவி எடுக்கப்பட்டிருக்கிறது  ‘லிஸா, தி ஃபாக்ஸ்-ஃபேரி’ (Liza, the Fox-Fairy) என்ற ஹங்கேரியன் திரைப்படம். பிரபல ஹாலிவுட் படமான, ‘ஆமிலி’யின் (‘amelie’) கதைக் கருவோடு ஜப்பானிய நரி வனதேவதைகளின் புராணக் கதை அம்சத்தை இழைத்திருக்கிறார் இயக்குநர் கரோலி உஜ் மெஸரோஸ்.

ஹங்கேரி நாட்டின் முன்னாள் ஜப்பானியத் தூதர் ஒருவரின் மனைவி நோய்வாய்ப்பட்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவருகிறார். அவரை அர்ப்பணிப்போடு பராமரித்துவருகிறார் செவிலி லிஸா. தாய், தந்தை இன்றி வளர்ந்த லிஸா, தனக்கு ஏற்ற காதலன் வருவான் என்ற கனவோடு இருக்கிறாள். அவள் ரசித்து வாசிக்கும் ஜப்பானிய நாவலின் கதாநாயகன், டோமி டாமி என்ற ராக் அண்ட் ரோல் இசைப் பாடகன். அந்தக் கற்பனை கதாபாத்திரம் பேயாக மாறி லிஸாவோடு ஆடி, பாடி, பேசி அவளின் நெருங்கிய தோழனாகிவிடுகிறது. லிஸாவைப் பொறுத்தவரை டோமி கற்பனை அல்ல நிஜம்.

killsjpg

லிஸா தனக்கு மட்டுமே சொந்தம் என டோமி நினைக்கும்போது சிக்கல் உருவாகிறது. லிஸாவின் வனப்பால் ஈர்க்கப்படும் அத்தனை ஆண்களையும் லிஸாவின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து கொன்றுவிடுகிறான். தான் நரி வனதேவையாக உருமாறிவிட்டதை லிஸா உணர்ந்து சுதாரித்துக்கொள்ளும்போது நிலைமை கை மீறிப்போய்விடுகிறது. லிஸா சாப விமோசனம் பெற்றாளா, அவளால் தன்னையும் தன்னிடம் நெருங்க எத்தனிக்கும் ஆண்களையும் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே ‘லிஸா, தி ஃபாக்ஸ் ஃபேரி’. இந்தப் படம், 2015-ல் வெளியாகி 25 சர்வதேச விருதுகளை வென்றது.

மாற்றுத் திறனாளிகளை அறிவுஜீவிகளாகவும் அற்புத மனிதர்களாகவும் காட்டுவது அண்மைக்கால சினிமா போக்கு எனலாம். ஆனால், அவர்கள் அடியாட்களாக அவதரித்தால் எப்படி இருக்கும்?  ‘கில்ஸ் ஆன் வீல்ஸ்’ (Kills on Wheels), குண்டர் படையில் சேரும் மூன்று மாற்றுத் திறனாளிகள் பற்றிய படம். அதுவும், விரக்தி, சமூகப் புறக்கணிப்பு ஆகிய காரணங்களால் அவர்கள் இந்தத் தொழிலுக்கு வரவில்லை. சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே எதிராளியைக் கொன்று தீர்க்கும் பணியை எதற்காக இவர்கள் ஏற்றார்கள் என்பது திரைக்கதை அவிழ்க்கும் புதிர்களில் ஒன்றாக இருக்கும்.

இந்தப் படங்களுடன் ‘ஸ்விங்’ (Swing), ‘லூப்’ (Loop), ‘தி பிளாக் மம்மீஸ் கர்ஸ்’ (The Black Mummy’s Curse) ஆகிய ஐந்து திரைப்படங்களை இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள ஹங்கேரி தகவல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் ஹங்கேரி படவிழாவில் இன்றும் நாளையும் சென்னை ரஷ்யக் கலாச்சார மையத் திரையங்கில் மாலைப் பொழுதுகளில் காணலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in