

புதுடெல்லி முதல் பொள்ளாச்சிவரை நாட்டின் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாகச் சமூகத்தில் பொங்கி எழும் விவாதங்கள் பலவும், சகலத்தையும் அலசிவிட்டுக் கடைசியில் ‘பாலியல் கல்வி தேவை’ என்பதாக முடிகின்றன. பாலியல் கல்வியின் போதாமையே பாலியல் வறட்சி, பாலினச் சமத்துவமின்மை சார்ந்த அனைத்துச் சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணமாகின்றன.
பாலியலைப் புனிதப் பசுவாக்குவதும், அனைத்தையும் தானாக அறிந்துகொள்ளட்டும் என்று ஒதுங்கிக்கொள்வதும் பாலியல் குற்றங்களைச் சமூகத்தில் அதிகரிக்கவே செய்கின்றன. சக வயதினரின் தவறான வழிகாட்டுதல், எளிதில் அணுகக் கிடைக்கும் இணையம் என இளம் வயதினர் தானாகக் கற்றுக்கொள்ளும் இடங்களெல்லாம் அவர்களின் தடுமாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.
நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட பிரிட்டிஷ் இணையத்தொடரான ‘செக்ஸ் எஜுகேஷன்’ கடந்த 2 மாதங்களாகப் பல்வேறு நாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு முன்பாக இந்தியத் தம்பதியர் பலரை அழைத்து பாலியல் சார்ந்த வினாக்களை எழுப்பி அவர்களின் சொதப்பல் மற்றும் வேடிக்கையான பதில்களையே விளம்பரமாக நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது.
திறந்த கலாச்சாரம் கொண்ட இங்கிலாந்து பின்னணியிலான இத்தொடரின் பல அம்சங்கள் இந்தியர்களுக்கு உவப்பாக அமையாது போகலாம். ஆனால், இணையத்தொடரின் அடிப்படையான கருத்துகள் பலவும் நாடு, கலாச்சாரம், நம்பிக்கைகளுக்கு அப்பால் இளம் தலைமுறையினருக்குச் சென்று சேர்ந்தாக வேண்டியவை.
பதின்ம வயதினருக்கு எழும் உடல், மனம், பாலியல் சார்ந்த தடுமாற்றங்களின் வழியாக அனைத்து வயதினருக்குமான பாலியல் கல்வியை நகைச்சுவையாக வழங்குகிறது ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடர். பள்ளி மாணவர்கள் சிலரை முன்வைத்து அவர்கள் இடறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்துத் தொடர் செல்கிறது.
பள்ளியில் சக மாணவ மாணவியருடன் பழகுவதில் தடுமாறும் ஒரு மாணவனுக்கு, அந்த வயதுக்கே உரிய பாலியல் சங்கடங்கள் முளைக்கின்றன. அவனுடைய தாய் ஒரு ‘செக்ஸ் தெரபிஸ்ட்’ என்பதாலும், வீட்டின் ஒரு பகுதியாக அவரது அலுவலக அறை செயல்படுவதாலும் பாலியல் ஐயங்கள் சார்ந்த பலவற்றையும் செவி வழியாக மாணவன் கற்றுத் தெளிகிறான்.
தன் தாய் ஒரு ‘செக்ஸ் தெரபிஸ்ட்’ என்பதை நெருங்கிய நண்பன் தவிர்த்து சக மாணவர்களிடம் தெரிவிக்காது மறைக்கிறான். ஆனபோதும் அசந்தர்ப்ப தினமொன்றில் மாணவனின் குட்டு உடைபடுகிறது. ஆனால், அவன் பயந்ததுபோல் கேலி, கிண்டல் கிளம்பவில்லை. மாறாக, பள்ளியின் மாணவப் பிரபலமாக உயருகிறான்.
தாய் மூலமாக அவன் அறிந்திருந்த பாலியல் கல்வி, சக மாணவர்களுக்கான அதிகாரபூர்வமற்ற செக்ஸ் தெரபிஸ்டாக அவனுக்கு அங்கீகாரம் சேர்க்கிறது. பள்ளி மாணவ மாணவியர் பலரும் தங்களது பாலியல் சந்தேகங்கள், எதிர் பாலினத்தருடனான சங்கடங்களைக் கட்டண கவுன்சிலிங்காகப் பெறுகிறார்கள்.
இந்தக் கதையின் ஊடாக இளம் வயது ஆண்-பெண் ஈர்ப்பு, பாலியல் ஐயங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், மாறும் பாலீர்ப்புகள் எனச் சகலத்தையும் விவாதிக்கிறார்கள். இந்த வகையில் இளம் வயதினர் அறிந்துகொண்டேயாக வேண்டிய பாலியல் கல்வியைப் போதனையாக அல்லாது இயல்பாக அறிந்துகொள்ளச் செய்கிறார்கள்.
இளம் வயதினர் மட்டுமன்றி அவ்வயதினரைக் கையாள்வது குறித்து, மூத்த தலைமுறையினருக்கான வழிகாட்டுதல்களையும் இந்தத் தொடரில் காணலாம். செக்ஸ் தெரபிஸ்டாகவும், விவாகரத்தான தாயாகவும் தோன்றும் ஜிலியன் ஆண்டர்சன் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் அவற்றை வெளிப்படுத்துகிறார்.
பள்ளி மாணவர்களாக இங்கிலாந்துக்கு அப்பால் கறுப்பினத்தவர், ஆசிய சமூகம் எனப் பல்வேறு பின்னணிகளில் மாணவர்களை முன்னிறுத்தி அவர்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளின் வழியேயும் பாலியல் அறிவை அலசுகிறார்கள்.
தன்பாலீர்ப்பு, உறவில் திருப்தி, எதிர் பாலினத்தவரின் அங்கீகாரத்துக்காகத் தடுமாறுவது, பாலியல் தொற்று நோய்கள், இளம்வயது கர்ப்பம், போதைப் பொருட்கள் என இளம் வயதினர் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளையும் தொட்டுச் செல்கிறார்கள்.
தொடரின் பாலியல் காட்சிகள், அப்பட்டமான அவயங்கள், மருத்துவ உண்மைக்கான விளக்கங்கள் எனப் பலதும் முகத்தில் அறைவதாகத் தோன்றலாம். அந்த வகையில் தொடரின் ஆரம்ப அத்தியாயங்கள் பார்வையாளருக்கு அதிர்ச்சியாக அமையக்கூடும். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் கிடைக்கும் பாலியல் விழிப்புணர்வு பார்வையாளரை இயல்பாக்கிவிடும். இதுபோன்றதொரு நெருக்கடியும் குற்ற மனப்பான்மையும் தராத நெகிழ்வான பாலியல் கல்வி தமிழிலும் கிடைக்காதா என்ற ஏக்கத்தையும் இந்தத் தொடர் நிறைவில் ஏற்படுத்தும்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com