

‘ஹெல்பாய்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு மூன்றாவதாகத் திரைக்கு வரும் ஹாலிவுட் திரைப்படம் மீண்டும் ‘ஹெல்பாய்’ (2019) அதே தலைப்பைச் சூட்டிக்கொண்டு வெளியாவிருக்கிறது.
அமெரிக்க காமிக்ஸ் வரிசையில் புகழ்பெற்ற ‘டார்க் ஹார்ஸ் காமிக்ஸ்’ கதாபாத்திரம்தான் இந்த ஹெல்பாய். காமிக்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான சூப்பர் ஹீரோ. ராட்ஷச தேகம், சிவந்த நிறம், முன் நெற்றியில் அறுபட்ட கொம்புகள், பாறை வலது கரம் எனப் பயமுறுத்தும் தோற்றத்துடன் முன்கோபியாகவும் எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் தோரணையுமாக வலம் வருபவன் ஹெல்பாய்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிக்களால் நரகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகச் சொல்லப்படும் கதாபாத்திரம். இவனது பின்னணிக் கதைகள் பல அனிமேஷன் திரைப்படங்களாகவும் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் ‘ஹெல்பாய்’ (2004), ‘ஹெல்பாய் 2: தி கோல்டன் ஆர்மி’ (2008) போன்றவற்றின் வரிசையில் மூன்றாவதாகவும் ரீபூட் பதிப்பாகவும் வெளியாகிறது 2019-ன் ஹெல்பாய்.
முதலிரு ‘ஹெல்பாய்’ படங்களை இயக்கிய கியர்மோ டெல் டோராவுக்குப் பதிலாக மூன்றாவது ‘ஹெல்பாய்’ படத்தின் இயக்குநராக நெய்ல் மார்ஷல் நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியான ஹெல்பாய் நடிகர் ரொனால்ட் பெர்ல்மன் நடிக்க மறுக்கவே புதிய ஹெல்பாயாக டேவிட் ஹார்பர் அறிமுகமாகிறார்.
இப்படத்தில் பிரிட்டிஷ் சூனியக்கார ரத்த ராணியான நிமோவை ஹெல்பாய் எதிர்கொள்வதும் இருவருக்கும் இடையிலான இதுவரை வெளிப்படாத உறவும் சொல்லப்படுகின்றன. வழக்கமான மாயாஜால உலகத்தின் பயமுறுத்தும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் உதவுவதற்காக ஹெல்பாய் தனது உச்ச சாகசங்களை அரங்கேற்றுவது, அடுத்த தலைமுறைக்கான வி.எஃப்.எக்ஸ் காட்சிகளாகப் படத்தில் இடம்பெறுகின்றன.
முதலிரு படங்களைப் போலவே ஹெல்பாய் 3 படத்தின் கதையும் மைக் மிக்னோலாவின் காமிக்ஸ் படைப்புகளைத் தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஹெல்பாய் 3’ ஏப்ரல் 12 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.ஹாலிவுட் ஜன்னல்முன்னோட்டத்தைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள்: