

இப்போதெல்லாம் வெளி நாட்டுப் படங்களை காப்பியடிப்பதைவிட அதன் மறு ஆக்க உரிமையை வாங்கிவிடுவது நல்லது என்று பலரும் நினைக்கிறார்கள். ‘பிங்க்’ திரைப்படத்துக்குப் பின், அமிதாப் பச்சன் – தாப்ஸி பன்னு இணைந்து நடித்திருக்கும் ‘பத்லா’ (பழி) அப்படியொரு படம்தான்.
‘தி இன்விசிபில் கெஸ்ட்’ (The Invisible Guest) என்ற ஸ்பானியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான மறு ஆக்கம். ஸ்காட்லாந்து தேசத்தின் கிளாஸ்கோ நகரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. ‘கஹானி-2’ திரைப்படத்துக்குப் பின், இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கியிருக்கும் படம். இவற்றுடன் திரில்லர் வகை என்ற காரணத்துக்காகவும் எதிர்பார்க்கப்பட்டது.
வெற்றிகரமான இளம் தொழிலதிபரான நைனா (தாப்ஸி) மீது காதலர் அர்ஜுனைக் (டோனி லுக்) கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. நைனாவின் நண்பரும் வழக்கறிஞருமான ஜிம்மி (மானவ் கவுல்), இந்தக் கொலை வழக்கிலிருந்து நைனாவை விடுவிக்கும் பொறுப்பை முன்னணி வழக்கறிஞர் பாதல் குப்தாவிடம் (அமிதாப் பச்சன்) ஒப்படைக்கிறார். இந்தக் கொலைப் புதிரை விடுவிக்கும் பின்னணி நிகழ்வுகள்தாம் ‘பத்லா’.
இயக்குநர் சுஜாய் கோஷ், இந்திய ரசிகர்களுக்காகத் திரைக்கதை சட்டகத்தைத் தாங்கி நிற்கும் முக்கியக் கதாபாத்திரங்களின் பாலினத்தை மாற்றியிருக்கிறார். மகாபாரதத்திலிருந்து சில மேற்கோள்களைப் பயன்படுத்தியிருக்கிறார். மற்றபடி, பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அசல் திரைக்கதையையே படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
கொலையாளியாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நைனாவுக்கும் அவரது தரப்பு வழக்கறிஞரான பாதலுக்கும் இடையே நடக்கும் கொலையின் பின்னணி சாத்தியங்கள் பற்றிய உரையாடல்தான் படத்தை நகர்த்துகிறது. இந்த உரையாடல் தொடரத் தொடர வழக்கறிஞரின் கோணத்திலிருந்தும் கொலைக் குற்றத்தை மறுக்கும் நைனாவின் கோணத்திலிருந்தும் காட்சிகள் விரிகின்றன.
இந்த இரண்டு கதாபாத்திரங்களின் பெரும்பகுதியான திரை இருப்பு தான் படத்தின் முக்கிய அம்சம். அமிதாப்-தாப்ஸி இருவரும் தங்கள் தேர்ந்த நடிப்பால், நமக்கு திரில்லர் திரை அனுபவத்தை தர முயன்றிருக்கிறார்கள். “உன் கதையில், யார் வேண்டுமானாலும் எப்போது எதுவாக மாற வேண்டுமோ அப்போது அதுவாக மாறிவிடுகிறார்கள்” என்று சொல்லி, பாதல் குப்தா எரிச்சலடையும்போது, “என் கதையிலிருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதற்காக நான் உங்களுக்குப் பணம் அளிக்கவில்லை” என்று பதிலடி கொடுக்கிறார் நைனா.
இவர்கள் இருவருக்கும் இடையில் இதுமாதிரி நடக்கும் சாமர்த்தியமான உரையாடல் பல இடங்களில் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் அம்ரிதா சிங், டோனி லுக்கின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
ஆனால், திரில்லர் படமாக இருந்தாலும் கொலையை யார் செய்திருப்பார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதெல்லாம் பார்வையாளர்களுக்குப் பெரிய கடினமான விஷயமாக இல்லை. அத்துடன், ஸ்மார்ட்போன்களை வெறும் நேரத்தைக் கணிப்பதற்காக மட்டும் பயன்படுத்துவது, அந்தக் காலத்து ‘ரெக்கார்டிங்’ கருவிகள், ஓட்டல்களில் சிசிடிவி கேமரா என்ற ஒன்று இருப்பதை மறந்து காட்சிகளை அமைத்திருப்பது போன்ற தர்க்கம் பிசகிய அம்சங்கள் படத்தைப் பலவீனப்படுத்தியிருக்கின்றன. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியிலும் போதுமான நியாயத்தைச் செய்ய இயக்குநர் தவறியிருக்கிறார்.
‘கஹானி’, ‘கஹானி-2’ போன்ற படங்களில் சுஜாய் கோஷ் காட்சிப்படுத்தியிருந்த திறமையான திரில்லர் அம்சங்களை ‘பத்லா’வில் பார்க்க முடியவில்லை.
அவிக் முக்கோபாத்யாய் கேமரா, கிளாஸ்கோ நகரத்தை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மோனிஷாவின் படத்தொகுப்பு, கிளின்டன் செரெஜோவின் இசை ஒரு திரில்லர் படத்துக்கான உணர்ச்சியுடன் அமைந்திருக்கின்றன. இறுதியில், அமிதாப்-தாப்ஸி இருவரின் நடிப்பு மட்டும்தான் படத்தின் அடித்தளமாக எஞ்சி நிற்கிறது.