

அந்தப் படத்தின் இசை வெளியீட்டில் வெள்ளாடு ஒன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டது. அந்த ஆட்டுக் கிடாயின் முன்னிலையில்தான் அந்தப் படத்தின் இசை வெளியிடப்பட்டது. இது ஏதோ தேவர் பிலிம்ஸ், ராம.நாராயணன் பாணியில் விலங்குகளைச் சாகசக் கதாபாத்திரமாக்கி எடுக்கப்பட்ட படமல்ல. எவ்விதச் சாகசமும் செய்யாமல், மவுன சாட்சியாக ஒரு ஆடு படம் முழுவதும் வந்த அந்தப் படம், ‘ஒரு கிடாயின் கருணை மனு’.
நட்சத்திரங்களுக்காக வலிந்து உருவாக்கப்படும் வெகுஜனத் தமிழ் சினிமாவில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ வழக்கொழிந்துவரும் கலாச்சார நிகழ்வு ஒன்றைக் கதைக்கருவாக மீட்டுருவாக்கம் செய்த தனித்த படைப்பு. ‘ஊரோடு ஒத்துப்போ’ என்பது தமிழ்க் கிராமிய வாழ்வில் முக்கியமான கூறு. ‘ஊருக்குப் பயந்து வாழ்வதும்’, ‘ஊரோடு ஒத்துப்போவதும்' இன்று வழக்கொழிந்து வருகின்றன. நாட்டார் தெய்வங்களை வழிபடுவதும் கொடை விழாக்கள் எடுப்பதும் ஊரை ஒற்றுமையாக வைத்திருக்க உதவிய பண்பாட்டுக் கருவிகள்.
இதன் ஒருபகுதியாகக் குலதெய்வக் கோயிலுக்கு ஊரோடு கூட்டமாகச் சென்று ‘கிடா வெட்டு’ நடத்துவதும் கிராமிய வழிபாட்டுக் கலாச்சார நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்று குலதெய்வக் கோயிலுக்குத் தனித்தனிக் குடும்பங்களாகச் செல்லும் வழக்கம் உருவாகிவிட்டது. ஊரோடு சென்று குலதெய்வத்தைக் கொண்டாட்டமாக வழிபடும் நிகழ்வை, நினைவூட்ட முயன்று வெற்றிபெற்றிருக்கிறார் புதிய தலைமுறை இயக்குநரான சுரேஷ் சங்கையா.
39 கதாபாத்திரங்கள்
படத்தின் தலைப்பில் ஆட்டுக்கிடாயின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அது அந்த ஆட்டின் கதை அல்ல. ஆட்டுக் கிடாயைப் பலியிட்டுக் குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்த லாரியில் கிளம்பும் ஊர்மக்கள், பயண வழியில் கொலைப்பழி ஒன்றில் சிக்கிக்கொள்கிறார்கள். அப்போது அவர்களிடம் தொற்றிக்கொள்ளும் பதற்றத்திலும் அணுகுமுறையிலும் சுயநலம் முகம் காட்டுகிறது. சிக்கலிலிருந்து மீள, அவர்கள் செய்யும் முயற்சிகளை மிகையின்றிச் சித்தரிக்கும் திரைக்கதை, 39 கதாபாத்திரங்களையும் அதனதன் இயல்பில் அப்படியே உலவவிடுகிறது. இந்தப் படத்தில் விதார்த் என்ற கதாநாயக நடிகரும் உண்டு.
ஆனால், படத்தின் கதாபாத்திரங்களில் ஒருவராகக் கதையோட்டத்தில் அவரும் கலந்துவிடுகிறார். சுயநலம் என்று வரும்போது அது மனித உயிராக இருந்தாலும் விலங்குகள் பறவைகள் உயிராக இருந்தாலும், உயிரின் மதிப்பை மறந்துவிடும் மனித இயல்பை, இதில் மிக இயல்பாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர்.
மறைமுக நினைவூட்டல்
தாங்கள் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்டதாகக் கருதும் கிராமவாசிகள், அதை மறைக்கச் செய்யும் குளறுபடிகள் சுயநலத்தின் குற்றமாக மாறுவதை மெல்ல மெல்ல விடுவித்துக்காட்டுகிறது திரைக்கதை. இதற்காக அவர்கள் நான்கு ஆண்டுகள் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. குலதெய்வக் கோயிலுக்குப் பயணித்த லாரியில் வந்து விழுந்தவன், காயப்படாமல் இறந்துவிட்ட நிலையிலும் அவன் இறக்கக் காரணமாக இருந்தது லாரியா அவன் சாப்பிட்டிருந்த விஷமா என்பதைக்கூட அறிந்து தெளிய முடியாத பதற்றத்தில், பிணத்தை மறைத்து வைக்க முயல்வதிலிருந்து தொடங்கும் திரைக்கதையின் பயணத்தில், பரபரப்புக்கான மலிவான திருப்பங்கள் கையாளப்படவில்லை.
‘ஒரு கிடாயின் கருணை மனு’வில் வரும் நடுவன்பட்டி கிராமம், அசலான, இயல்பான மனிதர்கள் உலவும் சினிமா ஜோடனைகள் அற்ற தமிழகக் கிராமம்.
ஒரு விபத்து கொலை வழக்காக மாறி நிற்பதன் வழியே, இரு கிராமங்களின் கதையை, அந்தக் கிராமங்களில் வாழும் மனிதர்களின் கதையை, அவர்களது நாட்டார் தெய்வ வழிபாட்டை, அதிலிருந்து நீங்க வேண்டிய பழமைகளை, வெள்ளந்தித்தனத்துக்கு நடுவே வெளிப்படும் சுயநலத்தை, பொறுப்பேற்காமல் நழுவி ஓடும் சாமானியர்களின் உலகத்தை எல்லாம் ஒரு தனித்துவ சினிமா அனுபவமாக்கிவிடும் படைப்பாக இப்படம் உள்ளது.
நூறு பேர் கேட்ட கதை
நட்சத்திர நடிகர்களுக்குக் கதை செய்து இயக்குநர் ஆகத் துடிப்பவர்கள் அதிகமும் நடமாடும் திரையுலகில், இதுபோன்றதொரு கதையைப் படமாக்க முயன்றபோது, சுரேஷ் சங்கையாவுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இருந்திருக்குமா? “உதவி இயக்குநராக வேண்டும் என்று முயன்றபோது ஒளிப்பதிவாளர், இயக்குநர் மணிகண்டனிடம் எளிதாகச் சேர்ந்துகொள்ள முடிந்தது. அவர் குறும்படங்களை இயக்கிக்கொண்டிருந்த நாட்களிலிருந்து பணியாற்றத் தொடங்கினேன். அவரிடம் எனக்குப் பெரிய சுதந்திரவெளி இருந்தது.
ஆனால், எனது கதைக்கான தயாரிப்பாளரைத் தேடி அடையும் காலம்தான் எனக்குப் போராட்டமாக இருந்தது. இந்தப் படத்தின் கதையைக் குறைந்தது நூறு பேரிடமாவது கூறியிருப்பேன். ஆனால் பலர், ‘ஹீரோ, ஹீரோயின் மீது கதை செல்லவில்லையே’ என்றார்கள். அவர்கள் அதிகமும் பார்த்து பழக்கப்பட்ட படங்களின் கதைசொல்லலை மீறிக்கொண்டு வெளியே நிற்கும் கதைகள், அந்நியமாகத் தோன்றுகின்றன. அவற்றில் இயல்பான நகைச்சுவை இழையோடினாலும் கதை நன்றாக நகர்ந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு வாய்க்கவில்லை.
இறுதியில் என்னுடைய இயக்குநர் மணிகண்டன், ‘ஈராஸ்’ என்ற பெரிய நிறுவனத்துக்கு எனது கதையைப் பரிந்துரைத்ததால் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ சாத்தியமானது” எனும் சங்கையா, ஒரு இலக்கிய வாசகர். “புனைவெழுத்தை வாசிப்பதன் வழியே ஒரு இயக்குநர் தனது காட்சிமொழியை வளர்த்துக்கொள்ள முடியும். படங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதைவிட ஒரு நாவலை வாசிப்பதன் மூலம் கற்றுக்கொள்வதே அதிகமாக இருக்கிறது” என்று உறுதியாக நம்புகிறவராக இருக்கிறார்.
வாசிப்பும் அவதானிப்பும்
“சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் பேசிய ஒரு எழுத்தாளர், தமிழ் சினிமாவில் நான்கு விதமான படங்களே ஆதிக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். ‘ஒன்று மிகையான கற்பனைகள் கதைகளாக இருக்கின்றன. இரண்டாவது மாஸ் கதாநாயகர்களுக்காகக் கதை எழுதுகிறார்கள். மூன்றாவதாக ஒரு நாயகன், நாயகி அவர்களுக்குள் இருக்கக்கூடிய காதல் போராட்டம். அடுத்து நட்பும் அதற்குள் முளைக்கும் செயற்கையான சிக்கல்களும் என யதார்த்தத்துக்குள் அடங்காத இந்த நான்குக்கும் வெளியே உங்கள் படம் இருந்தது.
அதில் நம் அனைவரது வாழ்க்கைமுறையும் இருந்ததால்தான், உங்கள் படம் பரவலாகப் பிடித்துப்போனது’ என்றார். எனக்குக்கும்கூட வாழ்க்கைமுறையைப் பேசும் படங்கள்தாம் அதிகமாகப் பிடிக்கின்றன. இரானியப் படங்கள் என்மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றன. என்றாலும் வாழ்க்கைமுறையைப் பேசும் எந்த மொழிப் படத்தையும் விரும்பிப் பார்ப்பேன்.
தமிழில் வாழ்க்கைமுறையைப் பேசும் படங்கள் அதிகரித்திருக்கின்றன. சில படங்களைப் பார்க்கும்போது ‘இப்படிச் சொல்லியிருக்கலாமே, இந்தக் காட்சியை இப்படித்தானே சித்தரித்திருக்க வேண்டும்’ என்ற எனது கண்ணோட்டத்தில் பார்ப்பதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லலாம்” என்றுகூறும் சுரேஷ் சங்கையா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டி.கரிசல்குளம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கணினி அறிவியல் பட்டம் பயின்றிருக்கிறார். இவருடைய தந்தை சங்கையா ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை ஊழியர். கடந்த ஆண்டு தனிஷ் பாத்திமாவைக் கரம் பற்றிய சுரேஷ் சங்கையாவுக்கு, பாட்டி காளியம்மாள் என்றால் உயிர். அவரிடம் கேட்டு வளர்ந்த நாட்டார் கதைகள், திரையுலகை நோக்கி தான் வந்ததற்கான காரணங்களில் ஒன்று என்கிறார்.
சுரேஷ் சங்கையா அடுத்து இயக்கவிருப்பதும் தமிழ் வாழ்க்கைமுறை சார்ந்த படம்தான். ஆனால், அதில் கலந்திருக்கும் ஓட்டு அரசியலை தனக்கேயுரிய கதைக்களத்தில் இயல்பாய்ப் படரும் நகைச்சுவையின் துணையுடன் காட்சியாக்கத் தயாராகி வருகிறார்.
தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in