

கடந்த இரு ஆண்டுகளில் ‘கடைக்குட்டிச் சிங்கம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொடுத்திருக்கும் கார்த்தி, 2019-ல் ‘தேவ்’ படத்தின் மூலம் மூன்றாவது வெற்றிக்குக் குறிவைத்திருக்கிறார். இந்தப் படத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
‘வந்தோம், நடித்தோம், சென்றோம் என்று இல்லாமல் காதல் காட்சிகள், நடிப்பை வெளிப்படுத்தக் கிடைத்த இடங்கள் என இரண்டு வகையிலும் தனது முழுத்திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்’ என்று ரகுல் ப்ரீத் சிங்கைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ரஜாத் ரவி. கார்த்தி – ரகுல் ஜோடி மேலும் இரண்டு படங்களில் இணைய இருக்கிறார்களாம்.
வெடித்த வசந்தபாலன்!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்திருக்கும் வசந்தபாலன் சமீபத்தில் இசை வெளியீட்டுவிழா ஒன்றில் பேசும்போது கோபத்தில் வெடித்திருக்கிறார். “சமீபத்தில் வெளியான ‘பேரன்பு’, ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிவிட்டன. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் துப்பறிவாளனாக இருக்கிறார். இரும்புத்திரை கொண்டு அடக்குகிறார், ஆனால், தமிழ் ராக்கர்ஸைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளை என்னுடைய படமும் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டால் எங்கே போவது?
ஏன் தெலுங்கு, மலையாளப் படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியாவதில்லை. தமிழ் ராக்கர்ஸை ஒழிப்போம் என்று கூறித்தானே பதவிக்கு வந்தீர்கள்?” என்று காட்டமாக அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு விஷால் பதிலளிக்கும் விதமாக “தமிழக அரசு நினைத்தால் தமிழ் ராக்கர்ஸை ஒழித்துவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.
பார்த்திபன் கிளைமாக்ஸ்!
‘அழகி’, ‘ஆட்டோகிராஃப்’ வரிசையில் கண்ணியமான காதல் கதையாக வெளியான ‘96’ படத்துக்கு சமீபத்தில் 100-வது நாள் விழா கொண்டாடப்பட்டது. நாயகன் விஜய்சேதுபதி, நாயகி த்ரிஷாவுடன் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “தியாகராய பாகவதருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்திருக்காங்க. அவருக்குப் பிறகு, பெண்கள் மத்தியில் அப்படியொரு ஈர்ப்பு இருப்பது விஜய் சேதுபதிக்குத்தான். அதேபோல ஒரு சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா.
ஆனா, இந்தப் படத்துக்கு த்ரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான். அவங்க நடிச்சிருக்க மாதிரியே தெரியலை. ஒரு முறையாவது ராமும் ஜானுவும் கட்டி பிடிக்க மாட்டாங்களானு படம் முழுக்க ஆர்வமா இருந்தோம். ஆனா படத்துல நடக்கவே இல்லை. ஆனா அது இங்கே, இப்போ நடக்க இருக்கு" என்று கூறி விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்த பார்த்திபன். இருவரையும் ஒருமுறை கட்டிப்பிடிக்கும்படி கேட்டார்.
‘96’ படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே’ பாடலின் பின்னணி இசை ஒலிப்புக்கு நடுவே இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டனர். அப்போது விஜய்சேதுபதி “இதுதான் படத்துடைய க்ளைமாக்ஸ்” என்றார்.
அறிமுக நாயகன்
‘கயல்’ சந்திரன் நடிப்பில் வெளியான ‘ரூபாய்’ படத்தில் அவரது நண்பன் பாபுவாகப் படம் முழுவதும் வந்து கவனிக்க வைத்தார் கிஷோர் ரவிச்சந்திரன். கூத்துப்பட்டறை நடிகரான இவர், ‘அகவன்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் பிரபுசாலமனின் உதவியாளரான ஏழுமலை.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனந்தமங்கலம் என்ற கிராமத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் ஆயிரமாண்டு பழமையான பிரம்மாண்ட சிவன்கோவில் இருக்கிறதாம். அதுதான் கதைக்களம் என்கிறார் இயக்குநர். “ஒரு கோவிலையும் அதைச் சுற்றி வாழும் மனிதர்கள், கோவிலோடு தொடர்புடைய ஐதீகம், அமானுஷ்யம் என கதை மிரட்டும்” என்கிறார்.
‘தடம்’ தான்யா
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். படிப்புக்காக அவர் தொடர்ந்து நடிக்காமல் மாடலிங் மட்டும் செய்து வருகிறார். இதற்கிடையில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘தடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் மற்றொரு தான்யா. இவரது முழுப் பெயர் தான்யா ஹோப்.
பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தான்யா, 2015 மிஸ் இந்தியா போட்டியின் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தவர். அரை டஜன் கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்திருக்கும் இவர் “தமிழில் புகழ்பெற வேண்டும் என்பதே என் லட்சியம், ‘தடம்’ கொஞ்சம் தாமதமானலும் தப்பு பண்ணாது” என்கிறார் கன்னடம் கலந்த தமிழில்.