

‘வர்மா’ படத்துக்குப் பதிலாகத் தயாராகவிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மறு ஆக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அறிமுக இருக்கிறார் இந்தி நடிகையான பனிடா சந்து. கடந்த 2011-ல் வெளியான ‘ஏழாம் அறிவு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே.சந்திரன் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டிருக்கும் தமிழ்ப் படம் இது.
மோ(கா)தல் கதை
‘சீமராஜா’ எதிர்பார்த்த வெற்றியை எட்டாத நிலையில் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை நம்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மனோகராக சிவகார்த்திகேயனும் கீர்த்தனாவாக நயன்தாராவும் எலியும் பூனையுமாகச் சீறியிருக்கிறார்கள். மோதலும் காதலும் கொண்ட இந்த நகைச்சுவைப் படத்தின் டீசரை இதுவரை 50 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
பெண் தாதா!
தாதா என்றால் ஆண்களையே அதிகமும் காட்டிவரும் தமிழ் சினிமாவின் சட்டகத்தை உடைக்கவிருக்கிறதாம் தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமாரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' திரைப்படம். ஒரு பெண் கேங்ஸ்டரின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படத்தில் அந்தப் பெண் தாதா கதாபாத்திரத்தைத் துணிந்து ஏற்றிருப்பவர் சாய் பிரியங்கா ரூத்.