

இயக்குநர் ஆஷிக் அபுவின் வரவுக்குப் பிறகு மலையாள சினிமாவில் யதார்த்தவாதம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. அதன் மற்றொரு கிளையாக வந்திருக்கும் படம், ‘கும்பளங்கி நைட்ஸ்’. ஆஷிக் அபுவின் உதவி இயக்குநர் மது சி. நாராயணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.
சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி எனப் பெரும் இளம் நடிகப் பட்டாளத்துடன் ஃபஹத் பாசிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தின் பிரபலத் திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம்பலத்தின் மகள் அன்னா பென் நாயகியாக அறிமுகமாயிருக்கிறார். தமிழ் நடிகர்கள் ரமேஷ் திலக், ஷீலா ராஜ்குமார் ஆகியோரும் பங்களித்திருக்கிறார்கள்.
கும்பளங்கி, கொச்சிக்கு அருகிலுள்ள ஒரு கிராமம். மீன் பிடித் தொழிலையும் சுற்றுலாவையும் ஆதாரமாகக் கொண்ட இந்த ஊர்தான் கதையின் களம். இந்தப் பின்னணியில் குடும்பக் கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறது படம். மலையாளத்தின் தர்க்கோவ்ஸ்கி எனச் சிறப்பு அடையாளம் பெற்று விட்ட ஷயாம் புஷ்கரனின் கதை இது.
மேலோட்டமாகப் பார்த்தால் சினிமா பல காலம் சொல்லிச் சலித்த அண்ணன் - தம்பிக் கதைதான். ஆனால், அதை யதார்த்தத்துக்கு மிக அருகில் சென்று காட்சிப்படுத்தியிருப்பதன் மூலம் படம் தனித்துவம் பெறுகிறது. 70-80களில் மலையாள சினிமாக்கள் சித்தரித்த யதார்த்தத்தையும்விட நெருக்கமானது இது. இதை இரண்டாவது காலகட்ட யதார்த்த சினிமா எனலாம்.
அண்ணன் தம்பிகளுடன், அவர்கள் வசிக்கும் கதவுகளற்றதும் அந்தப் ‘பஞ்சாயத்தில் மிக மோசமான’துமான வீடும் ஒரு கதாபாத்திரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு சகோதரர்களில் இருவர் நன்மையின் பக்கமும் இருவர் தீமையின் பக்கமுமாக இருக்கிறார்கள்.
இந்தச் சகோதரக் குடும்பத்துடன் ஃபஹத் பாசிலின் குடும்ப உறுப்பினரான அன்னா பென் குறுக்கிடத் தொடங்கும்போது, சினிமாவும் அதன் கதாபாத்திரங்களும் நெகிழ்ந்து போகின்றன. அதற்கு முன்பு சினிமா வெளிப்படுத்திய கடினத்தன்மையும் தளர்ந்து மென்மையாகிறது. பெயர் சொல்லிப் பழக்கப்பட்ட தன் மூத்த அண்ணனை, ஷானுக்கு ‘அண்ணா’ என விளிக்க வேண்டிய நிர்க்கதியும் உண்டாகிறது.
இந்தச் சகோதரர்களில் கடைக் குட்டி வீட்டைவிட்டுச் சென்று கிறித்துவப் பள்ளியில் சேர்ந்துவிடுகிறான். கடைக்குட்டிக்கு அம்மாவின் நினைப்பு வந்து அவனை மூழ்கடிக்கிறது. அவன் வீட்டிலிருக்கும் மேரி மாதாவின் ஒளிப்படத்தைப் பார்த்துக்கொள்கிறான். படத்தின் இரண்டாம் பாதியில் தமிழ் நடிகை ஷீலா குழந்தை இயேசுவைக் கையிலேந்தி மேரியைப் போல் அந்த வீட்டுக்கு வருகிறாள். ஆண்களின் அந்த வீட்டுக்குள் பெண்கள் நடமாட்டம் தொடங்குகிறது.
படத்தின் அந்தப் பக்கத்தில் தன் முனைப்புள்ள ஃபஹத் கதாபாத்திரம், ஆண்களற்ற வீட்டுக்குள் மூத்த மருமகனாக நுழைகிறது. தனது அதிகாரத்தை நிலைநாட்ட ஃபஹத் ஒவ்வொரு காட்சியிலும் முயல்கிறார். அவருக்கு எதிராக உயர்ந்த கொசு மட்டையை அவர் தீயிட்டுக் கொளுத்தும் காட்சியில் அதிகாரத்தின்மீதான வேட்கையைப் படம் சித்தரிக்கிறது.
இந்த இரு குடும்பங்களும் சண்டை இட்டுக் கொள்ளும் இடத்தில் படம் ஒரு சாதாரண சினிமாவாகத் தெரிகிறது. ஆனால், அதன் விளைவைத் திரைக்கதை புத்திசாலித்தனமாகச் சொல்வதன் மூலம் இந்தப் படம் விசேஷமானதாகிறது.