ஹாலிவுட் ஜன்னல்: மார்வெலின் புது நாயகி

ஹாலிவுட் ஜன்னல்: மார்வெலின் புது நாயகி
Updated on
1 min read

கடந்த வருடம் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடிவார்’ படத்தின் இறுதியில் ‘கேப்டன் மார்வெல்’ குறித்த எதிர்பார்ப்புகளை விதைத்திருந்தார்கள். அவெஞ்சர்ஸ் வரிசையின் அடுத்த திரைப்படத்துக்கு முன்பாக

கேப்டன் மார்வெல்லின் புகழ்பாடும் முழுநீளத் திரைப்படமாக மார்ச் 8 அன்று வெளியாக உள்ளது ‘கேப்டன் மார்வெல்’.

மார்வெல் ஸ்டுடியோஸின் முதல் பெண் சூப்பர் ஹீரோ என்ற சிறப்பு அடையாளத்துடன் அறிமுகமாகிறார் கேப்டன் மார்வெல். படத்தின் கதை 90-களில் நடக்கிறது. பூமியைக் களமாகக் கொண்டு இருவேறு ஏலியன் குழுக்களுக்கு இடையிலான மிகப் பெரிய போர் நடக்கிறது. அப்போது போர் விமானியான கரோல் டான்வர்ஸ் என்ற பெண் அவற்றுக்கிடையே சிக்குகிறார். அந்நேரம், தனது தனிப்பட்ட சூப்பர் ஹீரோ சக்திகளை அவர் அடையாளம் காண்கிறார். அவெஞ்சர் ஹீரோக்களை ஒருங்கிணைக்கும் நிக் ஃப்யூரி இதில் கேப்டன் மார்வெல் உடன் பயணம் செல்கிறார்.

ட்ரெய்லர்கள் வாயிலாக கேப்டன் மார்வெலின் பஞ்ச் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே பிரபலமாகி உள்ளன. மேலும், புதிய சூப்பர் ஹீரோவின் விசேஷ சக்திகள், சாகச உத்திகள் குறித்து அறிந்துகொள்ள மார்வெல் காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூப்பர் மேன் போலவே வேகமாய்ப் பறப்பது, அயர்ன் மேன் போலவே முஷ்டியிலிருந்து பிழம்பால் தாக்குவது, கேப்டன் அமெரிக்காவைப் போலவே ஒண்டிக்கு ஒண்டி மோதுவது என அவெஞ்சர்ஸ் பரிவாரத்தின் வெற்றிடத்தைப் போக்கும் வகையில் தானைத் தலைவியாக கேப்டன் மார்வெல் காட்சியளிக்கிறார். ஆனால், வில்லாதி வில்லன் தானோஸை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பது அடுத்த அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில்தான் தெரியவரும்.

கேப்டன் மார்வெலாக பிரீ லார்சன் தோன்றுகிறார். சாமுவேல் ஜாக்சன் உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். நிஜ ஜோடியான அன்னா பிரைடன் - ரையன் பிளாக் இயக்கி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in