ஹாலிவுட் ஷோ: பலூன் ஹீரோ பராக்!

ஹாலிவுட் ஷோ: பலூன் ஹீரோ பராக்!
Updated on
1 min read

முதலில் இரு பரிமாண கார்ட்டூன் அனிமேஷன் படங்கள். பிறகு முப்பரிமாண லைவ் அனிமேஷன் படங்கள். இவை இரண்டிலுமே முத்திரை பதித்த முன்னோடி நிறுவனம் வால்ட் டிஸ்னி. மிக்கி அண்டு மின்னி மவுஸில் தொடங்கி இவர்கள் உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் குழந்தைகளின் உலகில் ஹீரோவாக உலாவருகின்றன. இந்த வரிசையில் தற்போது இந்நிறுவனம் ‘பிக் ஹீரோ’ வைக் களமிறக்க உள்ளது.

எட்டடிக்கும் அதிகமான பிரம்மாண்டமான உயரம், பானை வயிரு எனப் பனிக் கரடி போல உருவம் கொண்ட ஒரு ரோபாதான் 'Big Hero 6' என்ற இந்தப் படத்தின் ஹீரோ. அதன் பெயர் பாய்மேக்ஸ். உருவம் பெரிதுதான். ஆனால் காற்றடித்தால் பறந்துபோய்விடுவது போன்ற பலூன் உடல். இன்னும் தெளிவாகச் சொன்னால் ‘வெடி’ படத்து விவேக் மாதிரி. இந்தப் பலூன் ரோபா, எப்படிப் பலமான ஹீரோவா மாறி எதிரிகளைப் பந்தாடுகிறது என்பதுதான் கதை.

அமெரிக்க கதைப் புத்தகமான மார்வல் காமிக்ஸின் ‘பாய்மேக்ஸ்’ கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பிக் ஹீரோ உருவாக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஹாமாடா என்ற 14 வயதுப் பையனின் நண்பன் தான் இந்த ரோபோ. பந்து வைத்துக் குழந்தை மாதிரி விளையாடிக்கொண்டிருக்கும் தன் செல்ல ரோபோவைப் பலசாலியாக மாற்ற அவன் முயல்கிறான்.

கீழே விழுந்துவிடும் பந்தை எடுக்கக்கூட முடியாமல் திணறும் உடல்வாகு கொண்ட அந்தப் பானை வயிறு ரோபோவுக்காக கம்ப்யூட்டரில் புதிய உடைக் கவசங்களை உருவாக்குகிறான் ஹாமாடா.

போர் வீரர்களின் கவசங்களைப் போல் இருக்கும் அதை அணிவித்ததும் பலூன் ரோபோ பயில்வான் போல் ஆகிவிடுகிறது. ஆனால் மறுபடியும் பழைய பொம்மை ரோபோவாக மாறிவிடுகிறது. பிறகு எப்படி பிக் ஹீரோ பலசாலி ஆனது, எதிரிகளைப் பழிவாங்குகிறது என்பதை காமெடியாகவும் த்ரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பைக் கிளம்பியுள்ள இந்த பாய்மேக்ஸ்தான் வரும் நவம்பர் மாதத்தில் கார்த்திகை பட்டாசு வெடிக்கக் காத்திருக்கும் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in