திரைப் பார்வை: பிரச்சாரப் புலியின் கர்ஜனை (தாக்கரே - இந்தி)

திரைப் பார்வை: பிரச்சாரப் புலியின் கர்ஜனை (தாக்கரே - இந்தி)

Published on

நந்தனார் முதல் நந்தமூரி தாரக ராமாராவ்வரை வாய்மொழி வரலாறும் சமகால வரலாற்று நாயகர்களும் சினிமாவுக்கான கதைப் பஞ்சத்தைப் போக்கும் வள்ளல்கள். ஓர் ஆளுமையைப் பற்றிய படத்தில், சுவாரசியத் துக்காகக் கற்பனைகள் கலப்பது தவறில்லை. ஆனால், அந்த ஆளுமையின் எல்லாக் குணநலன்களையும் சரிவிகிதத்தில் படம் பிரதிபலிக்க வேண்டும். நம்ப முடியாத புகழ்ச்சியால் காட்சிகள் நெய்யப்பட்டால், வெற்றுப் புகழ் மாலையாகத் தோற்கும். தாக்கரே திரைப்படம் எந்த வகையில் சேரும் என்பதைப் பார்ப்போம்.

லக்னோ நீதிமன்றத்தின் பால்தாக்கரே ஆஜர்படுத்தப்படுவதில் தொடங்கி, 1960 முதல் 90-கள் வரையிலான அவரது வாழ்வின் முக்கியத் தருணங்கள் நமக்குச் சொல்லப் படுகின்றன. ஃப்ரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரையும் வேலையை ராஜினாமா செய்வதில் தொடங்கி, மராட்டிய மாநிலத்தின் அன்றைய நிலைமை, மன்மரிக் பத்திரிகை தொடக்கம், சிவசேனா அமைப்பு தொடக்கம், கம்யூனிஸ்டுகளுடன் மோதல், மொரார்ஜி தேசாயுடன் கருத்து வேறுபாடு, காங்கிரஸ் கட்சியுடனான உறவு, அவசரநிலைப் பிரகடனத்தின்போது எடுக்கும் நிலைபாடு, மும்பைக் கலவரங்கள், பாபர் மசூதி இடிப்பு என அவர் கடந்துவந்த பாதைகளைச் சுற்றித் தான் கதை.

மராத்தியிலும் இந்தியிலும் வெளிவந்துள்ள இந்தப் படத்தின் கதையை எழுதியவர் சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா எம்பி, சாம்னா பத்திரிகையின் ஆசிரியர் சஞ்சய் ராவத். இயக்கியிருப்பவர் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியைச் சேர்ந்த அபிஜித் பன்சே.

கட்சிக்காரர்கள் கூடி கட்சித் தலைவர் பற்றிய படத்தை எடுத்தால் என்ன எடுப்பார்களோ அதைத்தான் இந்தப் படத்தில் செய்திருக்கிறார்கள். கறுப்பும் வெளுப்பும் நிறைந்தே இருந்த அவர்கள், தலைவரின் நிஜ வாழ்விலிருந்து விலகி, அவரை எதற்கும் துணிந்தவராக, சேவை அமைப்பு நடத்துபவராக, சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்பவராக, அரசின் ரிமோட் கண்ட்ரோலைக் கையில் வைத்திருப்பவராக, தன்னை ஹிட்லராகப் பிரகடனப்படுத்திக்கொண்டு கம்யூனிஸ்ட்களையும் மசூதிகளையும் களையச் சொன்னவராகச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஒரு கிரிக்கெட் ரசிகராக, காவல் துறை உயரதிகாரிகள்கூட உதவி கேட்க நெருங்கிச் செல்லும் ஒருவராக என அவருக்கு ‘நாயகன்’ பட பாணி புனித பிம்பத்தையும் படத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். இப்படிச் சொல்லப் படும் கதையானது முடிவில் தட்டையாகப் பார்வையாளரால் படத்துடன் ஒன்ற முடியாத திரைப்படமாக முடிந்துபோகிறது.

சில காலம் முன் சிவசேனா அமைப்பால் நவாஸுத்தின் சித்திக்கி நடித்து வந்த ‘ராம்லீலா’ நாடகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதே நடிகர் இப்படத்தில் தாக்கரேவாக நடித்துள்ளார். கர்வமான உடல் மொழியில் குரல் மாற்றிய உரை யாடலில் முத்திரை பதித்தாலும் அவ்வப்போது வரும் மண்ட்டோ உருவத்தோற்றமும் ஒட்டாத மூக்கும் அவரின் பங்களிப்பைக் குறைக்கின்றன.

நிகழ்கால நீதிமன்றக் காட்சிகள் மட்டும் வண்ணத்திலும் நினைவுகளாக விரியும் காட்சிகள் கறுப்பு வெள்ளையிலும் நல்ல ஒளியமைப் போடும் நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதீப் சட்டர்ஜி ‘எஜமான் காலடி மண்ணெடுத்து’ போன்ற புகழ் பாட்டெல்லாம் வைக்காமல் விட்டது நல்ல விஷயம்.

ஒரு திரைப்படத்தால் வெகு விரைவாகப் பிரச்சாரம் செய்து விடுவது இன்று அரசியல் கட்சிகளின் முக்கிய விளம்பர வகையாகவே மாறி வருகிறது. எது விளம்பரம், எது பிரச்சாரம், எது திரையனுபவம் என்பதைக் கண்டறிந்துகொள்ள வேண்டிய அன்னப்பறவைகளாக இருக்க வேண்டியது ரசிகர்களே.

தொடர்புக்கு: tottokv@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in