

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1964-ல் வெளியான படம் வேட்டைக்காரன். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகையர் திலகம் சாவித்ரி. இந்தப் படத்தில் எம்.ஆர். ராதா, அசோகன், நாகேஷ் என்று மிகப் பெரிய நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள். என்றாலும் படத்தில் முக்கியக் கதாபாத்திரமாக நடித்திருந்தது ஒரு சிறுத்தை.
படத்தில் சிறுத்தை வரும் எல்லாக் காட்சிகளிலும் அது செய்யும் புத்திசாலித்தனத்துக்காகவும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில், படத்தில் நடித்த அந்தச் சிறுத்தையை ஸ்டுடியோ உள்ளேயே சாவித்ரி வாக்கிங் கூட்டிச் சென்ற அபூர்வப் புகைப்படம் இது.
ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி முடித்திருக்கும் படம் பூலோகம். இந்தப் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. குத்துச்சண்டைப் போட்டியில் அவருடன் மோதியிருக்கிறார் ஹாலிவுட் பட வில்லன் நடிகரான நாதன் ஜோன்ஸ்.
ஏற்கனவே ‘பேராண்மை’ படத்தில் ஜெயம்ரவியுடன் மோதினார் மற்றொரு ஹாலிவுட் வில்லன் நடிகரான ரோலண்ட் கிக்கிங்கர். பேராண்மை படப்பிடிப்பு சமயத்தில் ரோலண்டைத் தனது வீட்டுக்கு அழைத்து, வேட்டி அணிய வைத்து விருந்து கொடுத்தார் ஜெயம் ரவி.
ஆனால் பூலோகம் படத்தில் சில தினங்களே நடித்த நாதன் ஜோன்ஸ் கடைசி நாள் படப்பிடிப்பிலிருந்து நேரே விமான நிலையம் புறப்பட்டார். இதனால் தனது அம்மா, அப்பாவைப் படப்பிடிப்புத் தளத்துக்கு அழைத்த ஜெயம் ரவி அவர்கள் கையால் நாதன்ஸ் ஜோன்ஸுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.