

“இயக்க வேலைகளையெல்லாம் முடிச்சுட்டு அன்னைக்கு வீட்டுக்கு வரவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயசுக் குழந்தை தேவியை எப்படியாவது காப்பாத்திவிட வேண்டும் என்ற செய்தியை மனைவி அலமேலு பார்த்துட்டு இருந்தாங்க. ஆனா மறுநாள் காலை எழுந்து செய்தி பாக்கும்போதும், அந்தக் குழந்தையை மீட்கும் போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. முதல்நாள் காலை ஏழு மணிக்கு விழுந்த குழந்தை, மறுநாள்வரை மீட்கப்படவில்லை.
என்னதான் நடக்குது எனப் பார்க்க உடனே அந்தக் கிராமத்துக்கு நேர்ல போயிட்டேன். அந்தக் குழந்தையை மீட்க அவர்களிடமிருந்தது வெறும் கயிறு மட்டும்தான். கடைசியில் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு குழந்தை தேவி சடலமாகத்தான் மீட்கப்பட்டாள். இது நடந்தது திருவண்ணாமலையில் உள்ள புலவன்பாடி எனும் கிராமத்தில். ஒரு குழந்தை கால் இடறி விழுந்துவிட்டாலே பெத்தவங்க மனசு துடிதுடித்துவிடும்.
ஆனா, நாடு வல்லரசு ஆகிடும் எனக் கனவு காணச் செல்லும் தேசத்தில், நாட்டின் எதிர்காலத் தூண்களான குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு உயிரின் விலையை மதிக்காத இந்த அரசு மீதான கோபமும் குழந்தைகள் மீதான ஆதங்கமும்தான் ‘அறம்’ படம் எடுப்பதற்கான அடிப்படை” என்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி நயினார் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர். தன்னுடைய முதல் படமான ‘அறம்’ மூலமாகவே, மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். பதினொன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் கோபி நயினாருக்கு, சினிமா மீதான ஆர்வம் தூண்டப்படக் காரணமாக இருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.
“இயக்குநர் மகேந்திரன் எடுத்த ‘நண்டு’ படம்தான் சினிமா மீதான ஆசையைத் தூண்டிவிட்டது. அப்போ எட்டாவது படிச்சிட்டுருந்தேன். அதன் பிறகு என்னை ரொம்பப் பாதித்த ‘பதினாறு வயதினிலே’, ‘தூறல் நின்னுபோச்சு’ படங்கள் சினிமாவை நோக்கி என்னை நகர்த்தின. மகேந்திரன் சார் படங்களின் மூலமாதான் நான் சத்யஜித் ராயின் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். அவர் வழியா உலக சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன்” என்கிறார்.
“சினிமா ஆசையின் பின்னால் ஓடிக்கெண்டிருந்த என்னை முடக்கியது சாதிய ஒடுக்குமுறைதான். எங்கள் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள், மக்கள் அரசியல் பணியில் என்னை ஈடுபட வைத்தன. அதைத் தொடர்ந்து இருபது ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களுக்காக போஸ்டர் ஒட்டியிருக்கிறேன். போராடி சிறைக்குச் சென்றிருக்கிறேன்” என்கிறார்.
போராட்டக் காலத்தில்தான் தன் மனைவி அலமேலுவைச் சந்தித்திருக்கிறார்; சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட கோபி, அலமேலு தம்பதிக்கு மூன்று பிள்ளைகள்.
கனன்றுகொண்டிருந்த ஆசை
மக்கள் பணியிலும் விவசாயத் தொழிலிலும் ஈடுபட்டிருந்த கோபி நயினார், சினிமாத் துறையில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. “யாரிடமும் உதவியாளராகச் சேர்ந்து சினிமாவைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. உதவியாளராகச் சேர்ந்தால் சினிமாவில் எல்லா நாளும் வேலைபார்க்க வேண்டும். ஆனால், அரசியல் பணிக்கும் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் அப்படி என்னால் ஈடுபட முடியவில்லை” என்கிறார். ஆனால், சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசை தன் மனத்தில் கனன்றுகொண்டே இருந்தது என்று கூறும் கோபியின் உள்ளத்தில் இந்தக் கனலை அணையாமல் பார்த்துக்கொண்டவை. சினிமா புத்தகங்களும் பிற மொழி சினிமாக்களும்தான்.
சிறுமி தேவியின் மரணம் என்னைப் பாதித்தது. அதைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்றுவந்தேன். இதுபோல ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளாக இருந்தாலும் சரி, சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும் சரி, அரசு எதுவும் செய்யாமல் இருப்பதைப் பொதுத்தளத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற பின்னனியில் உருவாக்கிய கதையே ‘அறம்’ ” என்கிறார் கோபி நயினார்.
‘மக்கள்தான் அரசாங்கம்’
தமிழ் சினிமாவில் தனி மனிதரை முன்னிறுத்தியே பெரும்பாலான படங்கள் வெளிவருகின்றன. ஆனால் ‘அறம்’ படத்தின் திரைக்கதையோ சமூகத்தில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் நிறைவேறாக் கனவுகள், தண்ணீர்ப் பிரச்சினை, சாலை வசதியின்மை, அரசியல், அதிகாரிகளின் மெத்தனப் போக்கு ஆகியவற்றை மையமாகக்கொண்டிருந்தது. அதில் மக்கள் நலனை முன்னிறுத்தும் மாவட்ட ஆட்சியரான மதிவதனி கதாபாத்திரம், தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இயக்குநர் கோபி சொல்லியிருந்தார்.
படத்தில் மதிவதனி உயர் அதிகாரியால் விசாரிக்கப்படும் காட்சியில், “ஒரு அரசாங்க அதிகாரியாக இருந்துகொண்டு அரசாங்கத்தையே எதிர்த்துப் பேசுறீங்க, Are you for the government or against the government?” எனக் கேட்பார் உயரதிகாரி. அதற்கு மதிவதனி “நான் அரசாங்கம்னா, மக்கள்னு நினைக்கிறேன். நீங்க அரசாங்கம்னு எதைச் சொல்றீங்க?” என எதிர்க் கேள்வி கேட்பார். இந்த வசனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஓட்டுப் போட்டுவிட்டால் ஆள்பவர்கள்தான் அரசாங்கம் என்றாகிவிட்ட நிலையில், இல்லை மக்கள்தான் அரசு எனத் தூங்கிக்கொண்டிருந்த சிந்தனையை இந்தக் காட்சி தட்டியெழுப்பியது.
தன்னுடைய கதைக்கான களம் இதுபோன்ற சாமானிய மக்கள்தான் என்று சொல்லும் கோபி ‘அறம் 2’ படத்துக்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
தொடர்புக்கு: renugadevi.l@thehindutamil.co.in