

ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் பார்வையாளர்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக அடையாளம் காட்டுவது சிரமம். ஆனால் பரவலான பார்வையாளர்களைப் பெற்றுள்ள படமே பெரிய வெற்றிப் படமாகிறது. சமீபத்தில் வெளிவந்து விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தை ஏ சென்டர் ரசிகர்கள் ரசித்தார்கள் என்றும் பி மற்றும் சி சென்டர்களில் இப்படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் இயக்குநர் பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அனைத்து சென்டர்களிலும் அதிகம் பாராட்டப்பட்ட ஒரு படத்தை ஆடியன்ஸ் வேறு வேறு விதமாக ரசிக்கிறார்கள் என்பது தான் தமிழ் சினிமாவின் பிரச்சினையே.
வெகுஜனப் படங்கள் ஏன்?
தரமான, அனைவராலும் பாராட்டப்பட்ட தமிழ் படங்களுக்கான வசூல் வரவேற்பு, ஹிந்தி, மலையாள சினிமாவில் உள்ளது போல இல்லாததால்தான், வசூலைக் குறிவைத்து, வெகுஜனப் படங்கள் எடுக்கப்படுகின்றன. வெகுஜனப் படங்களை ரசிக்கும் மலையாள சினிமா ரசிகர்கள், நல்ல தரமான படத்தையும் கொண்டாடுகிறார்கள்.
சமீபத்திய உதாரணங்கள் திருஷ்யம், பெங்களூரு டேஸ். படம் பார்த்துப் பரவும் நல்ல கருத்துகளே, ஒரு படத்துக்கு, மிகப் பெரிய விளம்பரமாக இன்றும் இருந்து வருவதால், தரமான படங்களை எடுப்பவர்களுக்கு அங்கே மேலும் உற்சாகம் கிடைக்கிறது.
தொடர்ந்து மாறி வரும் தமிழ் சினிமா, மல்டிபிளஸ் மால் திரையரங்குகள் வர ஆரம்பித்த பின், கடந்த நான்கு வருடங்களில் அனைவராலும் அறியப்பட்ட மூன்று வசூல் சென்டர்கள் இன்று சூப்பர் ஏ, ஏ, பி மற்றும் சி சென்டர்கள் என நான்காக மாறி உள்ளன.
எந்த சென்டரில் எவ்வளவு வசூல்?
சூப்பர் ஏ சென்டர்கள் – சென்னை, கோயமுத்தூர், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரை நகரங்கள். சூப்பர் ஏ சென்டர் ஏரியா தமிழ் சினிமாவுக்கு 25 முதல் 30 சதவீத வசூலைத் தற்போது தருகின்றன. மேலும் பல மல்டிபிளக்ஸ்கள் வரும்போது, வசூல் சதவீதம் பெருக வாய்ப்புள்ளது.
ஏ சென்டர்கள் – சென்னையைச் சுற்றி உள்ள துணை நகரங்கள் (தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, திருவெற்றியூர் போன்றவை), வேலூர், திருநெல்வேலி, சிதம்பரம், தஞ்சாவூர், ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்கள் இணைந்து ஏ சென்டர்கள் எனக் கூறப்படும். இவை தமிழ் சினிமாவின் வசூலில் 30 முதல் 35 சதவீதத்தைக் கொண்டு வரும்.
பி சென்டர்கள் – ஆரணி, செங்கல்பட்டு, திருத்தணி, நெய்வேலி, புதுக்கோட்டை, பழனி, ராஜபாளையம், தென்காசி, கோவில்பட்டி, தர்மபுரி, கோபி போன்ற பல சிறு நகரங்கள் பி சென்டர்கள் எனப்படும். இவை இணைத்து 30 முதல் 35 சதவீதம் வசூல் கொண்டு வரும். சி சென்டர்கள் – மீதம் உள்ள மிகச்சிறு நகரங்கள், பெரிய கிராமங்கள் இணைந்து 13 முதல் 20 சதவீத வசூலைக் கொண்டுவரும். இவற்றுடன், ஷிஃப்டிங் சென்டர் எனப்படும் பெரிய கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள், 2 முதல் 5 சதவீத வசூலைக் கொண்டு வரும்.
ஒரு பிரபல நடிகர் நடித்த வெகுஜனப் பொழுதுபோக்கு சினிமா மேலே சொன்ன அனைத்துச் சென்டர்களையும் உள்ளடக்கி, 100 சதவீத வசூலைக் குறி வைக்க முடியும். ஆனால், அதையே, மற்ற படங்கள் எதிர்பார்க்க முடியாது. தரமான (கிளாஸ்) படம் என்று பாராட்டப்பட்ட ஒரு படம், சூப்பர் ஏ மற்றும் அதிகபட்சம் ஏ சென்டர்களை மாத்திரமே வசூலுக்குக் குறி வைக்க முடியும். அதாவது 25 முதல் 40 சதவீத வசூல் சென்டர்கள் மாத்திரமே அத்தகைய படங்களின் குறி. இம்மாதிரி படங்களுக்குப் பி மற்றும் சி சென்டர்களில் வரவேற்பு இருந்ததில்லை. இனி இருக்குமா என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.
இதற்கான காரணங்கள் என்ன?
காலம் காலமாக, பி மற்றும் சி சென்டர் பார்வையாளர்கள் வெகுஜனப் பொழுதுபோக்கு படங்களுக்கு ரசிகர்கள் ஆகிப்போனதால் (எம்.ஜி.ஆர் படங்கள் தொடங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் அதன் பின் விஜய், அஜித், சூர்யா போன்றவர்களின் படங்கள்), அவர்களால் கிளாஸ் எனப் பாராட்டப்படும் படங்களை அதிகம் ரசிக்க முடியவில்லை. அதனால்தான், 1952-ல் அறிமுகமான சிவாஜி, 1971 வரை, குறிப்பிட்ட பார்வையாளர்களை (ஏ மற்றும் பி சென்டர்கள்) மட்டுமே கவரும் ஒரு நடிகர் என்ற பெயருடன் இருந்தார்.
1972-ல் வெளிவந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமான பட்டிக்காடா பட்டணமா சிவாஜியையும் கிராமங்களுக்குக் கொண்டுசென்று சி சென்டர்களிலும் அவரைப் பிரபலமாக்கியது. அதே போல் கமல்ஹாசனுக்கும் சகலகலா வல்லவன் (1982) அனைத்து சென்டர்-களிலும் ஹிட் அடித்த முதல் படமாக மாறி, அவரைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுசென்றது.
பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு ஒரு படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தால், அவற்றை அரங்கில் வந்து பார்க்கும் எண்ணம் இருப்பதில்லை. எனவே தான், பாராட்டப்படும் தரமான ஒரு படம், பி மற்றும் சி சென்டர்களைக் குறி வைக்க முடியாமல் போகிறது. அதாவது, 45 சதவீத வசூல் வாய்ப்பை மறந்துவிட வேண்டும்.
அடுத்த முக்கியக் காரணம், பெருகி வரும் டிக்கெட் விலைகள். கிராமத்திலும் சிறு நகரங்களிலும், திருட்டு டி.வி.டி.கள் மிகவும் பிரபலமானதற்கு இதுவும் ஒரு காரணம். எப்படியாவது படத்தைப் பார்த்தால் போதும் என்ற நிலையில், பெருகிவரும் டிக்கெட் விலைகள் ஒரு தடையாக மாறியதால் அவர்கள் திருட்டு டி.வி.டி.யில் பார்க்க ஆரம்பித்தார்கள்.
என்ன தீர்வு?
ஏற்கனவே 7 வருடங்களாக மாற்றப்படாத நிலையில் டிக்கெட் விலையைக் குறைப்பது கடினம். அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தால் மட்டுமே, திருட்டு டி.வி.டி.களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இவை இரண்டும் நடக்குமா என்று தெரியாத நிலையில், ஒரே வழி தான்.
நாம் எடுக்கும் திரைப்படத்திற்கான பார்வையாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். முடிந்த அளவு, திரைப்பட விநியோகத்தில் உள்ளவர்களுடன் கலந்தாலோசித்து, அத்தகைய ஒரு தரமான படம், சூப்பர் ஏ சென்டர்களுக்கானதா, அல்லது ஏ சென்டர் மக்களுக்கும் பிடிக்குமா என்பதை அறிந்து, இந்த இரண்டு சென்டர்களுக்கு மட்டுமே பிடிக்க வாய்ப்பு இருந்தால், எத்தகைய வியாபாரத்தை / வசூலை எடுக்க முடியும் என்று ஆராய்ந்து அதற்கேற்ற தெளிவான சிந்தனையுடன் எடுத்தால், படம் எடுத்துப் பின் வரும் நஷ்டங்களைத் தவிர்க்க முடியும்.
நாம் எடுக்கும் ஒரு தரமான படம், சூப்பர் ஏ மட்டுமல்ல, ஏ, பி மற்றும் சி சென்டர்களில் மக்களுக்குப் பிடிக்கும் என்று அதீத நம்பிக்கையில் செலவு செய்து எடுக்கப்படும், தரமான, நல்ல படங்கள், கடைசியில் சூப்பர் ஏ மற்றும் அதிகபட்சம் ஏ சென்டர்களில் மாத்திரம் மக்களுக்குப் பிடித்து, எதிர்பார்ப்பைவிடக் குறைந்த வருவாயைக் கொண்டுவருவதுதான் இதுவரை நடந்துள்ளது. வரலாறு சொல்லும் பாடங்களைப் படித்தால், பார்வையாளர்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு, சரியான பாதையில் செல்ல வழி பிறக்கும்.
அதீத நம்பிக்கையைக் கதை மீதும், தயாரிப்பு மீதும் வைத்தாலும், படத்தின் வருவாய் குறித்து, குறைந்தபட்ச நம்பிக்கையை மட்டும் வைத்து, அத்தகைய வருவாய்க்குள் படம் எடுத்து வெளியிட்டால், ஒரு படத்தின் வணிகத் தோல்வி எந்த விதப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல், தொடர்ந்து சினிமா தயாரிப்பில் இருக்க முடியும்.
தொடர்புக்கு:
dhananjayang@gmail.com