

அபத்தமான தங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே தீவிரமாக்க நினைத்து, மேலும் மேலும் அபத்தங்களைச் சந்திக்கும் நான்கு தமிழ் இளைஞர்களின் அவல நகைச்சுவை சினிமா ‘மூடர் கூடம்’. ‘பிளாக் காமெடி’ என்ற வகைமையை முதிர்ச்சியான கலையாக்கிய இயக்குநர் - நடிகர் ம. நவீன் அந்தப் படத்தைப் புத்தரின் வாசகத்துடனேயே தொடங்கியிருந்தார். ‘இலக்கை அடைவதைவிடப் பயணம் சிறப்பதே வழி’ என்பதுதான் அந்த வாசகம்.
‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற காலம் அழிக்க முடியாத பாடலுக்கு அளிக்கப்பட்ட சமர்ப்பணம் என்றே இந்தப் படத்தைச் சொல்லலாம். பாடலில் நாம் உணரும் அர்த்தமின்மையை ‘மூடர் கூடம்’ படத்திலும் நவீன் இழைக்க முயன்றிருப்பார். வசீகரமான நாயகி நடிகையாக அறிமுகமான ஓவியா தொடங்கி வளர்ப்பு நாய்வரை சகலரும் கேலிச்சித்திரமாக மாறும் படம் இது. ‘மூடர் கூடம்’ வர்த்தகரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் விமர்சகர்களின் பாராட்டையும் நவீன் என்ற இயக்குநரின் தனித்தன்மையையும் அடையாளம் காட்ட அடிப்படையாக அமைந்தது.
9-ம் வகுப்புக் கனவு
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிப்பருவத் தினருக்கும் இருக்கும் சினிமா ஆசையும் புகழ் ஆசையும் ஒன்பதாவது வகுப்பிலேயே சினிமாத் துறைக்குத்தான் செல்வது என்று தன்னை முடிவெடுக்க வைத்ததாக இயல்பாகச் சொல்கிறார் நவீன். ஆனாலும், ஒழுங்காகப் பள்ளிப்படிப்பை முடித்து இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங்கையும் முடித்து நல்ல வேலையில் சேர்ந்து வீட்டுக்கடனையும் அடைத்திருக்கிறார்.
குடும்பத்துக்கான தனது பொறுப்பை நிறைவேற்றி முடித்துவிட்டு, கோடம்பாக்கத்துக்குள் இயக்குநர் கனவுடன் நுழையும் எல்லாரையும்போல உதவி இயக்குநர் வாய்ப்புக்காக ஒன்றரை வருடம் அலைந்திருக்கிறார். சிறுகதைகளையும் எழுதிப் பயில ஆரம்பித்துள்ளார். ‘சுலேகா.காம்’, பென்குவின் பதிப்பகம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசை வென்றுள்ளார்.
ஈரோடு அருகே கவுந்தப்பாடியைச் சேர்ந்த நவீன், ஒருவழியாக இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் பணியாற்றினார். அந்த அனுபவத்தில் ‘பசங்க’ இயக்குநர் பாண்டிராஜிடமும் பணியாற்றியுள்ளார். தனது ‘மூடர் கூடம்’ திரைக்கதையைப் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் சொல்லி, நிறையப் பேர் ஏற்காத நிலையிலும் நிறைய மாற்றங்களைப் பரிந்துரைத்த நிலையிலும், தானே தயாரிக்க முடிவுசெய்தார். படத்தின் தயாரிப்பு தொடங்கி வெளியீடுவரை வெற்றியும் கண்டார்.
இடைவெளி
‘மூடர் கூடம்’ வாயிலாகத் தமிழ் சினிமா ஒரு நல்ல இயக்குநரைக் கண்டுகொண்டாலும், இயக்குநராக அவருடைய அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை. காரணம் கேட்டால் 2004 முதல் 2013 வரை சினிமா, சினிமா என்று போராடியதில் அம்மாவுக்கு நல்ல மகனாக, காதல் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க முடியவில்லை; அதற்காக எடுத்துக்கொண்ட இடைவெளியே காரணம் என்கிறார். ஆனால், தயாரிப்பாளராக ‘கொளஞ்சி’ படமும், இயக்குநராக ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படமும் அவரிடம் தயார் நிலையில் இருக்கின்றன. அடுத்த படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார்.
சிறந்த பொழுதுபோக்கு, உள்ளே சமூகக் கருத்து என இரண்டு அடுக்குகள் கொண்டதாகத் தனது சினிமா இருக்க வேண்டுமென்று கூறும் நவீனுக்கு, அதற்கான முன்னுதாரணம் உலக மேதை சார்லி சாப்ளின். இயக்குநர் எஸ். பாலச்சந்தரைப் பற்றி ரசித்துப் பேசும் நவீன், அவர் எடுத்த ‘அந்த நாள்’, ‘பொம்மை’ திரைப்படங்கள் வெளியான காலகட்டத்தில் மிகவும் நவீனமானவை என்கிறார். தமிழின் சிறந்த சினிமா ‘சிவப்பு ரோஜாக்கள்’ என்று கூறி, பாரதிராஜா பற்றி லயித்துப் பேசுகிறார். கே. பாலச்சந்தர், மகேந்திரன் இருவரும் தன் மீது தாக்கம் செலுத்தியவர்கள் என்கிறார்.
ஆதர்சங்கள்
சார்லி சாப்ளினை அடுத்து ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டாரெண்டினோவும் லத்தீன் அமெரிக்க இயக்குநர் அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டுவும் இவருக்குப் பிடித்தவர்கள். ‘மூடர் கூட’த்தின் கார்ட்டூன் பிளாஷ்பேக்குகளில் குவெண்டின் டாரெண்டினோவின் தாக்கத்தை உணர முடியும்.
‘பி கிரேட்’ படத்தின் தன்மையுள்ள கதையையும், திரையில் பார்வையாளர்கள் கொண்டாடும் தன்மையில் ஈடுபாட்டுடன் ரசித்து இயக்குபவர் டாரெண்டினோ என்கிறார் நவீன். இனாரிட்டுவின் ‘அமரோஸ் பரோஸ்’, ‘21 கிராம்ஸ்’, ‘பேபல்’ படங்கள் இவருக்குப் பிடிக்கும். அதேபோல ஈரான் திரைப்பட இயக்குநர்கள் ஜாபர் ஃபனாஹி, மஜீத் மஜிதி இருவரும் தன்னைக் கவர்ந்தவர்கள் என்கிறார்.
பார்த்த படங்கள், படித்த புத்தகங்கள், பழகிய மனிதர்கள், கேட்ட செய்திகளிலிருந்து தனது படங்களுக்கான திரைக்கதையை உருவாக்குவதாகக் கூறுகிறார். பாவ்லோ கெய்லோவின் ‘ரசவாதி’யையும், அருந்ததி ராயின் ‘சின்ன விஷயங்களின் கடவு’ளையும் தாக்கம் செலுத்திய புத்தகங்களாகக் குறிப்பிடுகிறார்.
எல்லாமே விதியால் அல்ல
தற்செயல் நிகழ்வுகளுக்குக் காரணத்தையோ அர்த்தத்தையோ உங்களைப் போன்ற படைப்பாளிகள் தேடுகிறீர்களா என்று கேட்டேன். “இந்த உலகம் கோடானு கோடி மனிதர்கள் சேர்ந்து வாழும் சிலந்தி வலையாக இருக்கிறது; பல கோடிப் பேரின் எண்ணங்கள், செயல்கள், நோக்கங்கள், இயற்கை நிகழ்வுகளின் தொகுப்பாகவே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்கிறேன். மனிதர்களை மட்டும் மையமாகக் கொண்டது இந்த உலகம் என்று நான் நினைக்கவில்லை.
எவ்வளவு அறிய முயன்றாலும் விடை தெரியாத கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அதை விதி என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். விடை தெரியாத கேள்விகளுடனேயே எந்த இறுதி முடிவு இல்லாமல் வாழ்க்கையை அனுபவிப்போமே என்ற வகையில், நான் பகுத்தறிவு கொண்ட நபர்” என்கிறார் நவீன்.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in