

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘சர்வம் தாளமயம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், இயக்குநர் ராஜீவ் மேனன். விரைவில் வெளியாகவிருக்கும் இது, ‘சங்கராபரணம்’, ‘சிந்து பைரவி’, ‘சலங்கை ஒலி’ போல ஒரு முழுநீள இசைச் சித்திரம். காஷ்மீர் முதல் குமரி வரை பயணப்பட்டு பல்வேறு கலாச்சார, கிராமிய இசைக் கலைஞர்களை இந்தப் படத்துக்காக சந்தித்திருக்கிறது படக்குழு. ‘நாச்சியார்’ படத்தில் காத்து என்கிற கதாபாத்திரத்தை ஏற்றதைப் போலவே இதிலும் மாறுபாடு காட்டியிருக்கும் ஜி.வி.பிரகாஷை சந்தித்து உரையாடியதிலிருந்து…
இசையமைப்பாளரான நீங்கள் ஏன் நடிக்க வந்தீர்கள்?
நான் நடிக்க வந்தது மிகவும் எதேச்சையாக நடந்த விஷயம். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அவரது தயாரிப்பில் நடிக்கக் கேட்டிருந்தார். அது தெரிந்து பலரும் என்னை அணுகினர்.
நடிப்பின் மீது முழு ஈடுபாடு உள்ளதா?
கண்டிப்பாக. எந்த வேலையைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் இல்லையா. அப்படித்தான் நடிப்பும்.
‘சர்வம் தாளமயம்’ படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. வலுவாக இருக்கிறாரா?
முழுவதுமே இசையமைப்பாளர் ஜி.வி.தான். படம் முழுவதும் இசைக் கருவியை வாசிக்க வேண்டும். வழக்கமாக நமது சினிமாவில் நாயகன் இசைக்கருவியை வாசிக்கிறார் என்றால் அவர் நடிப்பது தெரியும். ஆனால், இந்தப் படத்தில் இசைக் கருவியை அப்படியே வாசிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பினார். அதனால்தான் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.
பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனிடம் ஒரு வருடம் பயிற்சி பெற்றேன். நான் பியானோ கலைஞன். பியானோ வாசிக்கையில் விரல்கள் மடங்க வேண்டும். ஆனால், மிருதங்கம் வாசிக்கும்போது விரல்கள் மடங்கவே கூடாது. மடங்கினால் தவறு. இது பெரிய சவாலாக இருந்தது.
பாலாவின் இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்ததிலிருந்து படம் தேர்ந்தெடுக்கும் விதத்தை மாற்றியிருக்கிறீர்களா?
இசையமைப்பாளராக மட்டும் இருந்தபோது படங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் வேறு. படத்தின் கருத்தை மனதில் வைத்தே ஒப்புக்கொள்வேன். நடிகனான பிறகு, பொழுதுபோக்கு என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தி தேர்வு செய்கிறேன். நடிக்க வந்துவிட்டால் உங்கள் வேலையை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர்.
அப்போதுதான் பாலா பட வாய்ப்பு வந்தது. இப்போது ராஜீவ் மேனன் படம். இவர்கள் இருவருமே எனது ஆசான்கள் என்று சொல்லலாம்.‘சர்வம் தாளமயம்’ படத்தைப் பார்த்துவிட்டு பாலா அழுதுவிட்டார். நான் இந்தப் படத்தில் நடித்தது குறித்து ரஹ்மான் மிகவும் சந்தோசப்பட்டார். அவருக்குப் படத்தின் பல காட்சிகள் மிகவும் பிடித்திருந்தன.
நடிகர் விஜயின் ரசிகன் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் படத்திலும் விஜய் ரசிகராகவே நடிக்கிறீர்களே?
‘சர்வம் தாளமயம்’ படத்தின் நாயகன் பீட்டர், விஜய் ரசிகன் என்பது திரைக்கதையிலேயே இருந்தது. நான் தனியாகச் சேர்க்கவில்லை. மேலும், இதுபோன்ற படங்களில் நடிகனின் தலையீடு எதுவும் இருக்க முடியாது.
நல்ல கதையை எப்படி அடையாளம் காண்கிறீர்கள்?
எனக்கு அதில் இதுவரை பிரச்சினை இருந்ததில்லை. நான் நிறைய அறிமுக இயக்குநர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’, ‘ஓரம் போ’ எனப் பல படங்கள் செய்திருக்கிறேன். அதனால் ஒருவர் வந்து கதை சொல்லும்போது அதில் இருக்கும் நல்லது என்ன என்பதை என்னால் அடையாளம் காண முடியும்.
கடின உழைப்பு இருந்தாலும் சினிமாவுக்கு அதிர்ஷ்டமும் அவசியமா?
நூறு சதவீதம்! அதுவும்தான் தேவை. நீங்கள் முழுக் கவனத்தோடு கடினமாக உழைத்துக்கொண்டே இருந்தால், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வரும். நான் 70 படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பெரிய ஹிட் 20 படங்கள்தாம். இந்த 20 படங்கள் என்றும் நிலைக்கும். அதைக் குறிப்பிட்டுத்தான் எப்போதும் பாராட்டுவார்கள்.
தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தோல்விகள் வந்தால் விமர்சனங்கள் அதிகமாக இருக்கும். எனக்கும் இருக்கிறது. பிரபலமாகும் போது தோல்விகள் அதிகமாகக் கவனிக்கப்படும். அப்போது விழுந்தடித்து மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதுதான் பெரிய சவால். சிலருக்கு நம்மைப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. இதையும் ஒன்றும் செய்ய முடியாது.
இசையமைப்பதைவிட நடிப்பில் அதிகக் கவனம் செலுத்துகிறீர்களோ?
எனக்கு வேலை செய்வது பிடிக்கும். நான் தொடர்ந்து வேலைசெய்துகொண்டே இருப்பேன். இசையமைக்கும்போது, என்னடா இவன் சட்டென இவ்வளவு படங்கள் செய்துவிட்டான் என்று ஆச்சரியப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இப்போது நடிக்கும்போதும் அப்படித்தான். நடிப்பில் 20 படங்கள், இசையில் 70 என 90 படங்கள் மொத்தம் முடித்துவிட்டேன். 2019-ல் கிட்டத்தட்ட 10 படங்கள், அனைத்துமே முக்கியமான நல்ல கதாபாத்திரங்கள் அமைந்த படங்கள். இந்த ஆண்டு எனது ஆண்டாகவும் இருந்துவிட்டால் மகிழ்ச்சிதானே.
படங்கள்: எல்.சீனிவாசன்