

ரூட்யார்ட் கிப்லிங் என்ற பிரிட்டிஷ்காரர் தனது பால்யத்தையும் பின்னர் பணி நிமித்தமான வாழ்க்கையையும் இந்தியாவில் கழித்தவர். தான் தரிசித்த இந்தியக் கானகத்தை மையமாக்கி தனது மகளுக்குக் கதைகளாகவும் அவர் எழுதினார். அவற்றை வாசிக்க வாய்ப்பின்றி அவருடைய மகள் உயிரிழந்த போதும், அடுத்து வந்த ஆண்டுகளில் உலகம் முழுக்கக் குழந்தைகளுக்கான கதைகளின் வரிசையில் ‘ஜங்கிள் புக்’ நீங்கா இடம் பிடித்தது.
காமிக்ஸில் தொடங்கி தொலைக்காட்சித் தொடர்கள், அனிமேஷன் திரைப்படங்கள் என எல்லா வடிவங்களிலும் வரிசை கட்டியது. அந்த வரிசையில் 1967-ல் அவர் உருவாக்கிய கார்ட்டூன் திரைப்படத்தையே 2016-ல் டிஸ்னி நிறுவனம் நவீனத் தொழில்நுட்பங்களால் மீட்டுருவாக்கியது. ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்றதுடன் வசூலில் புதிய சாதனையையும் படைத்தது.
அதற்கு முன்னரே தொடங்கப் பட்டு தாமதமாகத் தற்போது வெளியாகி இருப்பதுதான் நெட்ஃபிளிக்ஸின் ‘மோக்லி: லெஜண்ட் ஆஃப் தி ஜங்கிள்’ திரைப்படம். இந்திய கானகத்தில் நடக்கும் கதை என்பதால் இங்கே கூடுதல் கவனமும் பெற்றுள்ளது.
அடர் வனத்தில் நிராதரவாகும் குழந்தையைக் காட்டு விலங்குகள் காப்பாற்றி வளர்ப்பதும் அந்தக் குழந்தை சிறுவனாக வளர்ந்து காட்டின் அமைதியை நிலைநாட்டுவதுமே ‘ஜங்கிள்புக்’கதை. ‘மோக்லி’ திரைப்படத்தில் வில்லன் ஒரு புலி. சிறுவனின் பெற்றோரைக் கொல்வதுடன், அவனையும் வேட்டையாட முயல்கிறது. ஓநாய் குடும்பத்தில் ஓர் ஒநாயாகவே வளரும் சிறுவன், தன்னை மனிதப் பிறவியாக அடையாளம் காண்பதுடன், கானகத்துக்கும் கிராமத்துக்கும் இடையே தனது வாழ்விடத்தைத் தீர்மானிக்க அல்லாடுகிறான்.
வழக்கமான கதை. முடிவுக்கு முன்பான இந்த ஊசலாட்டத்தையும் காடும் ஊரும் ஊடறுக்கும் பல்வேறு வெளிகளையும் படம் பேச முயல்கிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக இது முழுமையான குழந்தைகள் திரைப்படம் அல்ல என்பது ஆச்சரியமானது. திரைப்படத்தின் பார்வையாளர் வயது வரம்பு 13+ என்கிறது நெட்ஃபிளிக்ஸ். அதற்கேற்ப வங்கப் புலியும் மலைப் பாம்பும் நன்றாகவே பயமுறுத்துகின்றன. புலிக்குப் பயந்து ஓடைக்குள் சிறுவன் மூழ்கும் காட்சியும் குரங்குகள் அவனைத் தாக்கும் காட்சியும் பேண்டஸி கதைக்குள் சாகசத் தோரணங்களைத் திணிக்கும் முயற்சியில் திகில் சேர்க்கின்றன.
‘கோச்சடையா’னில் சொதப்பிய ‘மோஷன் கேப்சரிங்’ தொழில்நுட்பத்தை ‘மோக்லி’யில் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்கள். மனிதர்களின் முகபாவங்களை விலங்குகள் பாவிப்பது வித்தியாசமாகத் தென்பட்டாலும், ரசிக்கவைக்கின்றன. பாவனை செய்த நடிகர்களே விலங்குகளுக்கான ஆங்கிலக் குரல்களையும் பின்னணி தந்துள்ளனர். ’டப்’ செய்யப்பட்ட இந்திப் பதிப்பிலும் கறுஞ்சிறுத்தைக்கு அபிஷேக் பச்சன், புலிக்கு ஜாக்கி ஷெராஃப், மலைப் பாம்புக்கு கரீனா கபூர், ஓநாய் தாய்க்கு மாதுரி தீட்சித், கரடிக்கு அனில்கபூர் என அமர்க்களம் செய்திருக்கிறார்கள். தமிழ் டப்பிங்கில் அப்படியேதும் தகவல் இல்லை.
ஒருசேரத் தயாராகி 2 வருடங்களுக்கு முன்னர் வெளியான டிஸ்னியின் ‘ஜங்கிள் புக்’குடன், ‘மோக்லி’ ஒப்பிடப்படுவதைத் தவிர்க்க இயலாது. சிறுவனை மட்டும் லைவ் ஆக்ஷனாகவும், இதரப் பாத்திரங்களை சிஜிஐ நுட்பத்திலுமாக டிஸ்னி அமர்க்களம் செய்திருக்கும். கரடி மற்றும் குரங்கு ராஜாவுடனான சுவாரசியமான காட்சிகள், நகைச்சுவை, பாடல்கள் எனப் பலவும் ‘மோக்லி’யில் காணோம்.
சற்றே வளர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சீரியசான படத்தை முயன்றிருக்கிறார்கள். ஜங்கிள் புக் வரலாற்றில் இது புதிய முயற்சியாக இருக்கலாம். ஆனபோதும் ‘குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்ட கதை உலகத்தை அப்படியே விட்டு விடுங்களேன்’ என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.
திரைப்படத்தை அன்டி செர்கிஸ் இயக்கியுள்ளார். சிறுவனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரோஹன் சந்த் நடித்துள்ளார். ஃபீரிதா பின்டோ உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com