Last Updated : 25 Jan, 2019 10:13 AM

 

Published : 25 Jan 2019 10:13 AM
Last Updated : 25 Jan 2019 10:13 AM

ஹாலிவுட் ஜன்னல்: டிராகன்களின் பாய்ச்சல்

யாருக்கும் எதற்கும் அடங்காத ட்ராகன்களை மனிதர்கள் நாய்க்குட்டிகளைப்போல பழக்க முயலும் சாகசம் ஹாலிவுட் படங்கள், அதன் மசாலா ரசிகர்களால் கொண்டாடப்படும் ரகம். அந்த வரிசையின் மூன்றாவது நிறைவு பாகமான ’ஹவ் டு ட்ரைன் யுவர் டிராகன்: தி ஹிடன் வேர்ல்ட்’ (How to Train Your Dragon: The Hidden World) திரைப்படம் பிப்ரவரி 22 அன்று திரைக்கு வருகிறது.

பெர்க் தீவில் வசிக்கும் வைக்கிங் மக்கள், தொல்லை தரும் டிராகன்களுக்கு எதிரான நீண்ட போராட்டத்தில் அலைக்கழிகின்றனர். வைக்கிங் இளவரசனான ஹிக்கப் ஆகப்பெரிய வீரன் கிடையாது. என்றபோதும், டிராகன் ஒன்றை வீழ்த்தும் அவனது முயற்சி டிராகன்களுடனான புதிய நட்புக் கணக்கை தொடங்கி வைக்கிறது. தொடர்ந்து உருவாகும் டிராகன்கள், பெர்க் மக்களின் பிரச்சினைகளை ஒருசேர வெல்வதற்கு ஹிக்கப் கிளம்புகிறான். இதுதான் 2010-ல் வெளியான முதல் திரைப்படத்தின் கதை.

2014-ல் இதன் இரண்டாவது பாகம் வெளியானது. இம்முறை டிராகன் படை கொண்டு அட்டகாசம் செய்யும் புதிய வில்லனின் கொட்டத்தை அடக்க ஹிக்கப் புறப்படுகிறான. அதற்கான முயற்சியில் 20 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த தனது தாயைச் சந்திக்கிறான். அம்மா துணையுடன் வில்லனுக்கு எதிரான அவனது போர் என்னவானது என்பதே இரண்டாம் பாகம். இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட அனிமேஷன் மென்பொருள்கள் ஹாலிவுட்டின் வி.எஃப்.எக்ஸ் துறைக்கு படிக்கற்கள் ஆகின.

தற்போது வெளியாகும் மூன்றாவது பாகத்தில் டிராகன்களும் வைக்கிங் மக்களும் இணக்கமாக வாழும் கனவு தேசத்தை நிர்மாணிப்பது, டிராகன்களுன் மாயலோகத்தை கண்டுகொள்வது, இடையூறாய் முளைக்கும் புதிய வில்லனை சாய்ப்பது, காதலியை கரம் பிடிப்பது, டிராகன்கள் சுதந்திரத்துக்குப் போரிடுவது என புதிய சவால்கள் ஹிக்கப்புக்கு காத்திருக்கின்றன.

டீன் டெப்லாஸ் இயக்கம், ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் தயாரிப்பு, பாரமவுண்ட் விநியோகம் என வெற்றிக் கூட்டணி மூன்றாவது பாகத்திலும் தொடர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x