

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, தனது ஒரிஜினல்ஸ் வரிசையில் ‘பேர்ட் பாக்ஸ்’ என்ற திரைப்படத்தை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ். வெளியான முதல் வாரத்தில் மட்டும் நாலரைக் கோடி சந்தாதாரர்கள் படத்தைப் பார்த்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்த அபார வரவேற்பு டிஜிட்டல் மேடையில் நேரடி திரைப்படங்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் என நம்பலாம்.
ஒரு பெண், உடன் இரு குழந்தைகள் என மூவரும் தங்கள் கண்களைக் கட்டிக்கொண்டு ஆற்றின் வழி ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்வதுடன் படம் தொடங்குகிறது. இடையிடையே பிளாஷ்பேக் கதையும் துண்டு துண்டாக விரிகிறது. இரண்டிலுமே மனிதர்களை மரணம் துரத்துகிறது. அந்தத் துரத்தலையும் மனிதர்கள் அதற்கு ஆளாவதையும் தப்பிப் பிழைக்கும் ஒரு சிலரின் போராட்டத்தையும் சற்றும் குறையாத திகிலுடன் ‘பேர்ட் பாக்ஸ்’ திரையில் விரித்துக் காட்டுகிறது.
மனிதர்கள் மத்தியில் தற்கொலை மோகம் தீயெனப் பரவுவதை வித்தியாசமாகக் காட்டுகிறார்கள். இயற்கை வெளிச்சத்தில் அரூபமாய் ‘தரிசனம்’ தரும் மரணம், மனிதரின் பார்வையில் ஊடுருவி மரணத்துக்கு இசைவாக மாறச் செய்கிறது. திடும்மெனக் கண்கள் நிலைகுத்த பார்வை மாறுவதும் தாயிடம் தாவும் குழந்தையைப் போல மரணத்தை ஏற்றுக்கொள்வதும் அரங்கேறுகிறது. சிலர் கண்களை மூடிக்கொண்டோ காந்தாரிபோல் துணியால் கட்டிக்கொண்டோ ஒரு சிலர் உயிர் தப்புகின்றனர்.
அப்படி ஒரு வீட்டுக்குள் அடைக்கலாமாகும் நபர்களில் ஒருவராக வருகிறார் சான்ட்ரா புல்லக். மரணங்களின் மத்தியில் ஜனிக்கும் இரு குழந்தைகளுடன் சான்ட்ரா தப்புவதாகப் படம் சற்றும் சளைக்காத பரபரப்புடன் செல்கிறது. சாட்டிலைட் போன் உதவியுடன் தொலைதூரத்தில் பாதுகாப்பான இடம் இருப்பதை அறியும் சான்ட்ரா, குழந்தைகளுடன் ஆபத்தான படகுப் பயணத்துக்கு ஆயத்த மாகிறார். பிளாஷ்பேக் காட்சிகளைவிட இந்த நதிப் பயணம் இருக்கை நுனியில் அமர வைக்கிறது.
ஆங்காங்கே ’சில்ட்ரன் ஆஃப் மென்’, ‘எ கொயட் பிளேஸ்’, ‘நைட் ஆஃப் தி லிவிங் டெட்’ உள்ளிட்ட படங்களின் வாடை அடித்தாலும், ‘பேர்ட் பாக்ஸ்’ உலுக்கும் திகில் சம்பவங்களை உள்ளடக்கிய திரைப்படம். ஹாலிவுட் தாரகையான சான்ட்ரா புல்லக் மொத்தப் படத்தையும் முதுகில் சுமக்கிறார். மரணத்தின் நிழலில் குழந்தைகளை மிரட்டி வளர்ப்பதிலும் கானகத்திலும் நதியோட்டத்திலுமாக அவர்களை அரவணைத்துச் செல்வதி லும் தனது நடிப்பு முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
ஜாக்கி வீவர், ரோஸா சலஸார், டேனியல் மேக் டொனால்ட் உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே பெயரில் வெளியான நாவலின் கதையைத் தழுவிய திரைக் கதையிலான ‘பேர்ட் பாக்ஸ்’ திரைப்படத்தை சூசேன் பியர் இயக்கி உள்ளார்.
நாம் அனைவரும்கூட ஏதோவொரு அச்சத்தின் பிடியில், எதிலிருந்தோ தப்பிக்க, கண்களைக் கட்டிக் கொண்டவர்களாக, எங்கோ அடைக்கலம் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ‘பேர்ட் பாக்ஸ்’ திரைப்படத்தில் ஆபத்தான பயணத்தில் குழந்தைகள் தம்முடன் பொத்தி எடுத்துச்செல்லும் பறவைகள் பெட்டியைப் போன்று நம்மிடமும் ஆசையும் நேசமும் பின்னிய ரகசியப் பெட்டிகள் உண்டு. கண்ணை மூடிக்கொண்டு நாம் ஓடினாலும், இரக்கமற்ற கண்களுடன் காலமும் காலனும் ஒருசேரத் துரத்திக்கொண்டே இருப்பார்கள். அந்த அனுபவத்தில் சிறிதேனும் ‘பேர்ட் பாக்ஸ்’ நமக்கு உணர்த்தும்.
டிரைலரைக் காண: https://bit.ly/2CBtsat
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com