

இந்தியப் பெருநகரங்களில் மிகச் சாமானியக் குடும்பங்களில் பிறந்து, வறுமைக்கு நடுவே, தங்கள் வலிமிகுந்த வாழ்க்கையைக் குறித்து வெளிப்படையான வரிகளில் ‘ஹிப்-ஹாப்’ இசையாக விரித்துப் புகழ்பெற்ற புத்தாயிரத்தின் இந்தியத் தெருப் பாடகர்கள் பலர். அவர்களில் மும்மை தாராவியிலிருந்து எழுந்த டிவைனும் நைஸியும் வெகுஜன ஊடகங்களாலும் அரவணைக்கப்பட்டு வெற்றிபெற்றவர்கள். பயோபிக் காய்ச்சலில் பயணித்துவரும் பாலிவுட், இந்த இருவரது வாழ்க்கையையும் தற்போது திரைப்படமாக்கியிருக்கிறது.
இவ்விரு ‘ஸ்ட்ரீட் ராப்பர்’களின் வாழ்வைத் தழுவி ஸோயா அக்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படத்துக்கு ‘கலி பாய்’ (Gully Boy)என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். தனித்தனியே ஹிப்-ஹாப் இசையைக் கையில் எடுத்து அடையாளம் பெற்றாலும் டிவைன், நைஸி இருவரையும் பிரபலமாக்கியது ‘மேரே கலி மேய்ன்’ என்ற ராப் பாடல்தான்.
ரன்வீர் சிங்கும் ஆலியா பட்டும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் போஸ்டரைச் சமீபத்தில் அவ்விருவருமே ட்விட்டரில் வெளியிட்டனர். ‘அப்னா டைம் ஆயேகா’ (எங்களுக்கான நேரம் வரும்) என்ற ‘டாக்லை’னுடன் அந்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ரன்வீர், டிவைனுடன் ராப் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் சென்ற ஆண்டு வைரலானது. சித்தாந்த் சதுர்வேதி, விஜய் ராஸ், அம்ருதா சுபாஷ், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம், பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்குமுன் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருக்கிறது.