

மதிப்புமிக்க பிரபலங்களின் வருடாந்திர ‘பிராண்ட் வேல்யூ’ பட்டியலை ‘டஃப் அண்ட் பெல்ப்ஸ்’ என்ற நியூயார்க்கைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தையும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். 2018-ல் அதிக மதிப்புமிக்க பாலிவுட் நடிகையாக தீபிகா படுகோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தீபிகா படுகோனின் சென்ற ஆண்டுக்கான பிராண்ட் வேல்யூ மதிப்பு ரூபாய் 724 கோடி என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. பாலிவுட்டின் மூன்று ‘கான்’களான ஆமிர், ஷாருக், சல்மான் ஆகியோரை தீபிகா பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். “கடந்த ஆண்டு, எனக்கு மிகவும் சிறப்பான ஆண்டு. தொழிலிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி, சென்ற ஆண்டு எனக்கு முக்கியமானது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதையும் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பதையும் எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். நமது முயற்சிகளுக்கும் கடின உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைப்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் தீபிகா.
சர்ச்சைகளையும் எதிர்ப்புகளை கடந்து வெளியான ‘பத்மாவத்’ திரைப்படம், 50 நாட்களின் முடிவில் ரூ.300 கோடி வசூல் குவித்தது. அதன் மூலம் தீபிகா 300 கோடி வசூல் கிளப்பில் இணைந்த முதல் பாலிவுட் பெண் நட்சத்திரம் ஆனார்.
இந்த ஆண்டு, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் ‘சபாக்’ என்ற படத்தில் நடிக்கிறார் தீபிகா. இந்தப் படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம், பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் தீபிகா.