Last Updated : 11 Jan, 2019 03:44 PM

Published : 11 Jan 2019 03:44 PM
Last Updated : 11 Jan 2019 03:44 PM

சி(ரி)த்ராலயா 49: தன்னையே தந்துவிட்ட ஸ்ரீதர்

கே.ஆர்.ஜி என்ற கே.ஆர்.கங்காதரனுக்காக ‘ஆலய தீபம்’ தொடங்கி ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ வரை ஸ்ரீதர்-கோபு பணியாற்றி முடித்தபோது ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி அதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார் ஸ்ரீதர்.

கோபுவோ இசையமைப்பாளர் வி.குமார் அறிமுகப்படுத்திய ராஜி வி.ஆர்.ஜி தயாரிப்பில் சன் டிவிக்காக ஏழு தொலைக்காட்சித் தொடர்கள், ஆண்டி ஆனந்தா தயாரிப்பில் தூர்தர்ஷனுக்காக ‘வாஷிங்டனில் திருமணம்’ தொடர் எனத் தொலைக்காட்சித் துறையிலும் ஒரு கை பார்த்தார். பத்திரிகைகளுக்கான பத்தி எழுத்திலும் குறைவைக்கவில்லை கோபு.

இந்த நேரத்தில் கோபுவுக்குத் திரைப்படங்களின் மீது ஆர்வம் குறைந்து போனது. அதற்குக் காரணம் கபில் தேவ். 1983-ல் உலகக் கோப்பையை இந்தியா வெற்றி கொண்ட பிறகு, கிரிக்கெட் ஆர்வம் தீப்போல் பரவியது. கோபு முழுவதுமாகத் தன்னை கிரிக்கெட் உலகத்தில் புதைத்துக்கொண்டார். ஆனால், ஸ்ரீதர் கோபுவை விடுகிறமாதிரி இல்லை.

கோபுவுக்கு போனைப்போட்ட ஸ்ரீதர், “சித்ராலயா பேனர்ல அடுத்த படம் எடுக்க போறோம். நீ டிஸ்கஷனுக்கு ரெடியா இரு. நாம காந்தி பீச் போகணும்” என்றார். அதிர்ந்துபோன கோபு, “சினிமா போதும்ன்னு முடிவு எடுத்த நேரத்துல அடுத்த படம்ன்னு அசால்டா சொல்றியே..! ஒரு தொழிற்சாலைக்கு நீ இப்போ நிர்வாக இயக்குநர்டா.. அதை மறந்துட்டியா? அதுவுமில்லாம, புது இயக்குநர்கள் நிறைய வந்துட்டாங்க.

ரசிகர்களோட சுவையும் மாறிகிட்டு வருது. எதுக்கு ரிஸ்க் எடுக்கறே?” என்றார். “உனக்கே தெரியும். நான் ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டேன்னு. தொழில் அதிபரா எனக்குப் புகழ் கிடைக்கல. என்னை அடையாளம் காட்டினது என்னோட படங்கள். அதை அப்படியே விட்டுட முடியாதுடா. இந்தவாரக் கடைசியில பீச்சுக்கு போறோம் கதையை டிஸ்கஸ் பண்ணி முடிக்கிறோம்” என்று கூறி போனை வைத்தார்.

கதாநாயகனின் நேர்மை

சொன்னமாதிரியே சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கோபுவைக் கூட்டிச்செல்ல காருடன் வந்துவிட்டார் ஸ்ரீதர். மெரினா கடற்கரையில் காந்தி சிலையின் பின்னால் ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்கான கதை உருவான அதே இடம். “இந்திய நாட்டையே கலக்கின ஒரு படத்தை இங்கதானே உருவாக்கினோம்.” என்று சொன்னபடி துளியும் குறையாத அதே தன்னம்பிக்கையுடன் ஸ்ரீதர் கதை ஒன்றைக் கூறினார்.

“ஒரு பணக்காரப் பெண்ணைக் கதாநாயகன் காதலிக்கிறான். அந்தப் பெண் தனது சொத்து சுகத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவன் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். நாயகனோ, தனக்கு வேலை இல்லை என்பதால் அவளைப் பத்திரமாக அவளது தந்தையிடம் ஒப்படைத்துவிட, அவனது அந்த நேர்மை பிடித்துப் போகிறது அவருக்கு.

எனவே, அவன் வேலை தேடிக்கொள்ள ஒரு வருடம் அவகாசம் தருகிறார்” என்று ஸ்ரீதர் கதையின் சுருக்கத்தைக் கூற, கோபு, “ ஏதோ ஒண்ணு பெரிசா இடிக்குது கதை விவாதம் வழக்கம்போல களை கட்டியது. அந்தப் படம்தான் விக்ரம் நாயகனாகவும் ரோஹினி நாயகியாகவும் நடித்த ‘தந்துவிட்டேன் என்னை’. இயக்குநர் பாரதிராஜாவுக்கு இந்தப் படத்தில் ஒரு கௌரவ வேடமும் கொடுத்தார் ஸ்ரீதர்.

அதிர்ச்சியைக் கொடுத்த தோல்வி

‘தந்துவிட்டேன் என்னை’ 1991, ஜூன் 21-ல் வெளியானது. படம் படுதோல்வி. தியேட்டர்களில் ஒரு வாரம்கூட ஓடவில்லை. ஸ்ரீதரால் அந்தத் தோல்வியைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஸ்ரீதரும் கோபுவும் ரிலீஸ் தினத்தன்று காரில் தியேட்டர் வலம் கிளம்பினார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு ரசிகர், “இன்னும் இவர் ஏன் படம் எடுக்கிறார்?’’ என்று கடுப்புடன் கூற, காரில் அமர்ந்தபடி அந்த விமர்சனத்தைக் காதில் வாங்கிய ஸ்ரீதர் அதிர்ச்சி அடைந்தார்.

எதையோ பறிகொடுத்ததுபோல ஸ்ரீதர் பேசாமல் மௌனமாக வர கோபுக்கு மனதைப் பிசைந்தது. ஸ்ரீதரின் மௌனத்தைக் கலைத்து அவரைச் சகஜ நிலைக்குக் கொண்டுவர தடாலடியாகப் பேசி அவரது சிந்தனையை மடைமாற்ற முயன்றார் கோபு. “தெரிஞ்சுதானே ரிஸ்க் எடுத்தோம் ஸ்ரீ. ஒரு படம் போச்சுனா என்ன, அடுத்த படத்துல பிடிச்சுடப்போறோம்.” என்று கூறிவிட்டு பால்ய லீலைகளைப் பற்றிப் பேசினார் கோபு. ஆனால், வீட்டுக்குத் திரும்பிய பிறகும் ஸ்ரீதர் ஆறுதல் அடையவில்லை.

“எங்கே தப்பு நடந்ததுனு தெரியலை கோபு!” என்று முணுமுணுத்தபடி இருந்தார். ‘என்ன தவறு’ என்று தெரியும்வரை ஸ்ரீதர் விடமாட்டார் என்பது கோபுவுக்குத் தெரியும். அதனால் கோபு அதிரடியாகப் பல முக்கிய திரையரங்குகளில் படங்களைத் திரையிடும் தியேட்டர் ஆபரேட்டர்களிடமிருந்து தான் சேகரித்து வைத்திருந்த காரணங்களை ஸ்ரீதரிடம் கூறினார் கோபு.

“இன்னா சார் ஹீரோ அவன்… காதலிச்ச பொண்ணே தில்லா வூட்டை வுட்டு வந்து, ‘வாடா ஓடிப் போயிடலாம்’னு சொல்லுது. அது கழுத்துல ஒரு தாலியைக் கட்டி, ஆட்டோ ஓட்டியாவது அவளக் காப்பத்த வேண்டாமா... அவன் என்னடான்னா... அந்தப் புள்ளயக் கொண்டு போயி நைனா கிட்டே விடுறான். அந்த இடத்துல ஹீரோ விழுந்துடறான் சார்…!” – இப்படிச் சொன்னது பல தரப்பு ரசிகர்களும் வந்து செல்லும் திரையங்கு ஒன்றின் ஆபரேட்டர் என்பதை ஸ்ரீதரிடம் கூறியவர், “அடாவடி, ரவுடி பையன்களை எல்லாம் பொண்ணுங்க காதலிக்கிற மாதிரி காட்டுற இந்தக் காலத்துல, இந்த மாதிரி கதையெல்லாம் எடுபடாது சார்’’ என்று தனக்குக் கிடைத்த இன்னொரு காரணத்தையும் கூறியபிறகே ஸ்ரீதர் பெருமூச்சு ஒன்றை விட்டார்.

அதன்பிறகுதான் கோபுவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த நிம்மதி அடுத்து வந்த சில தினங்கள் கூட நீடிக்கவில்லை. ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவருடைய மனைவி தேவசேனா போன் செய்து தகவலைக் கூறப் பதறிப்போன கோபு மருத்துவமனைக்கு விரைந்தார்.

ரசனையின் பிழை

பக்கவாதம் தாக்கி ஒரு பக்கம் செயலிழந்துவிட்டதாக கோபுவிடம் தெரிவிக்கப்பட்டபோது, கோபுவின் கண்கள் நிற்காமல் கொட்டிக்கொண்டே இருந்தன. பள்ளிக்காலத்தில் இருந்தே தனது பேனாவின் வித்தியாசமான கோணங்களால் (different strokes) ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியவனை stroke முடக்கி விட்டதே என்பதை கோபுவால் ஜீரணிக்க முடியவில்லை.

படைப்பாளி உணர்வுபூர்வமானவன், ஆனால், திரையுலகுக்காக தன்னையே தந்துவிட்ட ஸ்ரீதர், தன் கதையையும் கதாபாத்திரங்களையும் சக மனிதர்களைப் போலவே நேசிக்கும் உணர்வு கொண்டவன். தனது படைப்பு பிழையானதாக அவன் கருதிக்கொண்டதுதான் அவன் உணர்வுமிகுதிக்கான காரணமாகிவிட்டது என்ற வருத்தம் கோபுவுக்கு. அது படைப்பின் பிழை அல்ல; மாறிக்கொண்டுவந்த ரசனையின் பிழை.

ஸ்ரீதரின் மனைவி தேவசேனா துணிச்சலான பெண்மணி. ஸ்ரீதர் படுக்கையில் விழுந்தபோது அவர் இடிந்துபோய்விடவில்லை.

“கோபு. நீங்க அவருக்கு கம்பெனி மட்டும் கொடுங்க. மிச்சம் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்’’ என்றார். அப்போது ஒரு பக்கம் தொழிற்சாலை, இன்னொரு பக்கம் ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தால் எழுந்த நஷ்டங்கள் எனப் பல பிரச்சினைகள். தினசரி அலுவலகம் செல்வதுபோன்று கிளம்பிப்போய் ஸ்ரீதருடன் பேசிக்கொண்டு இருப்பார். காஞ்சனா, சச்சு, நாகேஷ் என்று பழைய நண்பர்களை வரவழைத்து ஸ்ரீதரை உற்சாகப்படுத்துவார்.

திடீரென்று காலம் வேகமாகச் சுழலத் தொடங்கிவிட்டது போன்ற ஒரு பிரமை. முப்பது வருடங்களாக வாழ்ந்த திருவல்லிக்கேணி வீட்டை விற்றுவிட்டு அடையாரில் இரண்டு பிளாட்களை வாங்கிக்கொண்டு அங்கே குடிபெயர்ந்தார் கோபு. அந்த வீட்டுக்கு வந்த ஸ்ரீதர், “நிம்மதியான வாழ்க்கைக்கு இது போதும்டா. கடல் போல வீட்டை வச்சுக்கிட்டு ஒருத்தருக்கொருத்தர் தொடர்பு இல்லாம என்னடா வாழ்க்கை” என்றார். உடல் தளர்ந்து நடை மாறிப்போனாலும் ஸ்ரீதரிடம் பழைய வேகம் குறையவில்லை.

தனது தி.நகர் வீட்டை விற்றுவிட்டு, எங்கே குடிபோகலாம் என்று ஸ்ரீதரிடம் அவருடைய மனைவி கேட்டபோது “கோபு இருக்கும் அடையார் பக்கம் போயிடலாம்” என்றாராம். கோபு இருந்த அடுத்த தெருவில்தான் பெசன்ட் நகர் ஸ்ரீதர் குடிபுகுந்த வீடு இருந்தது. நண்பனின் வீட்டு அருகேயே தனக்கு வீடு கிடைத்தது குறித்து ஸ்ரீதருக்கும் மகிழ்ச்சி.

அன்றாடம் ஸ்ரீதருடன் பழைய கதைகளைக் குதூகலமாகப் பேசிப் பொழுதைக் கழிக்கத் தொடங்கினார் கோபு. நாட்கள் இனிதே நகர்ந்தோடிக் கொண்டிருந்தன. அன்று ஸ்ரீதரின் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த கோபுவை வழிமறித்தார்கள் அவருடைய மகனும் மகளும்… “இன்னைக்கு நாங்களும் உங்ககூட வர்றோம்…!” என்றபோது அவர்கள் அப்படிக் கூறிய தொனியில் ஒளிந்திருந்த துயரத்தைக் கண்டுகொண்டார் கோபு…

(சிரித்ராலயா அடுத்தவாரம் முடியும்)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x