Last Updated : 28 Dec, 2018 10:52 AM

 

Published : 28 Dec 2018 10:52 AM
Last Updated : 28 Dec 2018 10:52 AM

திரை வெளிச்சம்: இழுத்தடிப்பதுதான் இவர்களின் வேலை!

தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 1997- கோவை கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு, அரவிந்த் என்பவர் இயக்கியிருந்த ‘தெளிவுப் பாதையின் நீச தூரம்’ கடந்த நவம்பரில் தடைசெய்யப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எம்.எஸ்.ராஜ் இயக்கியிருக்கும் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு டிசம்பரில் தடைவிதித்திருக்கிறது தணிக்கைக் குழு.

இதில் இயக்குநரும் தயாரிப்பாளரும் வழக்குத் தொடரும் நிலைக்குச் செல்ல, இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி தணிக்கைக் குழுவிடம் விளக்கம் கேட்டிருக்கிறது நீதிமன்றம். உண்மையில் ‘மெரினா புரட்சி’ விவகாரத்தில் என்னதான் நடந்துவருகிறது. அந்தப் படத்தின் இயக்குநரையே சந்தித்தோம்..

‘மெரினா புரட்சி’ படத்துக்குத் எதன் அடிப்படையில் தடை விதித்தார்கள்?

படம் தயாரான பிறகு அதை நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கு அனுப்பினோம். அங்கே, அதற்குச் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்தது. தொடர்ந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவில் பிரிமியராகத் திரையிட்டோம். கட்சி அரசியலைத் தாண்டி, மக்களின் உணர்வுகளைக் கலாச்சாரரீதியாகப் படம் பிரதிபலிக்கிறது எனப் படம் பார்த்த அமெரிக்க வாழ் தமிழர்கள் பாராட்டினார்கள்.

அதன் பிறகு, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை மையப்படுத்திய இந்தப் போராட்டத்தைப் பொங்கல் திருநாளில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்ற முடிவுடன் தணிக்கை வாரியத்துக்கு விண்ணப்பித்தோம். செப்டம்பர் 26-ம் தேதியிட்ட எங்கள் விண்ணப்பத்தை செப்டம்பர் 30-ம் தேதி ஏற்றுக்கொண்டு, அக்டோபர் 3-ம் தேதி தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்தார்கள்.

படம் முடிந்ததும் தணிக்கை அதிகாரி, “இப்படம் தனிநபர்களைத் தாக்குவதாக உள்ளது” என்றார். நான் தனி நபர்களைப் பற்றி வேண்டுமென்றே கூறவில்லை. தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் கூறியுள்ளேன். நீங்கள் கேட்டால் ஆதாரங்களை இப்போதே சமர்ப்பிக்கிறேன் என்றேன். “அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு அதிகாரபூர்வமாகத் தகவல்வரும் சென்று வாருங்கள்” என்று அனுப்பிவிட்டார்கள்.

பின்னர் அக்டோபர் 10-ம் தேதி எனக்குத் தணிக்கைத் துறையிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் எந்தக் காரணமும் குறிப்பிடப்படாமல், இப்படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்படுகிறது என்று மட்டும் கூறியிருந்தனர். தணிக்கைத்துறை அதிகாரிக்கு இப்படத்தில் செய்ய வேண்டிய மாறுதல்களைச் சுட்டிக்காட்டும் வாய்ப்பு இருந்தபோதும் அவர் என்னை ரிவைஸிங் கமிட்டிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கினார். அவர்கள் வெட்டுக்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருந்தோம்.

மறு தணிக்கையில் என்ன நடந்தது?

தணிக்கைத்துறையின் விதிகளை மீறுவதாகப் படம் இருக்கிறது என்ற குழுவின் ரிவைசிங் கமிட்டியின் தலைவர் கூறினார். விதி மீறல் இல்லை; போதிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் காட்சிகள் அமைத்துள்ளேன் என்று எவ்வளவோ எடுத்துக் கூறினேன். “ஆதாரங்கள் உண்மையா, பொய்யா என ஆராய நாங்கள் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்க முடியாது.

உங்கள் படத்துக்குத் தணிக்கை மறுக்கப்படுகிறது” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். என்னை வதைக்கும் விதமாக அக்டோபர் 17 அன்று திரைப்படத்தைப் பார்த்தவர்கள், நவம்பர் 9 அன்று மறுசீராய்வுக்குப் படத்தை அனுப்ப வேண்டும் என வேண்டுமென்றே காலதாமதமாக எனக்குத் தகவல் அனுப்பினார்கள்.

நான் ரீவைசிங் கமிட்டி தலைவரிடம் படத்தை எப்காட் எனப்படும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவுக்குப் படத்தை அனுப்பக் கோரினேன். ஆனால், என்னுடைய கோரிக்கையை ஏற்க மறுத்து மீண்டும் மறுசீராய்வுக்குப் படத்தை அனுப்புங்கள் எனக் கட்டாயப்படுத்தினார்கள்.

thirai-2jpgஎம்.எஸ்.ராஜ்

அவர்களது நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இழுத்தடித்து எங்களை இந்தப் படத்தைக் கைவிடச் செய்வதுதான் இவர்களது வேலையோ என எண்ண வைத்துவிட்டார்கள். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இன்னும் கொஞ்சம் போராடியிருந்தால் எப்காட் (film certification appellate tribunal) சென்றிருக்கலாமே, எதற்காக நீதிமன்றம் சென்றீர்கள்?

நான் எப்காட் போகலாம் என ரிவைசிங் கமிட்டி நோட்டீஸ் கொடுத்தால்தான் எப்காட்டில் எனது படத்தைக் காண்பித்து எனக்கன நீதியைப் பெற முடியும். ஆனால், திரும்பவும் மறுசீராய்வுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட வேண்டும் எனத் தணிக்கைத் துறை நோட்டீஸ் தந்ததால் அதை மீறி எப்காட் செல்ல வாய்ப்பும் இல்லை. அவர்களின் நோக்கம் கால தாமதத்தை உண்டாக்கி இழுத்தடிப்பதுதான். திரும்பத் திரும்ப மறுசீராய்வுக் குழுவுக்கு அனுப்புவதால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்.

இதேபோல் பல படங்களை நான்கைந்து முறை மறுசீராய்வுக் குழுவுக்கு அனுப்பி இழுத்தடிப்பது தணிக்கைக் குழுவுக்கு வாடிக்கையாகி வருகிறது. எனக்கான நீதி கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்தபிறகுதான் நீதிமன்றத்துக்குப் போனேன். தணிக்கைத் துறையிடம் முறையிட்டு 80 நாட்கள் ஆகியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றான பிறகுதான் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் உருவானது. தற்போது நீதிமன்றம், தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்குத் தணிக்கைத்துறை என்ன பதில் சொல்கிறது என்பதைப் பொறுத்து விசாரணையின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.

இவ்வளவு கடுமையைக் காட்டும் அளவுக்கு உங்கள் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஒரு விலங்குகள் நல அமைப்பு, செப்டம்பர் 28 அன்று தன் வழக்கறிஞர் மூலமாக எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் ‘எங்கள் அமைப்பைப் பற்றி ஊடகங்களிடம் பேசக் கூடாது. திரைப்படத்தில் எங்கள் அமைப்பைப் பற்றி காட்சியோ வசனமோ இருக்கக் கூடாது’ என அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதேபோல் அவர்கள் மும்பை மற்றும் சென்னையிலுள்ள தணிக்கைத் துறை அலுவகங்களுக்கும் அதே நோட்டீஸை அனுப்பியிருந்தனர்.

அந்த அமைப்பு கொடுத்த அழுத்தம் காரணமாகக்கூட எங்களுக்குத் தணிக்கை மறுக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது. அந்த அமைப்பு பற்றி மெரினா போராட்டத்தில் உண்மையாக மக்கள் என்ன பிரதிபலித்தார்கள் அது படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்குகொண்ட நவீன், ஸ்ருதி மற்றும் யூடியூப் புகழ் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவொரு வரலாற்றுப் பதிவு என்பதால் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துகொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x