

தீவிரவாத வன்முறையின் குரூரமான முகத்தை, உலகின் சமாதானப் புறா என வருணிக்கப்படும் நார்வே உட்படப் பல நாடுகள் சந்தித்துவிட்டன. ஆனால், தீவிரவாதம் என்றதும் நம் கண்களுக்கு உடனே தெரிவது மத அடிப்படைவாதத் தீவிரவாதம். அதைத் தாண்டிய தீவிரவாதங்களில் கடந்த கால் நூற்றாண்டுகளாக முகம் காட்டிவருவது ‘நியோ-நாசி டெர்ரரிஸம்’. ஹிட்லரின் நாசி கொள்கை மீது பற்றுக் கொண்ட தீவிர 'நியோ நாசிகள்' செய்யும் வன்முறை இது.
‘இழக்க ஏதுமில்லை’ என்றான பிறகு ஒரு பெண்ணின் அதிரடி ஆட்டமாக உங்களை அடித்து அமர வைத்துவிடும் ‘இன் த பேட்’ படத்தின் பின்னணியும் நியோ – நாசி தீவிரவாதம்தான். ஜெர்மனியின் ஹம்புர்க் நகரில் ட்ராவல்ஸ் அலுவலகம் நடத்தும் கணவன், ஆறு வயது மகன் ஆகிய இருவரையும் சற்று நேரத்துக்கு முன்பு பாசமுடன் முத்தமிட்டுத் திரும்பியிருந்தாள் கத்ஜா. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கணவனின் அலுவலகத்துக்குத் திரும்பும் அவளுக்குப் பேரிழப்பு காத்தி ருந்தது. நியோ நாசிகள் சிலர் நடத்திய குண்டுவெடிப்பில் கணவனும் மகனும் உருத் தெரியாத சதைத் துகள்கள் ஆகிவிடுகிறார்கள். காவல்துறை விசாரணை என்ற பெயரில் துழாவிக்கொண்டிருக்கையில் காத்ஜா தனது இழப்புக்குக் காரணமானவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதை டயானே குருகெர் என்ற சிறந்த நடிகையைக் கொண்டு குடும்ப ஆக்ஷன் நாடகமாகத் தந்திருக்கிறார் இயக்குநர். கலைப் படத்திலும் பழிவாங்கும் கதையா எனத் திகைத்து நிற்காமல் உங்களை அடித்து உட்கார வைத்துவிடும் திரைக்கதையும் நடிப்பும் படத்தில் உண்டு. கத்ஜாவாக நடித்திருக்கும் டயானே குருகெருக்குச் சிறந்த நடிகைக்கான விருது வழங்கிக் கவுரவித்திருக்கிறது கான். இந்தப் படத்தை தேவி திரையரங்கில் இரவு 7 மணிக்குக் காணத் தவறாதீர்கள்.