

இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஓர் அறிவியலாளன் சந்திக்கும் சவால்களும் விபரீதங்களுமே ரெப்லிகாஸ் திரைப்படம்.
அரசின் மருத்துவ ஆய்வுக் கூடத்தில் பணியாற்றும் நரம்பியல் நிபுணனுக்கு அவனது பணியும் குடும்பமுமே உலகம். அவன் நேசிக்கும் மனைவி குழந்தைகள் என 4 பேர் எதிர்பாரா விபத்தொன்றில் சிக்கி இறந்து போகின்றனர். குடும்பத்தினர் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவன் தனது ஆராய்ச்சி மற்றும் அறிவியலின் துணைகொண்டு அவர்களுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கிறான். அல்சைமர் நோயாளிகளுக்கான அதுநாள் வரையிலான தனது ஆய்வினை இதற்குப் பயன் படுத்துகிறான்.
இயற்கைக்கு எதிரான இந்த முயற்சியை அரசுக்குத் தெரிவிக்காது அவன் தொடரும்போது புதிய பிரச்சினைகள் முளைக்கின்றன. மரணமடைந்தவர்களின் நினைவுகளை மீட்டு ரோபோக்களுக்கு பதியும் முயற்சி மருத்துவக் காரணங்களால் விபரீதமாகிறது. இறந்த நால்வரில் சிலரை மட்டுமே இம்முறையில் உயிர்ப்பிக்கலாம் என்றொரு சவாலும் முளைக்கிறது. அவனது மீட்பர் அவதாரம் முழுமையாகப் பலித்ததா என்பதே மீதித் திரைப்படம்.
ஸ்டீபன் ஹமெல் என்பவர் எழுதிய அறிவியல் புனைவை அடிப்படையாக வைத்து உருவான ரெப்லிகாஸ் திரைப்படத்தை, ஜெஃப்ரி இயக்கி உள்ளார். கீனு ரீவ்ஸ் பிரதான பாத்திரத்தில் தோன்றுவதுடன் தயாரிப்பிலும் இணைந்திருக்கிறார். அலைஸ் ஈவ், ஜான் ஆரிட்ஸ் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் ’ரெப்லிகாஸ்’ ஜனவரி 11 அன்று வெளியாகிறது.
ட்ரைலரைக் காண: https://bit.ly/2Rgrh3P