பாதை மாறிய பயணம்!- நேர்காணல்: பாலாஜி சக்திவேல்

பாதை மாறிய பயணம்!- நேர்காணல்: பாலாஜி சக்திவேல்
Updated on
2 min read

போட்டி, பரபரப்பு, வணிகம் எனப் படர்ந்து விரியும்   திரைத்துறையில் பெரிதான சமரசமின்றி  நிதானமாக, யதார்த்தமாக அடுத்தடுத்த படங்களைத் தருபவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். எப்போதும்போல இம்முறையும் புதிய முகங்களை வைத்து ‘யார் இவர்கள்?’ என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

‘வழக்கு எண் 18/9’ படத்துக்குப் பிறகு இவ்வளவு நீண்ட இடைவெளி எடுத்துக்கொள்ள என்ன காரணம்?

ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கூர்ந்து கவனிக்கிறாங்க.  ‘இந்த பாலாஜி சக்திவேல் அதிகமா படம் பண்றதில்லையே?’ன்னு எப்பவுமே மக்கள் கேள்வி கேட்கிறதில்ல. ஆனா, ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல படம் கொடுக்கும்போது, அவங்களோடு 10-ம் வகுப்பில் படித்த பழைய நண்பனைத் திரும்பவும் பார்த்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது மாதிரி என்னோட முந்தைய படங்களைப் பற்றிப் பேசுறாங்க. என்னமோ தெரியல, வியாபாரரீதியான படங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனாலதான் நிதானமாக ஓடுறேன்.

விஜய்சேதுபதியைப் போன்று நடிப்புக்காகப் பெயர்பெற்ற நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். நீங்களோ, படத்துக்குப் படம் புதியவர்களுக்குப் பயிற்சி அளித்து  அறிமுகப்படுத்துகிறீர்களே?

வயது, முக அமைப்பை வைத்து என் கதாபாத்திரத்துக்கான நபர்களைத் தேர்வு செய்கிறேன். எனக்கு ஒரு ஆள் முழுவதுமாக அப்படியே நடிகராக மாறி நடிக்க ணும்னு இல்லை. அவர்களது தோற்றமும் பாதி பொருத்தமாக இருக்க வேண்டும்.   நடிப்புக்காக மெனெக்கெடல்கள் கூடாது. அதனால்தான் என் பார்வையில் ஊரில் இருப்பவர்கள் எல்லோரையுமே நடிகர்களாகப் பார்ப்பேன்.  புதிய முகங்களை எனக்கு ஏற்ற மாதிரி வடிவமைப்பது திருப்தியாக இருக்கு. அதற்காக நடிப்புக்காக பெயர் பெற்ற நடிகர்கள் பக்கம் போக மாட்டேன் என்பதெல்லாம் இல்லை.  ‘சாமுராய்’,  ‘காதல்’ என என்னோட படங்களில் அப்படிப் பல நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறேன்.

அப்படியென்றால் முன்னணி நடிகர்களை வைத்து நீங்கள் படம் இயக்கப் போவதில்லையா?

முன்னணி நடிகர்கள்  ஒருவித இமேஜ் சார்ந்தவர்கள். அவர்கள் வீட்டில் இருப்பதைப் போல் திரையில் இருக்க முடியாது. ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் ரசிகர்களே அவர்களை இப்படித்தான் பார்க்க வேண்டும் என விரும்புகிறார்கள்.  அப்படிப்பட்டவர்களை உடைத்து சாதாரணமானவர்களாக வடி வமைப்பது கடினம்.  அப்படியும் அதை உடைத்துவிட்டு அதற்கேற்றமாதிரி ஒரு உண்மை சம்பவம் அமையும்போது குறிப்பிட்ட நடிகரும், ‘இமேஜ் பார்க்க மாட்டேன்’ என வரும்போது கண்டிப்பாகத் தொடுவேன்.  அதுவரைக்கும் இமேஜ் இல்லாத நடிகர்களை எனது கதாபாத்திரங்களாக வைத்து ஓடிக் கொண்டிருக்கலாம் என்பது என் திட்டம்.

அடுத்து வெளிவரவிருக்கும் ‘யார் இவர்கள்?’ என்ன கதை?

மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவன் தான் செய்யாத தவறுக்காக எதிர்கொள்கிற விஷயமே ‘யார் இவர்கள்?’ திரைப்படம்.

‘ரா...ரா... ராஜசேகர்’ திரைப்படம் என்ன ஆயிற்று?

எப்போதுமே என்னோட பேப்பரை நான் திருத்திவிட்டு அடுத்த தேடலுக்குப் போய்விடுவேன். தேர்வு முடிவைத் தயாரிப்பாளர்கள்தான் வெளியிட வேண்டும்.  ‘ரா...ரா...ராஜசேகர்’, ‘யார் இவர்கள்?’ ஆகிய படங்கள் தயாரிப்பாளர்களின் முடிவுக்காகக் காத்திருக்கின்றன. ‘ரா...ரா... ராஜசேகர்’ இன்னும் ஒரு வாரம் மட்டும் படப்பிடிப்பு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் லிங்குசாமி சில பிரச்சினைகளில் இருந்தார். இப்போது அவர் இயக்கிய ‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு பிரச்சினைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகி வருகின்றன. எப்போது வந்தாலும் அது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் அப்படம் குறித்த மற்ற அறிவிப்புகள் வரும்.

உங்களது நெருக்கமான நண்பர்கள் ஷங்கர், லிங்குசாமி மாதிரியான இயக்குநர்கள் கமர்ஷியல் களத்தில் நிற்கும்போது உங்களின் பாதையே வேறாக இருக்கிறதே?

எனக்குத் தொடக்கத்தில் இருந்தே ஒரு எண்ணம் இருக்கு. மக்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு படம்தான் நல்ல சினிமாவாக இருக்க முடியும்.  திரை மொழியின் வெற்றியே மக்களிடம் அது எளிதாக சேர்வதுதான். பென் – ஹர் (Ben – Har)  மாதிரியான ஒரு பிரம்மாண்டப் படத்தைப் பார்த்த நேரத்தில் மலையாள இயக்குநர் ஜி.அரவிந்தன் இயக்கிய ‘சிதம்பரம்’ என்ற படத்தையும் பார்த்தேன். சினிமாவை இப்படியும் எடுக்க முடியும்? அப்படியும் எடுக்க முடியும் என்ற புரிதல் அப்போது வந்தது. அடுத்தடுத்து பல ஈரானியப் படங்களையும் பார்க்கிறேன். அது ஒருவிதமான புரிதலை உண்டாக்குச்சு.  நானே முதலில் விக்ரமை வைத்து ‘சாமுராய்’னு ஒரு படம் கொடுத்தேன். அது சரியா வரல. அடுத்து ‘காதல்’னு ஒரு படம் எடுத்தேன்.  அந்த களம் எனக்குச் சரளமாக வந்தது. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.  ஷங்கர் மாதிரியான நண்பர்கள் பார்த்த போது, ‘யோவ் பாலாஜி. உனக்கு இது எளிதா கைகூடுது. கெட்டியா பிடிச்சுக்கோ?’’னு சொன்னாங்க. அதுவும் சரிதான்னு பிடிச்சிக்கிட்டேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in