

விமல் - அஞ்சலி நடிப்பில் வெளியான ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கியவர் ராஜசேகர். அவரது இயக்கத்தில் ஜீவா-அருள்நிதி இருவரும் நண்பர்களாக நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார் ஜீவாவின் அண்ணன் ‘ஜித்தன்’ ரமேஷ். நட்பையும் காதலையும் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மஞ்சிமா மோகன். சிம்புவுடன் அவர் நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துவிட்டபோதும் மஞ்சிமா மீது இயக்குநர்களின் கவனம் திரும்பவில்லை. இதனால் ‘புகழேந்தி என்னும் நான்’ ‘தேவராட்டம்’ போன்ற சிறிய படங்களில் துணிந்து நடித்துவரும் மஞ்சிமா, ஜீவா - அருள்நிதி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம்.
ராஜாவுக்காக இரு தினங்கள்!
தமிழ்த் திரையிசைக்கு இளையராஜா அளித்த பங்களிப்பைக் கவுரவம் செய்யும்விதத்தில் ‘இசையராஜா-75’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமான இசைவிழா ஒன்றை சென்னையில் நடத்துகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இளையராஜா தனது இசைக்குழுவுடன் பங்கேற்றுப் பாடும் இவ்விழாவில் தென்னிந்தியப் படவுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்காக விழா நடக்கவிருக்கும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் படப்பிடிப்பை முழுவதுமாக ரத்து செய்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.
கார்த்தியின் ஆக்ஷன் முகம்
‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்துள்ள கார்த்தியை அடுத்து இயக்குகிறார் ‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றிருக்கும் லோகேஷ் கனகராஜ். கதாநாயகி இல்லாத இப்படத்தில் ‘அஞ்சாதே’ நரேன் முக்கிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னையிலும் திருநெல்வேலியிலும் நடக்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதை. கார்த்தியை முழுமையான ஆக்ஷன் நாயகனாக ஆக்கும் படம் என்கிறது இயக்குநர் வட்டாரம். இதற்காகச் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க ஸ்டண்ட் இயக்குநர் அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
கோலார் தங்க வயல்!
கர்நாடகா வாழ் தமிழர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்தது கோலார் தங்க வயல். அதன் பின்னணியில் நடக்கும் கதையை, ‘கே.ஜி.எஃப்’ (Kolar Gold Factory) என்ற தலைப்பில் இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல். கன்னட ‘ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடித்திருக்கும் இந்தப் படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் 3டியில் உருவாகியிருக்கிறது இந்நிலையில் இந்தப் படத்தைக் தமிழில் தனது பட நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார் நடிகர் விஷால்.
அழகிய வில்லி!
‘இந்தியன்-2’ பட வேலைகளில் விறுவிறுப்பாக இறங்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘இந்தியன்-2’ படத்தின் திரைக்கதை தயாராகிவிட்டது. “ எனது திரைவாழ்வின் கடைசிப் படம் இதுதான் என கமல் பிரகடனம் செய்திருக்கும் இந்தப் படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் கமலுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு வில்லி போன்ற எதிர்மறைக் கதாபாத்திரம் என்று இயக்குநர் வட்டாரத்திலிருந்து நம்பகமான தகவல் கிடைக்கிறது. எதிர்மறைக் கதாபாத்திரம் என்பதாலேயே நயன்தாரா சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடித்து வந்தார் என்றும் அவருக்காகக் காத்திருக்காமல் காஜல் தேர்வு செய்யப்பட்டார் என்றும் தெரிகிறது.