

பனிப்பாறைகள் சூழ் தேசமான ஐஸ்லாந்தில் மனிதர்களே குறைவுதான். அத்தகைய பிரதேசத்தில் திரைத் துறையும் இயங்கிவருகிறது என்பதே பலருக்குப் புதிய செய்தியாகத்தான் இருக்கும். உலக அரங்கில் அங்கீகாரம் பெற்ற பல திரைப்படங்கள் அங்கே உருவாகியிருக்கின்றன.
1980-ல்தான் தனக்கெனத் தனித் திரைத் துறையை நிறுவியது ஐஸ்லாந்து. அதிலும் கடந்த பத்தாண்டுகளாகத்தான் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அங்கே படங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. தங்களுடைய தேசத்தில் படப்பிடிப்பு நடத்துபவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடி என்று ஐஸ்லாந்து சலுகை காட்டுவதால் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ட்வெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ், லூக்காஸ் போன்ற பெரிய படநிறுவனங்கள் அங்கே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.
அப்படி உருவானவைதான் ‘ஸ்டார் வார்ஸ்: ரோக் ஒன்’, ‘ப்ரோமெதஸ்’, ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் வால்டர் மிட்டி’ உள்ளிட்ட பல படங்கள்.
ஹாலிவுட்டைக் கலக்கும் நடிகர்கள்
இதற்கும் சற்று முன்பாக அந்த நாட்டின் திரைப்பட வரலாற்றைப் புரட்டினால், 1966-ல் அங்குத் தோற்றுவிக்கப்பட்ட தேசியத் தொலைக்காட்சி நிலையத்தில்தான் ஐஸ்லாந்தின் திரைமொழி பதியம்போடப்பட்டது. அதே ஆண்டு அங்குத் தொடங்கப்பட்ட இயக்குநர்கள் சங்கம், திரையுலகம் சார்ந்த பல்வேறு தொழில்நுட்பப் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியது. அதில் பயிற்சிபெற்ற ஐஸ்லாந்து நடிகர்களில் பலர், இன்று ஹாலிவுட்டில் புகழ்பெற்றிருக்கிறார்கள்.
அதேநேரம் ஐஸ்லாந்துக்கு வெளியே திரைக்கல்வி பயின்று சொந்த நாடு திரும்பிய புதுமுக இயக்குநர்கள், உத்வேகத்துடன் 1970-களில் ஐஸ்லாந்து நாட்டின் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இத்தகைய கலைஞர்கள் ஒருங்கிணைந்து படைத்த திரைப்படங்கள் வெகுவிரைவில் உலகக் கவனம் பெறத் தொடங்கின. அவற்றில் ஒன்று, 1991-ல் வெளியான ‘சில்ரன் ஆஃப் நேச்சர்’ திரைப்படம்.
சிறந்த அயல்நாட்டு சினிமாவுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பிறகு உலக சினிமா காதலர்களைக் கவர ஐஸ்லாந்துத் திரைப்படங்கள் தவறுவதில்லை. ஐஸ்லாந்து சினிமாவுக்கான ‘கல்ட்’ ரசிகர்கள் உருவானது இந்த பின்னணியில்தான்.
இதற்கிடையில் ஐஸ்லாந்தின் சிறந்த சினிமாக்களைக் கோத்துத் தர வருகிறது, ‘ஐஸ்லாந்து திரை விழா- 2018’. சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’ திரைப்படச் சங்கம், ஐஸ்லாந்தைச் சேர்ந்த திரைப்பட மையம், புது டெல்லியில் உள்ள ஐஸ்லாந்து தூதரகம், சென்னையில் உள்ள ஐஸ்லாந்து தூதரகத்தின் காலச்சாரக் கிளை அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து மூன்று நாள் ஐஸ்லாந்துத் திரைப்பட விழாவை நடத்துகிறது.
சென்னை, ரஷ்யக் கலாச்சார மையத்தில் நவம்பர் 9, 10 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்களின் மாலைப் பொழுதுகளில் இந்தத் திரையிடல் நடைபெற இருக்கிறது.
எல்லாமே சொதப்பலா?
தன்னுடைய குழந்தைகளைச் சமாதானப்படுத்த முயலும் தந்தையின் கதை, ‘வல்கனோ’ (Volcano). குழந்தைகளிடம் பாசமும் பரிவும் காட்டத் தவறிய தந்தை ஹேனஸ், பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார். அந்த நேரத்தில் மனைவி படுத்தபடுக்கையாக ஆகிவிட என்ன செய்வது என்று புரியாமல் குழந்தைகளின் பாசத்துக்காக ஏங்கிப்போகிறார்.
கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல நண்பர், அன்பான பெற்றோர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டக் கச்சேரியில் பாடும் வாய்ப்பு இவை அனைத்தும் பிரின்ஹில்டருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் அவளுக்கு நட்பு வட்டத்தில் வேறு சிக்கல்கள் உருவாகின்றன. அதை எப்படி அவள் வென்றெடுக்கிறாள் என்பதே, ‘ஃபேஸ் டு ஃபேஸ்’ (Face to Face).
நூற்றுக்கணக்கான சுயமுன்னேற்றப் புத்தகங்களை எழுதி பேரும்புகழும் பெற்றவர் சமூகவியலாளர் குன்னார். ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் முடித்து வீடு திரும்பும் அவருடைய மகன், தன்னுடைய காதலியையும் உடன் அழைத்துவருகிறான். இவர்களை எதிர்கொள்ளும்போது குன்னாரின் வாழ்க்கை ரகசியங்கள் வெளிப்படுவதைச் சொல்லும் படம், ‘தி ஹோம் கம்மிங்’ (The Home coming).
உற்றார் உறவினர்களை எல்லாம் விட்டு விலகி, ஐஸ்லாந்தில் உள்ள குக்கிராமம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார் ஹுகி. ஒருநாள் அவருடைய தந்தை அவரை காண வருவதாகத் தொலைபேசியில் தெரிவிக்கிறார். முதலில் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஹுகி பிறகு சங்கட மனநிலைக்குச் சென்று வருந்துவதுதான், ‘பேரிஸ் ஆஃப் தி நார்த்’ (Paris of the North).
பால்ய கால நண்பர்கள் இருவர் ஐஸ்லாந்து முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடிவெடுக்கிறார்கள். ஆனால்,எதுவுமே திட்டமிட்டபடி நடக்கவில்லை. எல்லாமே சொதப்பல்தான் என்பதைச் சித்திரிக்கிறது ‘ரிவர்ஸ்’ (Reverse) என்றத் திரைப்படம்.