Published : 02 Nov 2018 11:27 AM
Last Updated : 02 Nov 2018 11:27 AM

மின்னல் ஒரு கோடி

‘மாயாவி’ தமிழ்த் திரைப்படத்தில் ஜோதிகா, நடிகை ஜோதிகாவாகவே நடித்திருப்பார். அந்தப் படத்தில் நாயகனின் நண்பராக வரும் சத்யன், ஜோதிகாவைப் பார்த்து “நான் எல்லாம் சிம்ரன் அக்காவோட போஸ்டரையே மூணு மணி நேரம் பார்ப்பேன்” என்பார்.

இந்த வசனத்தில் சொல்லப்படுவதுபோல் சிம்ரனின் போஸ்டரைப் பார்த்தே சொக்கிப்போகும் ஏராளமான ரசிகர்கள் ஒரு காலம்வரை இருந்தனர். அந்தப் படம் வெளியான 2005-ம் ஆண்டில் சிம்ரன் திரையுலகிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தார். அதற்கு முந்தைய 7-8 ஆண்டுகளில் அவர் முன்னணிக் கதாநாயகியாகவும் ஆளுமைமிக்க நடிகையாகவும் தமிழ்த் திரையை ஆக்கிரமித்திருந்தார். பெண்களின் நடிப்புத் திறமைக்கு மீண்டும் மரியாதை பெற்றுத் தந்தவராக அடையாளம் பெற்றிருந்தார்.

ஒரு கோடி மின்னல்

1990-களின் இடைப் பகுதியில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், அர்ஜுன் என முன்னணி நடிகர்கள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள் ஆகிக்கொண்டிருந்ததால் கதாநாயகிகள் வெறும் அழகுப் பதுமைகளாகச் சுருங்கிக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் 1997-ல் வெளியான ‘வி.ஐ.பி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிலும் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களிலும் காலடி எடுத்துவைத்தார் சிம்ரன்.

அந்தப் படத்தில் இவரும் ஒரு ‘அழகுப் பதுமை’ யாகத்தான் வந்துபோனார். ஆனால், அதில் வெளிப்பட்ட அவரது நடனத் திறமை ரசிகர்களை வியக்கவைத்தது.

‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என்று புகழப்பட்ட பிரபுதேவாவுக்கு ஈடுகொடுத்து அவர் நடனம் ஆடிய விதத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களை ‘மின்னல் ஒரு கோடி’யாகத் தாக்கினார். விஜய், சிம்ரன் வருகைக்குப் பிறகு தான் நாயக, நாயகியரின் நடனத் திறமை உன்னிப்பாகக் கவனிக்கப்படத் தொடங்கியது என்று சொல்லலாம்.

‘ஒல்லி’ நட்சத்திரம்

90-களில் நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இல்லை. அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த குஷ்பு, மீனா, ரோஜா, சுகன்யா எனப் பலரும் ‘ஒல்லி’ என்று சொல்லத்தக்கவர்கள் அல்ல. ஒல்லியான உடல்வாகுடன் தமிழ் சினிமாவில் முதல் இடத்தை அடைந்து, சில ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தியவர் சிம்ரன்தான்.

மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாலா. ஃபேஷன் டிசைனராக மாறவே அவர் விரும்பினார். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் ‘சூப்பர் ஹிட் முகாபுலா’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பாலிவுட்டின் கதவுகள் அவருக்குத் திறந்தன. 1995-ல் வெளியான அவரது முதல் படம் ‘சனம் ஹர்ஜாய்’, வந்த சுவடே தெரியாமல் போனது.

1996 இறுதியில் வெளியான ‘தேரே மேரே சப்னே’ அவரது முதல் வெற்றிப் படம். இடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘இந்திரபிரஸ்தம்’ படத்திலும், கன்னடத்தில் ஷிவ் ராஜ்குமாருடன் ‘சிம்ஹடா மாரி’ படத்திலும்  ‘அப்பாய் காரி பெல்லி’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகுதான் அவரது தமிழ் அறிமுகம் நிகழ்ந்தது. அதே ஆண்டில் விஜய்யுடன் ‘ஒன்ஸ் மோர்’, அப்பாஸுடன் ‘பூச்சூடவா’ ஆகிய படங்களில் நடித்தார்.

மணி ரத்னம் தயாரித்து வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுக நாயகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அதில் ‘மனம் விரும்புதே உன்னை’ என்ற கர்னாடக இசைப் பாணியில் அமைந்த பாடலில் வெளிப்பட்ட அவரது அழகும் நடனத் திறனும் தமிழ் ரசிகர்களை சொக்க வைத்தன. அதே படத்தில் ‘எங்கெங்கே’ பாடலில் ஓடிக்கொண்டே இருந்த அவரைக் காதலுடன் துரத்திய சூர்யாவுடன் தமிழக இளைஞர்கள் பலரும் இணைந்துகொண்டனர்.

சிம்ரனிடம் நடிப்புத் திறமையை 1999-ல் வெளியான இரண்டு படங்கள் உறுதிப்படுத்தின. விஜய்யுடன் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் பார்வையை இழந்தவராகவும் அஜித்துடன் ‘வாலி’ படத்தில் கணவனின் அண்ணனால் மோகிக்கப்படுபவராகவும் அவர் சிறப்பாக நடித்திருந்ததாக ரசிகர்களும் விமர்சகர்களும் ஏற்றுக்கொண்டனர். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துக்குச் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார்.

நடனத்துக்கு கெளரவம்

முன்னணி நடிகையாக இருந்தபோதே ‘அந்தப்புரம்’ என்ற தெலுங்குப் படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடினார். அதுவரை ‘ஐட்டம்’ பாடல்களில் கவர்ச்சி நடிகைகளும் வாய்ப்பிழந்த நடிகைகளுமே தோன்றிவந்தனர். அசாத்திய நடனத் திறமைகொண்ட சிம்ரன், அது போன்ற ஒரேயொரு பாடல்களுக்கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத்தந்தார். ‘யூத்’ படத்தில் ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலில் விஜய்யுடனும், ‘பிதாமகன்' படத்தில் ‘தகதக வென ஆட வா’ பாடலில் சூர்யாவுடனும் அவர் ஆடிய நடனம் ரசிகர்களையும் ஆட்டம்போட வைத்தது.

தொடர்ந்து ‘தமிழ்’, ‘பஞ்சதந்திரம்’, ‘ரமணா’, ‘அரசு’, ‘நியூ’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தன் சிறுவயது நண்பர் தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொள்வதாக சிம்ரன் அறிவித்தார்.

ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் வந்தவருக்குக் கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது இன்னிங்ஸில் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘வாரணம் ஆயிரம்’ படத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இப்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுடனும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் முதல்முறையாக ரஜினிகாந்துடனும் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு இன்னும் மேம்பட்ட இடத்தைப் பெற்றுத்தரலாம்.

s4jpg

காலம் கடந்துவிடவில்லை

2010-க்குப் பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட படங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன, அவற்றில் கணிசமானவை வெற்றி பெறுகின்றன. நயன்தாரா புகழ் ஏணியின் உச்சியில் இருப்பதற்கு இப்படிப்பட்ட படங்களில் நடிப்பதும் முக்கியக் காரணம். 2000-க்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்த கதாநாயகியாக இருந்திருந்தால் சிம்ரனும் நயன்தாராவுக்கு இணையாகவோ அதற்கும் மேலான இடத்திலோ இருந்திருக்கக்கூடும்.

இருந்தாலும், சிம்ரன் கடந்த காலக் கனவுக்கன்னியாகத் தேங்கிவிட வேண்டியதில்லை. தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் அவர், தன் திறமைக்கு அணி சேர்க்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து மீண்டும் ஒரு வெற்றிப் பயணத்தைத் தொடங்குவதற்கான காலம் கடந்துவிடவில்லை. அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்தால், இதுவரை அவருக்குக் கிட்டாத சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x