

பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் திரைக்குக் கொண்டுவருவதுதான் பாலிவுட்டின் தற்போதைய போக்கு. ‘பத்மாவத்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ திரைப்படங்களின் வரிசையில் தற்போது, ‘மணிகர்ணிகா’ திரைப்படத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்.
இந்தப் படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் கங்கனா ராணாவத் நடிக்கிறார். ஜீஷு சென்குப்தா, அதுல் குல்கர்ணி போன்ற நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். ஏற்கும் கதாபாத்திரம் எதுவாயினும் அதுவாகவே மாறிவிடத் துடிக்கும் நடிப்புத்தாரகை கங்கனா. அப்படிப்பட்டவரை ராணி லக்ஷ்மிபாய் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் கிரிஷ் தேர்வுசெய்தபோது பாலிவுட் வியந்தது.
போர்க்களக் காட்சிகளில் வாள் வீச்சு, குதிரையேற்றம் உள்ளிட்ட கடினமான ஆக்ஷன் காட்சிகளில் கங்கனாவால் சமாளிக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். கிண்டல் அடித்தவர்களின் வாயை அடைக்க வாள் பயிற்சி எடுத்தும், சிறப்புச் சண்டைப் பயிற்சி எடுத்தும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் என்று சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் முன்னோட்டத்துக்குப் பின் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள்.
டீசருக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் ராணி லக்ஷ்மி பாயின் 190-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கங்கனா, “ராணி லக்ஷ்மி பாய் நாட்டின் உண்மையான தேசப் பற்றாளர். அவர் நவீன யுக இந்தியாவில் நம்பிக்கை வைத்துதான் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார்.
அவர் தன் நாடு மேன்மையானதாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். அவரது கனவை நனவாக்குவதுதான் அவருக்கு நாம் செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி” என்று கூறியிருக்கிறார். ‘மணிகர்ணிகா’ 2019 ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கிறது.