Published : 30 Nov 2018 10:28 am

Updated : 30 Nov 2018 10:28 am

 

Published : 30 Nov 2018 10:28 AM
Last Updated : 30 Nov 2018 10:28 AM

சி(ரி)த்ராலயா 44: கடத்தப்பட்ட எழுத்தாளர்!

44

கடற்கரைக்கு ஒரு நடைபோய் வந்துவிடலாம் என்று இளவெயிலில் கிளம்பினார் கோபு. வீட்டைவிட்டு வெளியே வந்தவரை, முறுக்கு மீசையுடன் வாட்டசாட்டமாக வந்த நபர் மிரட்டும் தொனியில் ‘’கோபு சார் வீடுதானே இது?” என்று விசாரித்தார்.

“ஆமா... ஆனா என் மனைவி பேருலதான் வீடு இருக்கு!” என்று மீசை ஆசாமிக்குப் பயப்படாமல் நக்கலாகப் பதில் கூறினார்.


“அடடே..! நீங்கதான் கோபு சாரா! வணக்கம். என் பெயர் ஷண்முகம். ஏ.எல் நாராயணன்கிட்டே உதவியாளரா இருந்திருக்கேன். என்னை மீசை ஷண்முகம்ன்னு கூப்பிடுவாங்க'' என்று தனது நிஜவாழ்வின் கதாபாத்திரத்தைக் கோபுவுக்கு அறிமுகப்படுத்தினார். வந்த விஷயம் என்ன என்று கேட்பதற்குள், ஷண்முகம் முந்திக்கொண்டார்,''எனக்குத் தெரிஞ்ச பெண்மணி இருக்கார். உங்க ‘காசேதான் கடவுளடா’ படம் பார்த்து அவங்களுக்குப் பைத்தியம்...” என்றார். கோபு அதிர்ந்துபோய்.. “அய்யய்யோ… சிகிச்சை எடுத்துக்கிறாளா, இல்லையா?” என்று கேட்க, ஷண்முகம் சிரித்த சிரிப்பில் பார்த்தசாரதி கோயில் கோபுரப் புறாக்கள் பயந்துபோய்க் கூட்டமாகச் சடசடத்து அமர்ந்தன.

“சார் உங்க படங்கள்ன்னா அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னு சொல்ல வந்தேன். அந்தம்மா... உங்களை வச்சு ஒரு படம் பண்ணனும்னு நினைக்கிறாங்க. கையோட உங்களை இட்டாரச் சொன்னாங்க…” என்று காரைக் காட்ட, அதற்குள் அடியாட்கள் போல அமர்ந்திருந்த இருவரைப் பார்த்த கோபு “ஏதுவும் அசம்பாவிதம் நடந்துடாதே?” என்று கேட்டார்.

“போங்க சார்... உங்களுக்கு காமெடிசென்ஸ் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு!” என்று முறுக்குமீசைக்காரர் இம்முறை முறுக்கு மீசைக்காரியாக நாணியபடி கோபுவுக்கு வர விருப்பம் இருக்கிறதா என்றுகூடத் தெரிந்துகொள்ளாமல் உரிமையுடன் கையைப் பிடித்து காரில் ஏற்றினார்.

கோபு காரில் ஏறியதும் சும்மா இருக்க மாட்டாமல் ஒரு உண்மையை உடைத்தார் ஷண்முகம். “அந்தம்மாவோட புருஷன் எழுதிய கதை ரெடியா இருக்கு. அதை வெச்சுத்தான் நீங்க ஸ்ரிப்ட் எழுதி டைரக்ட் பண்ணனும்” என்றதும் “அடப்பாவி..! அசம்பாவிதம் எதுவும் நடக்காதுன்னியே... இதைவிடப் பெரிய அசம்பாவிதம் என்ன வேணும்… என்னை பீச்சுல இறக்கிவிட்டுடு என்று காரின் டோரை நோக்கி இறங்க நகர்ந்தவரை அந்தத் தடிமனான ஆட்கள் “சும்மா ஒக்காரு சாரே… முதல்ல கதைய கேளு… அப்பால கூவு” என்று கண்களாலேயே மிரட்டி அமரவைக்க ஒரு பொறிக்குள் சிக்கிய எலிபோல் பரிதவித்தார். நல்லவேளையாக அடுத்த 15 நிமிடத்தில் அந்தப் பெண்மணியின் வீட்டின் முன் கார் நின்றது.

கோபுவுக்கு முன்பே இறங்கி ஓடிய ஷண்முகம் “யக்கா! டைரெக்டரு வந்துட்டாரு…'' என்று கோபுவைக் கைப்பிடியாக இழுத்துச் சென்று அறிமுகம் செய்தார். கோபுவை ஏற இறங்கப் பார்த்தார் அந்த அம்மையார். “இதுவா கோபு? ஸ்ரீதரோட சோத்தாங்கை... பெரிய ஷ்டைலு பார்ட்டியா, பாண்டு, ஸ்லாக் எல்லாம் போட்டுக்கினு சோக்கா இருக்கும்ன்னு பார்த்தா இன்னா இது... வேட்டியைக் கட்டிகினு, தவுசு புள்ள கணக்கா வெத்தல கொதப்பினு வந்திருக்கு!?'' என்று மூக்கில் விரலை வைத்தார்.

தான் எழுதிய மெட்ராஸ் பாஷை தனக்கே எதிரியாகி விட்டதை அந்தக் கணத்தில் உணர்ந்து திக்குமுக்காடினார் கோபு.

அமெரிக்க மாப்பிள்ளை

“சார்… எம் பேரு அமுதா… அழகாக்கீதா?'' என்றபடி “இவரு என் வூட்டுக்கார் கணேசன். இவரு சூப்பரா ஒரு கதையை வச்சிருக்காரு. உன்னை வச்சு அதை டிரெக் ஷன் பண்ணிக்கலாம்னு இருக்கோம். அதான் உன்னை இட்டுக்கினு வரச் சொன்னேன்'' என்றார் அமுதா.

கணேசன் கதை சொன்னார். அமெரிக்காவிலிருந்து வருகிறான் ஒரு வாலிபன். அவனுக்குப் பெண் தர அவனது அத்தை தன் பெண்ணோடு வந்து இறங்க, அவனது மாமி குடும்பமும் தங்கள் பெண்ணோடு வந்து இறங்குகிறது. அமெரிக்க ரிட்டன் மாப்பிள்ளை, இந்த இரு குடும்பங்களிடையே சிக்கித் தவிக்க, அவனோ தன் காதலியை மணமுடிக்க, அதனால் வரும் பிரச்சினைகளைச் சித்தரிக்கும் கதை.

“இவர் சொன்ன கதை இடைவேளை வரைக்கும்தான் வரும். கதை போதாது. எனவே, கொஞ்சம் அதை வளர்த்து நகைச்சுவையைச் சேர்த்தால் நல்லா இருக்கும்'' என்றார் கோபு.

“நீ எத்தை வேணும்னாலும் சேத்துக்க… யாரை வேணுமானாலும் சேத்துக்க… படம் ரீஜென்ட்டா (டீசென்ட்) இருக்கனும்.''- அமுதா கூறினார். கோபுவுக்காக ராஜ்கபூர் விமானத்தை நிறுத்தியது ஒரு காலம் என்றால், படத்தை நன்றாக எடுக்காவிட்டால், இந்த அமுதா கோபுவின் மானத்தைப் பறக்கவிட்டு விடுவாரோ?” என்ற அச்சம் கவ்வியது. கொஞ்சம் பயத்தோடுதான் அந்தப் படத்துக்குப் பணியாற்றினார் கோபு.

அசத்திய அமுதா!

“‘அத்தையா... மாமியா?’ என்று படத்துக்குத் தலைப்பு வைக்கலாம்'' என கோபு சொல்ல, “டக்கராகீதுபா!” என்றார் அமுதா.

“அதெல்லாம் சரி. பைனான்ஸ் பட்ஜெட் அதுபத்தி எல்லாம் யோசிச்சீங்களா?” என்று கோபு கேட்க,'' உனக்கு ஏன் சார் அந்த ரப்ச்சர்? அதை என்கிட்டே வுடு. ஆறு 5௦,௦௦௦ ரூபா சீட்டு கட்டிக்கினு வரேன். மாசம் ஒரு சீட்டை ஏலம் எடுத்து மிச்சத்தைக் கொண்டாந்துடுவேன்'' அமுதா சொல்ல, ஷண்முகம் இடைமறித்தார்.

“கோபு சார். அக்கா ஜான் ஜக்கடி கில்லாடி!'' என்று ஷண்முகம் கூற, ‘ஜான் ஜக்கடி கில்லாடி’ என்ற பெயரில் ஒரு படம் எடுத்தால் என்ன என்று நினைத்தார் கோபு.

அத்தையா, மாமியா பட வேலைகள் தொடங்கின. ஜெய்சங்கர், நாகேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், ஸ்ரீகாந்த் உஷாநந்தினி, மனோரமா, சச்சு, எம்.பானுமதி, சுகுமாரி, காந்திமதி, என்று கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்தம் செய்த கையோடு, கோபுவுக்கு உடனே அமுதா போன் செய்வார்.

“டைரெக்டரு !...ஜெய்சங்கரை முடிச்சுட்டேன். ஆச்சி பண்ணுறேன்னு ஒத்துக்கிச்சு. சச்சுவைப் பிடிச்சுப் போட்டேன். அந்த உஷா நந்தினி... அது இன்னாமா நெட்டையா கீது. கொண்டையைப் போட்டா, ஜெய்சங்கரைக் காட்டிலும் உசரமா இருக்கும் போல..!'' என்று அவ்வப்போது எக்ஸ்பேர்ட் கமெண்ட்ஸ் வேறு.

“இந்தத் தேங்கா மட்டும் சிக்க மாட்டேன்னுது! வேற ஏதாவது மாங்காய் இருந்தா சொல்லு.'' என்றெல்லாம் அமுதா பேச, கோபு அச்சத்தில் உறைந்துபோனார். திரைப்படத்துறையில் தான் சம்பாதித்த பெயரை எல்லாம், அமுதா துவம்சம் செய்து விடுவாரோ என்கிற கிலி வந்துவிட்டது. சொல்லி வைத்தாற் போல அத்தனை நட்சத்திரங்களும் கோபுவுக்கு போன் செய்து “அந்தம்மா கிட்டே நடிக்க மாட்டேன்னு சொல்ல பயமா இருக்குது. நீங்க டைரக்ட் பண்ண போறீங்கன்னு சொன்னதால, ஒத்துக்கிட்டேன்.'' என்றார்கள்.

சீட்டுக் கட்டி படம் எடுத்த ஒரே தயாரிப்பாளராக அமுதா கணேசன்தான் இருப்பார். படிக்காதவர், அனுபவம் இல்லாதவர் என்ற எண்ணங்களையெல்லாம் உடைத்து, குறிப்பிட்ட நாளில் படத்தை முடித்து ரிலீஸ் செய்தார். பிரிவியூ காட்சியில் தொடங்கி, படம் பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “படம் செம தமாஷாக்கீது அக்கா” என்று அவரைப் பார்க்கும் உறவினர்கள் நண்பர்கள், அவர் வசிக்கும் பகுதியின் மக்கள் அனைவரும் கூற அமுதாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. “எல்லாத்துக்கும் நம்ம கோபு சார் சரக்குதான் காரணம்''என்று பாராட்டினார்.

படப்பிடிப்பு அரங்கம் ஒரே கூத்தும் கும்மாளமுமாகக் கலகலவென்று இருக்க, திடீரென்று நட்சத்திரங்கள் அமைதியாகி விடுவார்கள். பார்த்தால் அரங்கத்தினுள் அமுதா வந்துகொண்டிருப்பார்.

“டேய் மூதேவி. சீட்டுக் கட்டி படம் எடுக்கிறேன். சும்மா ஜூசா உறிஞ்சிகினு நிக்காதே. போயி வேலையப் பாரு!'' என்று அவர் உரக்கக் கத்துவார். ஜூஸ் குடித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் புரையேறும்.

‘அத்தையா மாமியா’ படம் நூறு நாள் ஓடவில்லை என்றாலும், ஜெய்சங்கர் படம் பத்து வாரம் ஓடினாலே பெரும் வெற்றிதான். அந்த வெற்றியை அத்தையா மாமியா அடைந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கோபு.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x