

எண்பதுகளில் ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகர்களாக வலம் வந்த நட்சத்திரங்கள், சென்னையில் 9-வது ஆண்டாக ஒன்றுகூடி இருக்கிறார்கள். இம்முறை நீலநிற ஜீன்ஸ், வெண்ணிறச் சட்டைகள் அணிந்து ஆண் நடிகர்களும் அதே வண்ண ஆடைகளுடன் வைரநகைகளை அணிந்து பெண் நடிகர்களுமாக மொத்தம் 22 நட்சத்திரங்கள் பங்கேற்று அசத்திய இவர்கள் ‘மீண்டும் சந்திப்போம்’ என்று கூறி விடைபெற்றார்கள். கமல் இதுவரை இதில் கலந்துகொண்டதில்லை. ‘பேட்ட’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் ரஜினியும் இந்தக் கூடுகைக்கு வரவில்லை.
இடைவெளி
அருள்நிதி நடித்து ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘மெளனகுரு’. இந்தப் படத்தை இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் மறு ஆக்கம் செய்தார். ஆனால் படத்தின் இயக்குநர் சாந்தகுமார் தனது இரண்டாவது படத்தைத் தொடங்குவது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது ஒருவழியாக ஆர்யா நாயகனாகவும் இந்துஜா நாயகியாகவும் நடிக்கும் ‘மகாமுனி’ என்ற படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
ஹவுஸ் ஓனர்!
உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில், யதார்த்த உணர்வுகள் மேலிடும் தரமான படங்களைத் தொடர்ந்து தர முயல்பவர் நடிகை, இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவரது இயக்கத்தில் கடந்த 2016, அக்டோபரில் 'அம்மணி' திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து, தற்போது 'ஹவுஸ் ஓனர்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். 2015 சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதை இது. நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘பசங்க’ படத்தில் நடித்துக் குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற ‘கோலி சோடா’ புகழ் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். படத்துக்கு இசை ஜிப்ரான்.
பிர்சாவின் பயோபிக்!
ரஜினியை இரண்டாவது முறையாக இயக்கிய பா.இரஞ்சித் அடுத்து இந்தியில் படம் இயக்குகிறார். அதை ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்' படத்தைத் தயாரித்த நாமா பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில், இதுவொரு வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பது தெரிய வந்திருக்கிறது. இன்றைய பிகார், ஜார்கண்ட் மாநிலத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களின் போராளியான பிர்சா முண்டாவின் வாழ்க்கையைத் தழுவி, இந்தப் படத்துக்கு இரஞ்சித் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார். பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவருவதாக இயக்குநர் வட்டாரம் தெரிவிக்கிறது.
டிவியிலிருந்து..
இந்தித் தொலைக்காட்சி உலகில் பிரபலமாகி பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆன்சல் முன்ஜால். நகுல் நடிப்பில், ராஜ்பிரபு இயக்கத்தில் இன்று வெளியாகவிருக்கும் ‘செய்’ படத்தின் மூலம் இங்கே கதாநாயகியாக அறிமுகமாகிறார். “ தமிழ் சினிமாவில், பாலிவுட்டுக்கு இணையாகக் கதாநாயகிகளை முன்னிறுத்தும் படங்கள் வெளியாகி வெற்றிபெறுவதை அறிந்துகொண்டேன். ‘செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக விரும்புகிறேன்” என்று கூறும் ஆன்சல் திரையுலகில் தனது ரோல்மாடல் தீபிகா படுகோன் என்கிறார்.தனுஷ் அடுத்து..
தனுஷ் அடுத்து.. மாரி செல்வராஜ் இயக்கத்தில்,
கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி வசூல் வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம். தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார் மாரி செல்வராஜ். ‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
நரேனின் புதிய முகம்
தொடக்கம்முதல் நல்ல கதைகளுக்காகக் காத்திருந்து நடிப்பவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, படங்களுக்குப் பிறகு ‘கத்துக்குட்டி’ அவருக்குப் பெயர்வாங்கிக் கொடுத்தது. சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யு டர்ன்’ படத்தில் சிலகாட்சிகளில் தோன்றினாலும் கதாபாத்திரத்துக்கான நடிப்பைக் கொடுத்தார். தற்போது நடிகர் என்ற நிலையிலிருந்து தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார் நரேன்.
கன்னடத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘வாசு’ என்ற படத்தை இயக்கிய அஜித்வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். கதை மற்றும் இயக்குநரின் மீதுள்ள நம்பிக்கையால் அதைத் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நேரத்தில் தயாரித்துவருகிறார். நள்ளிரவு ஒரு மணி முதல் 4 மணி வரை நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முழுவதும் புதுமுகங்கள் நடிக்கும் ஆக்ஷன் த்ரில்லராகப் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குர்.
தொடரும் நட்பு
முத்தையா இயக்கத்தில் தற்போது ‘தேவராட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக். அடுத்து இயக்குநர் பொன்ராமின் உதவியாளர் அருண் சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் விஜய்சேதுபதியின் மேலாளர் அன்பழகன். நட்பின் அடிப்படையில் இந்தப் படத்தின் தொடக்கவிழாவை விஜய்சேதுபதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
ரசிகர்களின் கோரிக்கை
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாக இருக்கும் இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு யார் ஜோடி என்பதும் நெட்டிசன்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பலரும் ‘கீதகோவிந்தம்’ தெலுங்குப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகாவை விஜய்க்கு ஜோடியாக்கும்படி படக்குழுவுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். அட்லி-விஜய் கூட்டணி இதைப் பரிசீலிக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.