Published : 09 Nov 2018 11:37 AM
Last Updated : 09 Nov 2018 11:37 AM

மீண்டும் ‘குஷி’யில் நடிப்பேன்! - ஜோதிகா நேர்காணல்

திருமணத்துக்குப் பிறகு, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவருகிறார் ஜோதிகா. இந்தியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சுலு’ படத்தின் தமிழ் மறுஆக்கமான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. மீண்டும் இயக்குநர் ராதாமோகனோடு கூட்டணி, சூர்யாவின் ஆதரவு எனப் பல விஷயங்கள் பற்றி ஜோதிகாவுடன் உரையாடியதிலிருந்து…

‘காற்றின் மொழி’யில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

அப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மெசேஜ் பிடித்திருந்தது. பெண்களை மையப்படுத்தி நகரும் படங்கள் கனமான உள்ளடக்கத்துடன் இருக்கும். இது எளிய ஒன்றாக இருந்தது. கணவன் - மனைவி உறவை அழகாகச் சொல்லியிருக்கும் படம். பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் கணவன்மார்களைப் படத்தில் காட்டியிருக்கிறோம்.

உங்களின் இரண்டாவது இன்னிங்ஸில் பெண்களுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது ஏன்?

இதேமாதிரி கதைகள்தான் என்னைத் தேடி வருகின்றன. பெண் இயக்குநர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆண் இயக்குநர்கள் இந்த மாதிரிக் கதைகள்தான் எழுதுகிறார்கள். எனக்கு வந்த கதைகளில் நல்லதாகத் தேர்வு செய்து நடிக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், சாதியக் கொலைகள் எல்லாம் சமூகத்தில் நிகழவில்லை. இப்போது அதைச் சார்ந்த கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

நாயகிக்கு முக்கியத்துவம் என்கிறீர்கள். ‘குஷி 2’ உருவானால் நடிப்பீர்களா?

கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் ‘குஷி’ மாதிரி கதை இருக்கக் கூடாது. கொஞ்சம் புத்திசாலி ஜெனிபராகக் (குஷி படத்தின் ஜோதிகாவின் பெயர்) காட்டினால் நடிப்பேன். ஏனென்றால் அந்த இடத்துக்கு வந்துட்டேன்.

ஏன் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் எதிலும் நீங்கள் நடிக்கவில்லை?

குறிப்பிட்ட ஒருவரது பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எதுவுமில்லை. ஆனால் பயோபிக்கில் நடிக்க விருப்பம் உண்டு. படங்களில் மனைவி கதாபாத்திரத்தில் நடிப்பதே பயோபிக் மாதிரிதான். தற்போது வீட்டிலிருக்கும் பெண்கள் ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் பயோபிக்தான். நல்ல கதைகள் வந்தால், அந்தக் கதாபாத்திரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயார்.

சூர்யாவிடம் கதைத் தொடர்பாகப் பேசுவீர்களா?

அவர்தான் எனக்கு எல்லாமே. கதைகள் தொடர்பான முடிவு என்னுடையதுதான். அவருக்கு வரும் கதைகள், எனக்கு வரும் கதைகள் இரண்டையுமே பேசித்தான் ஓ.கே சொல்வோம். என்னோட கதைகளில் அவரோ, அவருடைய கதைகளில் நானோ குறுக்கிட மாட்டோம். கருத்துப் பகிர்தல் மட்டுமே இருக்கும்.

படங்களில் இருவருமே இணைந்து நடிக்கக் காத்திருக்கிறோம். இதுவரை யாருமே எங்களை அணுகவில்லை. நிஜவாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்தவர்கள், திரையில் காதலித்து நடிப்பதை இயக்குநர்கள் விரும்புவதில்லை என நினைக்கிறேன்.

நாயகிகளை மையப்படுத்திய படங்களின் வியாபாரம் உயர்ந்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

அதுபோன்ற பல படங்கள் சமீபத்தில் அதிகமாக வெற்றியடைந்திருக்கின்றனவே.  இதுபோல் குறிப்பிடத்தக்க அளவுக்கு வசூலும் கிடைத்தால் மட்டுமே தொடர்ச்சியாக அதுபோல் பெண் கதைகளை எழுதுவார்கள். அதில் முதலீடு செய்து படமாக்க முன்வருவார்கள்.

மீண்டும் நடிக்கத் தொடங்கியபோது எந்த மாதிரியான கதைகள் வரும் என எதிர்பார்த்தீர்கள்?

அப்படியொரு எதிர்பார்ப்பே இல்லை. ‘36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் எந்தவொரு கதையுமே வரவில்லை. அதற்குப் பிறகு ‘மகளிர் மட்டும்’ வந்தது. ‘நாச்சியார்’ படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் வருகின்றன. தற்போது புதிதாக இரண்டு படங்கள் ஒப்பந்தமாகியிருக்கேன். ஒன்றை ட்ரீம் வாரியர் நிறுவனம், மற்றொன்று 2டி நிறுவனமும் தயாரிக்கிறது. இரண்டுமே புதுமுக இயக்குநர்கள்தான். வித்தியாசமான, வலுவான கதைகள்.

இப்போதுள்ள நாயகிகளில் யாருடைய நடிப்புப் பிடித்திருக்கிறது?

நயன்தாரா நடிப்புப் பிடித்திருக்கிறது. ‘கோலமாவு கோகிலா’ திரையரங்கில் போய்ப் பார்த்தேன். கீர்த்தி சுரேஷும் பிரமாதமாகப் பண்றாங்க.

புதுமுகங்களாக வரும் நடிகைகளுக்கு நீங்கள் கூறுவது என்ன?

என்னோட போனை என் குழந்தைகள் கையில் கொடுத்தால், கேம் டவுன்லோட், அப்லோட் என அனைத்தும் பண்ணுவார்கள். இப்போதுள்ளவர்களுக்குப் புத்திகூர்மை அதிகம். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இப்போதுள்ள தலைமுறைக்கு ஏற்றவாறு கதை எழுதுங்கள். அதேநேரம் ‘குஷி’, ‘டும் டும் டும்’ மாதிரியான படங்கள் இப்போது இல்லை.

அதுபோன்ற அழுத்தமான, ஆனால் மென்மையான படங்களும் எப்போதும் தேவை. நடிகைகளை ரொம்பவும் கமர்ஷியலாக காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் புதுமுகங்களுக்கு தனது ரோல் பற்றிய தெளிவு இருக்க வேண்டும்.

தியா, தேவ் என்ன சொல்றாங்க?

எனது படங்களைப் பார்த்துச் சந்தோஷப்படுறாங்க. என் பொண்ணுக்கு நான் புல்லட் ஓட்டிட்டு வரும் காட்சி ரொம்ப பிடிக்கும். தினமும் ஸ்கூலுக்கு பைக்கில் வந்து பிக்-அப் பண்ணு அம்மா என்று சொல்லிட்டு இருக்காங்க. இரண்டுமுறை அதையும் செய்தேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x