

நவம்பர் 29-ம் தேதி தமிழ் சினிமாவுக்கு முக்கியமான நாள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் அன்று வெளியாகவிருக்கும் ‘2.0’ தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரையில்லாத பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் நேரடித் தமிழ்ப்படம். அப்படம் பற்றிய தொகுப்பு.
-> இந்தியத் திரையுலகில் முதன்முறையாக 3டி கேமராவில் முழுப் படத்தையும் ஷூட் செய்திருக்கிறார்கள். காட்சிகள் சரியாக வந்திருக்கின்றனவா என்பதில் தொடங்கி எடிட்டிங், கிராஃபிக்ஸ் பணிகள்வரை அனைத்தையுமே 3டி கண்ணாடி அணிந்துதான் மேற்கொள்ள வேண்டும்.
-> உலக அளவில் ஹாலிவுட் படங்கள் வெளியாகும்போது ஐ-மேக்ஸ் திரையரங்குகளோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு வெளியாகும். அவ்வாறு ‘2.0’ படத்தையும் ஐ-மேக்ஸ் திரையரங்குகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தான் நவம்பர் 29-ம் தேதி வெளியீடு என்று அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் பார்வையாளர்கள் தமிழர்கள், தமிழ் அறிந்தவர்கள் ஆகியோரைத் தாண்டிய வெளிநாட்டினரையும் ‘2.0’ பார்வையாளர்களாக அடைய உள்ளது.
-> முதன்முறையாக 4டி சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒலியமைப்பை உருவாக்கியிருக்கிறார் ரசூல் பூக்குட்டி. “திரையரங்குகளில் லெஃப்ட், ரைட், சென்டர், சைட், அப்பர் ஸ்பீக்கர்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், காலுக்கு அடியில் ஸ்பீக்கர் இருப்பது இதுதான் முதன்முறை. தரையில் நடக்கும் காட்சிகளுக்கு ஒலி சேர்த்திருக்கிறோம்” என்று 4டி தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்திருக்கிறார் ஷங்கர். இப்படத்துக்காகத் தமிழகத்தில் சில திரையரங்குகளில் 4டி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.
-> இந்திய அளவில் மிகப் பெரிய பட்ஜெட் படம் ‘2.0’. இதனால் பலரும் இப்படத்தின் வசூல் நிலவரம் எப்படியிருக்கும் என்பதை எதிர்நோக்கியுள்ளனர். எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்ட முடியும் பட்சத்தில் இது போன்ற பிரம்மாண்டக் கதைக்களங்களைக் கொண்ட படங்கள் தமிழில், இந்தியாவில் தொடரலாம்.
-> உலக அளவில் இந்தியப் படங்கள் என்றாலே இந்திப் படங்கள் என்ற நிலையை மாற்றியது ‘பாகுபலி’. வசூலிலும் அனைத்து இந்திப் படங்களையும் பின்னுக்குத் தள்ளியது. தற்போது தமிழ்ப் படங்களில் உலக அளவில் அதிகப்படியான திரையரங்குகளில் ‘2.0’ படத்தை வெளியிட லைகா நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
-> இந்தியாவில் முதல்முறையாக கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே சுமார் ரூ.500 கோடிக்குமேல் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-> தமிழ்நாட்டில் சுமார் 200 திரையரங்குகள் இப்படத்துக்காக 3டி திரையிடலுக்குத் தங்களைத் தரம் உயர்த்திக்கொண்டிருக்கின்றன. ஒரு படத்தின் எதிர்பார்ப்பை முன்வைத்து இப்படித் திரையிடல் வசதியை மாற்றுவது மிக ஆபூர்வமாக நிகழ்வது.
-> ‘பாகுபலி’, தெலுங்கு சினிமாவை எப்படி உலக அரங்குக்குக் காட்டியதோ, அதே போன்று ‘2.0’ தமிழ் சினிமாவை காட்டும் என பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்களும் விமர்சகர்களும் நம்புகிறார்கள்.