

காட்சி 1: பதின் வயது குழப்பங்கள் நிறைந்தது. பள்ளிப் படிப்பின் இறுதியாண்டில் இருக்கும் பதின் வயது இளைஞர்கள் பலரையும் தாழ்வு மனப்பான்மை ஒரு நோயைப் போல் தாக்கும் காலம். சமூகத்தை எதிர்கொள்ளப் பயப்படும் இவர்களுக்காக ஒரு காமிக்ஸ் ஹீரோவை உருவாக்க வேண்டுமென்று கதாசிரியர் ஸ்டான் லீ நினைத்தார்.
ஸ்டான் லீ இதே விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். “ஒரு பதின்ம வயது கதாபாத்திரத்தைத் துணை நாயகனாக வைத்துத்தானே எல்லோரும் காமிக்ஸ் தயாரிக்கிறார்கள்? நாம் ஏன் ஒரு பதின்ம வயது இளைஞனையே சூப்பர் ஹீரோவாக வைத்து காமிக்ஸ் தயாரிக்கக் கூடாது?”.
தனக்கு உருவான எண்ணைத்தைச் செயல்படுத்தி அவர் உருவாக்கிய முதல் காமிக்ஸ் ஹீரோதான் ஸ்பைடர்மேன். இந்த காமிக்ஸ் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவில் நிலவிவந்த ஹிப்பி கலாச்சாரம், போதை மருந்துப் பழக்கம் போன்ற பல விஷயங்களுக்கு நடுவே, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, அவர்களின் ஆதர்ச நாயகனாக இத்தொடரின் நாயகன் உருவாக்கப்பட்டான்.
காட்சி 2: 1960. அமெரிக்கா. வெள்ளையர்களுக்கும் வெள்ளையர் அல்லாதவர்களுக்குமான இனவாத அரசியல் உச்சத்தில் இருந்தது. ஆஃப்ரோ அமெரிக்கர்கள், யூதர்கள், இஸ்லாமியர் என்று பலரும் இந்த இனவாத அரசியலுக்கு ஆளாகி, இன்னல்களைச் சந்தித்த நேரம். அப்போதுதான் ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்கினார், காமிக்ஸ் ஜாம்பவானான ஸ்டான் லீ.
இப்படி அமெரிக்காவில் நிலவிய இனவாத அரசியலைக் கண்டு, வெள்ளையர்களால் ஒதுக்கப்பட்ட மக்களை மனத்தில் கொண்டு, ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கினார். அவர்கள்தான் ‘மியூட்டன்ட்ஸ்’ எனப்படும் மாற்று மரபணுக்களைக் கொண்டவர்கள்.
நமது உடலில் இருக்கும் மரபணுக்களின் அமைப்பில் இருந்து வித்தியாசமான மரபணுக்களைக் கொண்ட இவர்களைச் சமூகம் பயத்தால் வெறுத்து ஒதுக்க, ஒரு பேராசிரியர் இவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்து உதவுகிறார். சார்லஸ் சேவியர் என்ற பெயர் கொண்ட அவரை ‘புரபெஸர் எக்ஸ்’ என்றும் அவருடன் இருப்பவர்களை எல்லாம் ‘எக்ஸ் மென்’ என்றும் பெயரிட்டு ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்கினார் ஸ்டான் லீ.
யார் இந்த ஸ்டான் லீ?
இப்போது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் காமிக்ஸ் மற்றும் ஹாலிவுட் கதாபாத்திரங்களான ஸ்பைடர்மேன், ஹல்க், பிளாக் பாந்தர், டேர் டெவில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஃபென்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றையும், தார், அயர்ன்மேன், ஆன்ட் மேன் ஆகிய ஹீரோக்களையும் உருவாக்கியவர்தான் இந்த ஸ்டான் லீ.
உலகின் முதல் கறுப்பின காமிக்ஸ் ஹீரோவான பிளாக் பாந்தரை உருவாக்கியவரான ஸ்டான் லீ, காமிக்ஸ் வாசிப்பில் மட்டுமின்றி அது சார்ந்த அனைத்து விஷயங்களிலுமே ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஸ்டான் லீயின் வருகைக்கு முன்பான சூப்பர் ஹீரோக்கள் அனைவருமே ஒருவிதமான உத்தமர்கள்போல வடிவமைக்கப்பட்டு இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில், குறைபாடுகளுடன் கூடிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி, வாசகர்களை இந்தக் கதாபாத்திரங்களுடன் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள வழி செய்தார்.
ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஸ்டான் லீ செய்த மாற்றங்களில் இதுதான் மிகவும் முக்கியமானது. காமிக்ஸ் மற்றும் திரையுலகைக் தாண்டி கொண்டாடப்பட வேண்டிய சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன்.
தொடர்புக்கு: prince.viswa@gmail.com