Published : 30 Nov 2018 10:32 AM
Last Updated : 30 Nov 2018 10:32 AM

ராகி எனும் நட்சத்திரத் தூரிகை!

ஓவியர் ராகி நூற்றாண்டு நிறைவு

சென்னையை நம்பிவந்த லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். 1958 - 59 -ல் சென்னை வந்து மோகன் ஆர்ட்ஸ் என்ற, பேனர் விளம்பர நிறுவனத்தில் பயிற்சியாளராக இருந்தேன். அப்போது கணினித் தொழில்நுட்பம் கிடையாது. சினிமா பேனர்களைக் கையால் வரைந்த பொற்காலம் அது.

அப்போது ‘குமுதம்’, ‘கல்கண்டு’ இதழ்களில் ராகி வரைந்த அட்டைப்பட ஓவியங்களை முதன்முதலில் பார்த்தேன். ஒரு ஒளிப்பதிவாளரின் பார்வையில், கேமரா கோணத்தில் வரைந்திருந்த ஓவியங்கள் என்னைக் கவர்ந்தன. அவர், சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் - இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பியும் ஓவியருமான தேவி பிரசாத் ராய்சவுத்ரி முதல்வராக இருந்தபோது படித்தவர். அதே கல்லூரியில் 1959 முதல் 1965 - வரை ஓவியம் பயின்றவன் நான்.

பின்னர் திரையுலகில் நடிகனான பிறகு, ராகியைத் திரையுலகில் கண்டிருக்கிறேன். ஏவி.எம்மின் ‘அன்பே வா’ படத்தில் வரும் ‘ராஜாவின் பார்வை’ பாடலில் எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி மீது பூத்தூவும் குருவிகள் வடிவத்தில்… ‘அதே கண்கள்’ படத்தில் வரும் மர்ம பங்களா வீட்டின் ஓவியத்திலிருந்து அப்படியே அது காட்சியாக மாறும் வித்தையில் பங்கேற்றது ராகியின் தூரிகைதான்.

இது இன்னொரு தருணம். ‘அன்பே வா’ படத்துக்காக ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடல் படமாக்கப்பட்ட பின், எடிட் செய்து போட்டுப் பார்க்கப்பட்டது!  அந்தப் பாடலில் ஒலிக்கும் பின்னணி இசைக் கோவையின் நீளத்துக்கு ஏற்றபடி அந்த மலைச் சிகரங்களின் ஷாட்டுகள் போதவில்லை. எடிட்டர் உட்பட எல்லோரும் பதறிப்போனார்கள். ஆனால், ஏவி.எம்மின் மூத்த மகனும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பிரிவைக் கவனித்து வந்தவருமான முருகன், கொஞ்சம்கூட பதற்றம் அடையாமல் ஓவியர் ராகியை அணுகினார். அப்போது ராகி பிரசாத் ஸ்டுடியோவில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பிரிவின் தலைமை அனிமேட்டராக இருந்தார்.

சிம்லா போகாமல் சிகரங்கள்

“ராகி… நாளை மறுநாள் அப்பச்சியும் (ஏவி.மெய்யப்பன்) எம்.ஜி.ஆரும் இந்தப் பாடலைப் பார்க்கப் போகிறார்கள்.  ஆனால், மலைச் சிகரங்களின் ஷாட்டுகள் போதவில்லை!  இப்போது சிம்லா சென்று படமாக்கிக் கொண்டுவர சாத்தியமில்லை! நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்” என்றார். முருகனின் கோரிக்கையைக் கேட்ட ராகி “அவ்வளவுதானே! நாளை இரவு சிம்லா மலைச்சிகரங்கள் தயாராக இருக்கும், நீங்கள் போய் மற்ற வேலைகளில் கவனத்தைச் செலுத்துங்கள். இதைப் பற்றி மறந்துவிடுங்கள்” என்றார் சிரித்துக்கொண்டே. ராகி என்ன செய்யப்போகிறார் என்பதை அப்போது கூறவில்லை.

மறுநாள் மாலை முருகனுக்கு போன் செய்த ராகி, “வாருங்கள்… படக்காட்சி ரெடி” என்றார். ஆவல் பொங்க, தயாரிப்பாளர்கள் முருகன், சரவணன், ஒளிப்பதிவாளர் மாருதிராவ், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்  ஆகிய நால்வரும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு விரைந்தனர். ராகியின் ‘இமயமலைச் சிகரங்களின்’ ஷாட்டுகளைக் கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளினார்கள்.

“எப்படி இந்த மலைச்சிகரங்களைப் படம் பிடித்தீர்கள்; நாங்கள் எடுத்த ஒரிஜினலைவிட அற்புதமாக வந்துள்ளதே!?” என்று கேட்டார் முருகன். “அதைப் பிறகு சொல்கிறேன்” என்று சிரித்தபடியே அவர்களுக்கு விடைகொடுத்தார் ராகி. 

பின்னர் நீளமான பின்னணி இசைக் கோவைக்கு ஏற்ப அக்காட்சிகள் அப்பாடலில் சேர்க்கப்பட்டு ‘அன்பே வா’ முதல் பிரதி குறித்த நேரத்துக்குத் தயாரானதும் அதைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாராட்டியதும், திரையரங்கில் மக்கள் கைதட்டி மகிழ்ந்ததும் திரைக்குப்பின் ஒளிந்திருக்கும் வரலாறு.

ரகசியம் உடைத்த ராகி

‘அன்பே வா’ திரைப்படம் வெற்றிகரமான ஐம்பதாவது நாளைத் தொட்டிருந்த நேரம். அந்த ‘இமயமலைச் சிகரங்களின்’ மர்மத்தை அறிய விரும்பிய ஏவி.எம்.முருகன் ராகியைத் தேடிச் சென்றார். அப்போது அவரிடம் ரகசியத்தை உடைத்தார் ராகி. “இது பெரிய விஷயமல்ல, நாகிரெட்டியாரின் பி.என்.கே. அச்சகம் வெளியிட்ட ‘சோவியத் நாடு’ காலண்டரில் வண்ணமாக ஜொலித்த மலைச் சிகரங்களை வெட்டிக்கொண்டேன்.

அவற்றை நீளவாக்கில் தொடர்ச்சியாக ஒட்டினேன்.  பிறகு ‘வெர்ட்டிக்கிள் கேமரா’ மூலமாக நகர்த்தி, நகர்த்திப் படமாக்கினேன். அவ்வளவுதான்.. நீங்கள் எதிர்பார்த்த மலைச் சிகரங்கள் கிடைத்துவிட்டன” என்றார். அதைக் கேட்ட முருகன், ராகியைக் கட்டித் தழுவிவிட்டு வியந்துபோய்க் கூறினார்.

“ராகி சார்.. நீங்கள் ஹாலிவுட்டில் இருக்க வேண்டிய கலைஞர். தென்னிந்தியர்களின் அதிர்ஷ்டத்தால் இங்கே இருக்கிறீர்கள். இந்த ஒரு பாடலின் மூலம்,  நீங்கள் பணி யாற்றும் பிரசாத் புரொடக் ஷன்ஸ், காலண்டரை அச்சிட்ட பி.என்.கே.அச்சகம் (வாகினி), படத்தை உருவாக்கிய ஏவி.எம். ஆகிய மூன்று பெரும் பட நிறுவனங்களை இணைத்துவிட்டீர்கள் ”. என்றார்.

கிராஃபிக்ஸ் வேலைகளுக்காகக் கோடிகளில் செலவிடத் தயங்காத காலம் இது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.  சுமார் ஐம்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பு கிராஃபிக்ஸ் உட்பட எந்தவிதத் தொழில்நுட்பமும் வளர்ந்திராத காலத்தில், தனது புத்திசாலித்தனத்தால் இப்படி ஒரு பிரமிப்பை உருவாக்கிய அந்த ‘ஓவிய மேதை’ ராகியைப் போன்ற கலைஞர்களை திரையுலகம் தேடிப் பிடித்துக் கொண்டாடவேண்டும்.

தோழர்களின் தோழர்

இப்போது மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். ஓவியர் ராகி, திரையுலகம் வியந்த ஓவியர் மட்டுமல்ல; சிறந்த புகைப்படக் கலைஞர், கார்ட்டூனிஸ்ட்,  அற்புதமான இருபரிமாண அனிமேட்டர். மொத்தத்தில் அவர் பன்முகத் திறமைகளின் விளைநிலம்.

தந்தை பெரியாரின் ‘விடுதலை’, ஜீவாவின் ‘ஜனசக்தி’, காமராஜரின் ‘நவசக்தி’, தமிழ்வாணனின் ‘கல்கண்டு’, எஸ்.ஏ.பி.யின் ‘குமுதம்’, சோவின் ‘துக்ளக்’ போன்ற முன்னணிப் பத்திரிகைகளில் அவரது கார்ட்டூன்களும் ஓவியங்களும் வெளியாகி வாசகர்களைக் கவர்ந்தன.

பத்திரிகைத் துறையில் ஒரு இடதுசாரிச் சிந்தனையாளராகத் திகழ்ந்த ராகி, தோழர்களின் தோழர். ஒரு சுயமரியாதைக்காரரும் கூட. தன் நண்பர் கவியரசர் கண்ணதாசனின் அண்ணன், கண்ணப்பனின் புதல்வரான பஞ்சு அருணாசலத்திடம் மட்டுமே ராகி உரிமையுடன் பழகினார்.  அவரது தயாரிப்பில் ரஜினி நடித்த ‘கழுகு’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, சிவாஜி நடித்த ‘கவரிமான்’, நான் நடித்த ‘குவா குவா வாத்துக்கள்’, மோகன் நடித்த ‘காற்றுக்கென்ன வேலி’, ‘மகனே மகனே’ போன்ற படங்களில் இடம்பெற்ற அனிமேஷன் பகுதிகளுக்குப் பணிபுரிந்தார்.

‘கழுகு’ படத்தின் டைட்டிலில் அவரது ‘அனிமேஷன்’ சட்டென ஈர்த்துவிடும்.  அதில் எலும்புக்கூடு ஒன்றின் கைகள் தபேலா வாசிப்பதுபோன்ற காட்சியை வரைந்த ராகியின் திறமையைக் கண்ட இளையராஜா பின்னணி இசைக்கோப்பு பணியின்போது எழுந்து நின்று கைதட்டினார்.

ragi-2jpg

ராகி என்கிற எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு நட்சத்திரத் தூரிகை. அவரது நூற்றாண்டு நிறைவை நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடியது மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது.

அதிலும் தூய்மைக்குப் பெயர்பெற்ற அரசியல் தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு தன் மூத்த தோழரான ராகியை நினைவில் நிறுத்தி விழா எடுத்ததும், ஜீவானந்தம் முதல் சின்னக்குத்தூசிவரை ராகி நெருங்கிப் பழகிய 24 நண்பர்களின் ஓவியத்தைத் தனிப் பதாகையாக வைத்தும், பலரை அதில் பலரைக் கவுரவித்ததும் விழாவின் முத்தாய்ப்பான தருணம்.

- சிவகுமார், ஓவியர், திரைப்பட நடிகர், பேச்சாளர்.
தொடர்புக்கு: filmactorsivakumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x