

பாசத்துடனும் ஆசையுடனும் பழகிவந்த காதலி அல்லது கைப்பிடித்த மனைவி திடீரென்று மறைந்த துக்கத்தில் நம் திரை நாயகர்கள் அவள் நினைவாக அல்லல்படும்போது மறைந்தவள் ஆறுதல் சொல்லிப் பாடுவதாக அமைந்த பாடல் காட்சிகள் எல்லா இந்தியத் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட பாடல்கள் அமரத்துவத்தன்மை அடைவதும் உண்டு.
தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்த உணர்வை வெளிப்படுத்திய இரண்டு திரைப்பாடல்கள், காலத்தைக் கடந்து இன்றும் பெரிதும் கேட்டு ரசிக்கப்படுகின்றன.
வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.
லதா மங்கேஷ்கர் பாடிய பல்லாயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று என்று தெரிவுசெய்யப்பட்ட இந்தப் பாடலை எழுதியவர் இந்தித் திரை இசைக் கவிஞர்களின் அரசன் என்று புகழப்படும் ராஜா மெஹதி அலி கான். பாடலுக்கு இசை பாரம்பரிய இசை அமைப்பாளர் மதன்மோஹன். பாடல் இடம்பெற்ற வெற்றித் திரைப்படம் 1966-ல் வெளிவந்த மேரே சாயா (என் நிழல்) என்ற சாதனா - சுனில் தத் நடித்த படம்.
பாடல் வரிகள்.
து ஜஹான் ஜஹான் சலேகா
மேரா சாயா சா ஹோகா
மேரா சாயா
கபி முஜ்கோ யா கர்கே
ஜோ பெஹேங்கே தேரி ஆஸு
தோ வஹீ பே ரோ லேகே
உன்ஹே ஆக்கே மேரே ஆஸு
து ஜிதர் கா ருக் கரேகா
மேரா சாயா
... ...
இதன் பொருள்:
நீ எங்கெங்கு செல்கிறாயோ
என் நிழல் (அங்கெல்லாம்) உடன் இருக்கும்
என் நிழல்...
எப்பொழுது என் நினைவில் உன் கண்ணீர் பெருகுகிறதோ அங்கே உடன் வந்து
அது நிற்கும்படி என் கண்ணீர் தடுத்துவிடும்.
என் நிழல் உடன் இருக்கும்
நீ விரக்தி அடைந்தால் நானும் விரக்தியாகிவிடுவேன்
நான் கண்ணுக்குத் தெரிந்தாலும்
தெரியாவிட்டாலும்
உன் உடன்தான் இருப்பேன்
நீ எங்கு சென்றுகொண்டிருந்தாலும்
என் நிழல் உடன் இருக்கும்.
நாயகியை இழந்த பிறகு பாடும் இப்பாடல் வரிகளின் இரண்டாம் பகுதியில் அவள் உயிருடன் இருக்கும்போது பாடிய சில வரிகள் வால்யூம் 2 என்று தனியாக உள்ளன. படத்தில் அவை ஒரே தொகுப்பாகக் காட்சியாக்கப்பட்டிருகின்றன. இந்த உணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஜெமினி கணேசன் - கே.ஆர். விஜயா நடித்த ‘கற்பகம்’ படத்தின் பாடல்:
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மக்கள் கவிஞர் வாலி எழுதி அவருக்கு மிகவும் புகழ் சேர்த்தது அந்தப் பாடல். பாடியவர் பி. சுசீலா. தான் விட்டுச் சென்ற இடத்திற்கு வந்தவளை நேசிக்கும்படி இறந்த மனைவி பாடும் பாடல் வரிகள் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நான் இருக்க என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா
கண்ணை விட்டுப் போனாலும்
கருத்தை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும்
உன்னை விட்டுப் போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்தும் பாராமல்
கலங்குவதும் நீயல்லவா
உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலைப் புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசை என்றால்
என்னை நீ மறந்துவிடு
என் உயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு.
மன்னவா மன்னவா மன்னவா
நாயகியை நினைத்து வாடும் நாயகன் மட்டுமே ஆறுதல் பெற முடியும் என்பதும் நாயகனை நினைத்து வருந்தும் நாயகிக்கு இம்மாதிரிப் பாடல்கள் ஒருபோதும் திரையில் இடம்பெற முடியாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய காவிய இலக்கணமாகும்.
படங்கள் உதவி: ஞானம்