

முழுநீளத் திரைப்படங்களும் குறும்படங்களும் வெவ்வேறானவை. ஓடும் நேரம் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் பார்வையாளர்களைப் பொறுத்தும் அவற்றின் தளங்கள் தனித்த இயல்புடன் இயங்குபவை. ஆனால், திரைப்படங்கள் கொண்டாடப்படும் அளவுக்குக் குறும்படங்கள் பரவலான அங்கீகாரம் பெறுவதில்லை. திரைப்படங்களுக்கான வணிகச் சந்தை குறும்படங்களுக்கு இல்லாதது முக்கியக் காரணம்.
இந்த வணிக நெருக்கடி இல்லாத தையே நேர்மறையாகக் கொண்டு, தங்களது குறும்படங்களை எந்தச் சமரசத்துக்கும் ஆளாகாது எடுக்கும் படைப்பாளிகளும் இருக்கிறார்கள். பல்வேறு குறுவட்டங்களாகச் சுருங்கிய பார்வையாளர்களைக் கொண்டிருந்த குறும்படங்கள், சமூக ஊடகங்களால் இன்று விரிவாகவும் விரைவாகவும் ரசிகர்களைச் சென்றடைகின்றன. அடிப்படையான படைப்பூக்கத்துக்கு அப்பால், திரையுலகில் கால் பதிப்பதற்கான துருப்புச் சீட்டாகவும் குறும்படங்கள் உதவுகின்றன.
அண்மைக் காலமாகப் புதிய அலை இளைஞர்கள் பலர், தங்களது குறும்படங்கள் வாயிலாகவே திரைப்பட வாய்ப்புகளைச் சுலபமாக அடைந்து வருகிறார்கள். ஆனால், திரைப்படங்களுக்கான கதை வறட்சி, குறும்படங்களையும் பிடித்தாட்டுகிறது. பலர் வெளிப்படையாகச் சிறந்த சிறுகதைகளை உரிய அறிவிப்புடன் குறும்படமாக எடுக்கின் றனர். வேறுசில குறும்படங்கள் வெளியாகும்போது கதையை முன்வைத்து சர்ச்சைக்கு ஆளாகின்றன.
குருபீடமும் கம்பளிபூச்சியும்
‘கம்பளிபூச்சி’ என்றொரு குறும்படம் மே மாதம் வெளியானது. மூன்றரை நிமிடத்தில் முகத்தில் அறையும் நிஜத்தைக் கதையோட்டமாகக் கொண்ட இந்தக் குறும்படம், பெரும் வரவேற்பையும் விருதினையும் பெற்றது. யூடியூபில் இன்றைக்கும் புதிய பார்வையாளர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
#metoo பிரச்சாரத்தை மையமாகக் கொண்ட ‘கம்பளிபூச்சி’ குறும்படம், சிறப்பான நடிகர்கள் மற்றும் சிறப்பான ஆக்கத்துக்காகப் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ஆனால், குறும்படம் வெளியானபோதே ஆனந்தவிகடனில் வெளியான தனது ‘குருபீடம்’ சிறுகதை, உரிய அனுமதி இன்றி குறும்படமாகி இருப்பதாக சிறுகதையின் ஆசிரியர் ஜா.தீபா சமூக ஊடகம் வாயிலாகத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பான குற்றச்சாட்டுக்கு ‘கம்பளிபூச்சி’ குறும்படக்குழுவின் சார்பில் அப்போதே மறுப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், வாசகர்களும், குறும்பட ரசிகர்களும் படைப்பாளிகளைவிடத் தெளிவாக இருக்கிறார்கள். யூடியூபில் (https://bit.ly/2C4SnTB) கம்பளிபூச்சி குறும்படத்துக்கான பின்னூட்டம் இடுவோரில் பலரும் ’குருபீடம்’ சிறுகதையைக் குறிப்பிட்டே, அதன் குறும்பட வடிவம் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுவதிலிருந்து இதனைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
வெக்கையும் உருக்கமுமான ‘சவடால்’
இன்னொரு குறும்படம் ’சவடால்’. வெளியான 2 வாரங்களில் குறும்படத்தைப் பார்த்த பலரையும் தங்கள் தாத்தாக்களை நினைத்து கண்ணீர் கசிய புலம்ப வைத்திருக்கிறது. வெக்கை பூமியில் புழங்கும் மனிதர்களை ஒளிந்திருந்து படமெடுத்ததுபோல் அப்படியொரு இயல்பு கதாபாத்திரங்களுடன் ஒட்டி வருகிறது. எந்தவொரு பூச்சோ முலாமோ இன்றிக் கதையை அதன் போக்கில் உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
20 நிமிடங்களுக்கு நீண்டாலும் குறும்படம் அதற்கான நியாயத்தை செய்திருக்கிறது. இந்தக் குறும்படத்தின் தொடக்கத்தில், ’கந்தர்வனின் சிறுகதையை தழுவியது’ என முறையாக அறிவிப்பு தந்துள்ளார்கள். அதுவும் குறும்படத்தின் போக்கில் ரசிகருக்கு ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டிவிட, அந்த எதிர்பார்ப்பைக் கதையோட்டமும் பாத்திரங்களும் உரிய முறையில் பூர்த்தி செய்திருப்பது நிறைவு தருகிறது.
கிராமத்து தாத்தன்களையும் அப்பச்சிகளையும் தவிக்க விட்டு படிப்பு, வேலை என நகரத்து கான்கிரீட் காடுகளில் வயிற்றுப்பாட்டுக்கு ஒப்பேற்றும் இளைய சமூகம் பார்த்து நெகிழ வேண்டிய குறும்படம் ‘சவடால்’ (https://bit.ly/2CxjMhV).
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com