‘திலக’த் துளிகள்

‘திலக’த் துளிகள்
Updated on
2 min read

1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.

2 ‘புரோட்டோகால்’ எனப்படும் அரசு மரபுகளை மீறி, பிரதமராக இருந்த வி.பி.சிங், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு ஆகிய இருவரும் சென்னை வந்தபோது சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ வீட்டுக்கு வருகை தந்து கவுரவம் செய்தனர்.

3நடுகடந்த அரசு என்ற முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திபெத்தின் தலைவர் தலாய்லாமா சென்னை வந்தார். அப்போது அன்றைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜருடன் சிவாஜியின் ‘உத்தம புத்திரன்’ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்தினார்.

4 ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் வெற்றி விழாவுக்கு சிவாஜி கணேசன் மதுரை வந்தபோது அதுவரை வழக்கில் இல்லாத நடைமுறையாக மதுரை மாநகராட்சியின் சார்பில் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.

5 தமிழின் முதல் ‘டெக்னிக் கலர்’ திரைப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் நெகட்டீவ் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே முதல் பிரதி அச்சிடப்பட்டது. இந்தியாவில் வெளியாகும் முன்னரே லண்டனில் இந்திய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருந்த அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு அங்கே திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

6 அமெரிக்க அரசாங்கம் மட்டுமின்றி, குவைத், சிங்கப்பூர், சவுதி அரேபியா,மொரிஸியஸ் நாடுகளின் அரசத் தலைவர்களால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இந்திய நடிகர் சிவாஜி ஒருவரே.

7 சிவாஜி நடித்த ‘பாரத விலாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் நெகடிவ் உரிமையை வாங்கியது இந்திய அரசு. அதேபோல் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை தாமாகவே முன்வந்து வாங்கியது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நிறுவனமான டுவென்டியத் செஞ்சுரி பாஃக்ஸ் நிறுவனம். தமிழில் கேளிக்கை வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் சிவாஜியின் ‘கப்பலோட்டிய தமிழன்’

8 ஒரே வருடத்தில் ஒரே நடிகர் நாயகனாக நடித்த மூன்று திரைப் படங்கள் தேசிய விருது பெற்று சாதனை படைத்தது சிவாஜிக்கு நிகழ்ந்த அதிசயம். 1961-ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த திரைப்படமாகவும், ‘கப்பலோட்டிய தமிழன்’ தமிழில் சிறந்த படமாகவும் ‘பாச மலர்’ தமிழில் இரண்டாவது சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றன.

9 உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் தமிழ் படம் சிவாஜியின் ‘பாவை விளக்கு’ அதே போன்று ஜெய்ப்பூர் அரண்மையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’..

10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in