

பரப்பளவில் தமிழ்நாட்டை விடவும் சின்னஞ்சிறு தேசம் தைவான். அங்கு முதன்முதலில் சொந்தமாகத் திரைப்படம் தயாரிக்கப்பட்டதே 1948-ல்தான். அதுவும் அரசின் ஊதுகுழல் ஆவணப்படங்களாக. சினிமாவைக் கலை வடிவமாக, பொழுதுபோக்கு ஊடகமாகக் கையிலெடுக்கவே அங்கு நெடுங்காலமானது.
குங்ஃபூ தற்காப்புக் கலை மன்னன் புரூஸ் லீயின் படங்கள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கம், தைவானையும் விட்டுவைக்கவில்லை. குங்ஃபூவையும் காதலையும் கதைக் கருவாக வைத்து, அங்கு தயாரான படங்கள் 70-களில் தைவானில் வரவேற்பு பெற்றன. இப்படித் தட்டுத்தடுமாறி ஜனரஞ்சகமான படங்களைத் தயாரிக்கத் தொடங்கினாலும், சீன மற்றும் ஹாலிவுட் படங்களோடு வர்த்தக ரீதியாகப் போட்டிபோட்டு வசூலைக் குவிக்க முடியவில்லை.
வேறுவழியின்றி, புதிய சிந்தனை பாய்ச்சல் கொண்ட இளம் இயக்குநர்களை 1980-களில் களம் இறக்கியது தைவான் திரைத்துறை. அதன் பிறகே உண்மையான தைவான் சினிமா ஜனித்தது. அவை மக்களின் நிதர்சனங்களைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தத் தொடங்கின. இதைத் தொடர்ந்து இத்தாலியின் ‘நியோ ரியலிஸம்’ அலைக்கு இணையான யதார்த்தத் திரைக் காவியங்களைப் படைத்துவருவதாக உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது தைவான் சினிமா.
இத்தகைய திரைப்படங்களில் சிறந்த வற்றை உலகத் திரை ஆர்வலர்களுக்குக் கொண்டு சேர்க்கவிருக்கிறது ‘தைவான் திரைப்பட விழா 2018’. ஆண்டுதோறும் சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’ திரைப்படச் சங்கம், சென்னையில் உள்ள தைப்பே பொருளாதார மற்றும் கலச்சார மையத்துடன் இணைந்து மூன்று நாள் தைவான் திரைப்பட விழாவை நடத்துகிறது. சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாட்களின் மாலைப் பொழுதுகளில் இந்தத் திரையிடல் நடைபெற இருக்கிறது.
காதலனை இணையத்தில் தேடியவள்
ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு நிழலுல ரவுடிக் குழுக்களின் மோதல்களால் தைவான் 1980-களில் என்னவானது என்பதை விவரிக்கிறது, ‘மோங்கா’ (Monga). ஆனால், இதில் தாதாக்கள் விடலைப் பருவப் பையன்கள் என்பதுதான் விஷயமே.
பள்ளிக்குச் செல்லும் பாதையில் சக மாணவி ஒருத்தி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்துபோகிறான் ஹூவாங். அவன் கண்ட அதே காட்சியை வேறு இரு மாணவர்களும் பார்த்துவிடுகிறார்கள். அவரவர் கோணத்தில் கொலையாளியைக் கண்டுபிடிப்பதே ‘பார்ட்னர் இன் கிரைம்’ (Partner in Crime) படம்.
தங்களுடைய கனவுகளைத் துரத்திச் செல்லுகிறார்கள் மூன்று துடிப்புமிக்க மாணவர்கள். ஆனால், அன்றாடத்தின் நெருக்கடி அவர்களைச் சுழற்றி அடிக்கிறது என்பதைச் சொல்லுகிறது, ‘கேர்ள்ஃபிரெண்ட் பாய்ஃபிரண்ட்’ (Girlfriend Boyfriend).
ரேடியோவில் தொகுப்பாளராகப் பணிபுரியும் நாயகி. நடுநிசியில் மாயமாகிப் போன தன்னுடைய காதலனைச் சமூக ஊடகங்கள் வழியாகவும் தன்னுடைய ஆர்.ஜே. பணி மூலமாகவும் தேடிக் கண்டுபிடிப்பதே, ‘ஹனி பூபூ’ (Honey Pupu).
உணவகத்தில் வேலை பார்க்கும் அவுசான் திடீரென்று விசித்திரமாக நடந்துகொள்கிறான். இதனால் அவனுடைய வேலை பறிபோகிறது. சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்படுகிறான். வீட்டுக்கு வந்தவன் யாருடனும் பேச மறுத்துப் படுத்துக்கிடக்கிறான். ஆனால், ஒரு நாள் தன் சகோதரியையே கொன்றுவிட்டுப் பித்துப்பிடித்த நிலையில் கிடக்கிறான் என்பதுபோன்ற திகில் நிறைந்த காட்சிகளுடன் திரையில் விரிகிறது, ‘சோல்’ (Soul).
தைவான் திரைப்பட விழா குறித்துக் கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள: https://bit.ly/2P8LmVs.