

‘‘ஒரு போலீஸ் கேரக்டர் செய்து முடித்துவிட்டால், ‘அப்பாடா.. நம்ம கேரியரில் ஒரு லேன்ட்மார்க் கிடைச்சாச்சு!’ என நம் ஹீரோக்களில் சிலர் சந்தோஷப்படலாம். அந்த மாதிரி இங்கே ஒரு ஆண், திருநங்கை கதாபாத்திரம் ஏற்கும்போது அது சரியாக அமைந்துவிட்டால் அதற்கும் தனி முத்திரை உண்டு.
ஆனால், விஜய்சேதுபதி இங்கே எந்த ஒரு விஷயத்தையும் தன்னோட நடிப்பில் கொண்டுவர முடியும்கிற இடத்தில் இருக்கிறார். அதனால்தான் திருநங்கையாக அவரைப் பொருத்தினோம். அதேபோல ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் மற்ற கதாபாத்திரங்களும் அதனதன் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டன!’’ என்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
அவரது இயக்கத்தில் ’ஆரண்ய காண்டம்’ வெளியாகி, ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…
சிறந்த இயக்குநர் என்று பெயர் வாங்கிவிட்டு இம்முறை தயாரிப்பையும் கையில் எடுத்திருக்கிறீர்கள். இந்தப் படம் வெற்றிபெற்றால் அது இயக்குநரின் வெற்றியாகத்தானே இருக்கும்?
தயாரிப்பாளரின் வெற்றியாக இருக்கும். தயாரிப்பாளர் என்றால் இன்னும் கொஞ்சம் பொறுப்பு அதிகமாகக் கூடும் என்பதால்தான் அதையும் ஏற்றேன். தயாரிப்பாளர் வெற்றி அடைந்தால்தான் மொத்த யூனிட்டும் வெற்றிபெற்றதாக அர்த்தம்.
படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரைப் பார்க்கும்போது 24 மணி நேரத்துக்குள் நடக்கும் கதை போலத் தெரிகிறதே?
ஒவ்வொரு கதாபாத்திரமும் 6 மணி நேர இடைவெளிக்குள் அவரவர் வேலைகளை முடிக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஒரு கதாபாத்திரத்துக்கும் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதையின் பின்னணிக் களம். மற்றபடி எந்த ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிச் சொன்னாலும் கதையின் முடிச்சு அவிழ்ந்துவிடும்.
‘ஆரண்ய காண்ட’த்தில் உங்கள் திரைக்கதையும் பேசப்பட்டது. ஆனால், இந்தப் படத்துக்கு மிஷ்கின், நலன்குமாரசாமி, நீலன் கே. சேகர் என மூன்று இயக்குநர்களைக் கூடுதல் திரைக்கதை ஆக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்களே?
பிச்சைக்காரனுக்கு என்ன பெரிய விருப்பம். மிஷ்கின், நலன்குமாரசாமி, நீலன் இந்த மூவரும்தான் எனக்குப் பிச்சைபோட்டவர்கள். இவர்கள் மூவரிடமும் வெவ்வேறுவிதமான ஃப்ளேவர் உண்டு. இசை மாதிரிதான் இந்த வேலையும். கதைக்குச் சிறந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு இருந்தால், இயக்குநரின் வேலை இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்பினேன். எனது நம்பிக்கைக்கு அழகான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
உங்கள் படம், தேர்ச்சியும் உயர்ந்த ரசனையும் கொண்ட ரசிகர்களைத்தான் திருப்திப்படுத்தும் என்ற ஒரு கருத்து இருக்கிறதே?
இங்கே ‘பாகுபலி’ மாதிரியான படங்கள் எல்லாத் தரப்பினருக்கும் பிடிக்கும். என்னைப் போன்ற இயக்குநர்கள் மெச்சூர்டு ஆடியன்ஸை அணுகும்போது அவர்கள் கையில் கத்தியோ துப்பாக்கியோ வைத்திருந்தால் அதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்கிற பொறுப்பை விதைப்பதாகவே நினைக்கிறேன். அந்தப் பொறுப்பு வரணும் என்றால் நிச்சயம் மெச்சூரிட்டி வேண்டும். அதற்காகத்தான் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்று சொல்கிறோம்.
திருநங்கை கதாபாத்திரத்துக்காக விஜய்சேதுபதியைத் தேர்வு செய்தது சரி, இந்தக் கதைக்குள் பகத் பாசில் எப்படி வந்தார்?
யாரோ ஒருவர் ட்விட்டரில் எழுதும்போது, ‘ஆரண்ய காண்டம்’ படம் பார்த்தேன். அந்த இயக்குநருடன் பணிபுரிய விருப்பமாக இருக்கிறது!’ என பகத் பாசில் குறிப்பிட்டிருப்பதாக என் கவனத்துக்கு வந்தது. நானும் செக் செய்து பார்த்தபோது அப்படித்தான் இருந்தது. பின்னால்தான் தெரிந்தது பகத் அப்படிப் பதிவிடவே இல்லை என்பது. அப்போதுதான் நாம ஒரு மாங்கா மடையன் என்று நினைத்துக்கொண்டேன். அந்த விருப்பத்தில்தான் அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க அணுகினேன்.
அப்போது அவர், ‘ஓ.கே செய்வோம். அதுக்கு முன்பு நீங்கள் இயக்குவதாக இருந்தால் உடனே ஓ.கே’ என்றார். அப்படித்தான் இந்தப் படத்துக்குள் அவர் வந்தார். விஜய்சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட கதாபாத்திரங்களைவிட வேம்பு கதாபாத்திரத்துக்குத்தான் பெரிய அளவில் தேடலில் ஈடுபட்டேன். ஒரு கட்டத்தில் சமந்தா வந்ததும் அது வேறொரு வடிவம் பெற்றது.
‘தி சர்க்கிள்’ ஈரானிய படத்துக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கும் ஏதாவது தொடர்புகள் உண்டா, ஏதோ சில பாதிப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியானதே?
‘ஆரண்ய காண்டம்’ படம் முடித்துவிட்டு அடுத்த படம் ஓ.கே ஆகவில்லையே என்று சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அறையில் இருந்த ‘சர்க்கிள்’ டிவிடியை எடுத்து போட்டுப் பார்த்தேன். ஈரானில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது இப்படி ஒரு படம் பண்ண முடிகிறதே. நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அப்புறம் என்ன என்று தோன்றவே உடனே அடுத்த படத்தை நாமே தொடங்குவோம் என்ற பாதிப்பை ஏற்படுத்திய விஷயம் மட்டும்தான் அந்தப் படத்துக்கும், இந்தப் படத்துக்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி எதுவும் இல்லை.
இணையம் வழியே ‘டிஜிட்டல் பிளாட்ஃபார்’மில் படம் பார்க்கும் போக்கு பெருகி வருகிறதே?
நான் பெரிய திரை ரசிகன். திரையரங்குக்குப் போய்ப் படம் பார்ப்பது திருவிழாவுக்குச் செல்வது போன்றது. அஜித் ஸ்லோ மோஷன்ல வர்றதையும், விஜய் ஓபனிங் காட்சியையும் இரண்டு பேர் அமர்ந்துகொண்டு பார்ப்பதில் என்ன ‘த்ரில்’ இருக்கப்போகிறது. நூற்றுக்கணக்கான பேர் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டாடுவதில்தானே சினிமாவின் மகிழ்ச்சி இருக்கிறது.