

கடந்த ஆண்டில் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட இந்தியர் சன்னி லியோன். கலாச்சாரத்தைக் கெடுத்ததாகக் குற்றம்சாட்டி அவரைக் கைது செய்ய வேண்டும், நாடு கடத்த வேண்டும் என்று ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அதே மக்கள் அவர் கடை திறப்பு விழாவுக்கு வருவதைக்கூடக் கடலெனத் திரண்டு வரவேற்பதுடன், அந்த மக்கள்திரள் படங்களை ஒரு தேசியக் கட்சிக்குக் கூடியதாகச் சித்தரிக்க முயன்று மூக்குடைபடுகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில் இயங்கும் பல்வேறு தொழில்துறைகளில் பெரியவர்களுக்கான அந்தரங்கப் பொழுதுபோக்குகளில் ஒன்றாக நீலப்படத் தயாரிப்பும் அடங்கும். ஆனால், அங்கிருந்து தொட்டுத்தொடரும் அவமரியாதைகளையும் ஏளனங்களையும் புறந்தள்ளி, திரைப்பட நாயகியாகவும் மாடலாகவும் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளச் சன்னி லியோன் பிற்பாடு போராட வேண்டியதாயிற்று. ஒரு பக்கம் பெண்ணைக் கடவுளாகப் போற்றுவதாகச் சொல்லிக்கொண்டு மறுபக்கம் அதிகரிக்கும் வல்லுறவுகளால் பெண்கள் வாழத் தகுதியற்றது என சர்வதேசக் குற்றச்சாட்டுக்கு வழி செய்யும் குழப்பமான தேசத்தில் சன்னி லியோன்களும் படாதபாடு படுகிறார்கள்.
கடந்தகாலம் என்றபோதும் நீலப்பட நாயகி என்ற அவரது பிம்பம் பொதுவெளியில் வெகுவாய் கேவலப்படுத்தப்படுகிறது. வாடகைத் தாய் வாயிலான இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பால் ஒரு பெண் குழந்தையை சன்னிலியோன் தத்தெடுத்தபோது, இப்படித்தான் இரக்கமின்றி வக்கிரத்தைக் கக்கினார்கள். அதே நேரம், தனது பாலிவுட் கணக்கைக் குத்துப்பாடலில் தொடங்கி, சட்டென அதற்கு முழுக்கு போட்டு முதன்மையான கதாபாத்திரங்களுக்கு நகர்ந்திருப்பதை மேன்மையாகப் பாராட்டுகிறார்கள். தமிழில்கூட ‘வடகறி’யில் ஒற்றைப் பாடலுக்கு ஆடியவர், அடுத்த அடியை ‘வீரமாதேவி’ என்ற சரித்திரப் படத்தின் நாயகியாக மாற்ற வைத்திருக்கிறார்.
இந்தப் பின்னணியில் சன்னி லியோன் கடந்துவந்த பாதையில் சுவாரசிய கதையோட்டத்துக்கான மூலப்பொருள் அதிகம் இருக்கவே ’கரன்ஜித் கவுர்: த அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’(Karenjit Kaur-The Untold Story of Sunny Leone) என்ற பெயரில் 10 அத்தியாயங்களுடனான தொடரின் முதல் சீஸனை ஜூலையில் ‘ஜீ5’ வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக 6 அத்தியாயங்களுடன் இரண்டாம் சீஸன் 2 வாரங்களுக்கு முன்னர் வெளியாகி உள்ளது. தமிழ் உட்பட பல்வேறு பிராந்திய மொழிகளிலும் இதைப் பார்க்கலாம்.
முதல் சீஸனில் பக்கத்து வீட்டுப் பெண் போன்று வெள்ளந்திச் சிறுமியாக இளம்வயது சன்னி லியோன் பாத்திரத்தில் ‘ரைசா சாஜனி’ பார்வையாளர்களை ஈர்த்தார். இரண்டாவது சீஸனில் அம்மாவாக வரும் க்ருஷா கபூர் கவனிக்க வைக்கிறார். வாழ்க்கையில் தடம்புரண்ட மகளிடம் ஒரு தாயாகச் சீறும் இடத்திலும் குடிப் பழக்கத்தில் சறுக்கி விழுந்ததும் அதற்கு மகள் மீது பழிபோடுவதும் பின்னர் உண்மையைக் கொட்டுவதுமாகப் பிரமாதப்படுத்துகிறார். பிரச்சினை எதுவானாலும் குடும்ப அமைப்பு சிதறக் கூடாது எனக் குடும்பத்தினர் அனைவரும் எடுத்துக்கொள்ளும் உறுதியும் அதற்கான அவர்களின் சமரசமும் கதையின் மைய இழையாகச் செல்கிறது. சன்னிலியோன் வாழ்க்கையின் தனிப்பட்ட துயரம், எதிர்காலக் கணவனை கண்டுகொண்டது, இவற்றுடன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய திருப்பமான தருணத்தில் இரண்டாவது சீஸனை முடித்திருக்கிறார்கள்.
சமூக ஊடகம் போன்றவற்றில் கடந்தகாலக் கறுப்புப் பக்கங்களை ஒருவாறாக ஒப்பேற்றுவதுடன், ஒளிமயமான எதிர்காலத்தை நம்பி நம்மில் பலரும் மேற்கொள்ளும் சுய மார்க்கெட்டிங் உத்திகளுக்கு ஒப்பான ஒரு முயற்சி இந்தத் தொடரின் மூலமாக சன்னி லியோனுக்கு வாய்த்திருக்கிறது. அதற்காக அவரை நியாயப்படுத்தும் விதமாய் தொடர் முழுக்க அதையே தொடர்வது சன்னி லியோனின் ரசிகர்கள் தவிர மற்றவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. அதிகப்படி எதிர்பார்ப்பில் பரவலாகப் பார்வையாளர்களைச் சென்றிருந்த போதும், சொதப்பலான நாடகம் என சினிமா விமர்சகர்களின் கண்டனத்தையும் இந்தத் தொடர் சம்பாதித்துள்ளது.
பெரியவர்கள் மட்டுமே பார்க்க உகந்த தொடர் என்று ’ஜீ5’ அறிவுறுத்துகிறது. ஆனால், அத்தகைய எச்சரிக்கை எதுவுமின்றி வெளியாகும் சின்னத்திரை சீரியல்கள் பலவற்றுடன் ஒப்பிடும்போது ‘கரன்ஜித் கவுர்’ தொடர் அத்தனை மோசமல்ல.
பெரியவர்கள் மட்டுமே பார்க்க உகந்த தொடர் என்று ‘ஜீ5’ அறிவுறுத்துகிறது. ஆனால், அத்தகைய எச்சரிக்கை எதுவுமின்றி வெளியாகும் சின்னத்திரை சீரியல்கள் பலவற்றுடன் ஒப்பிடும்போது ‘கரன்ஜித் கவுர்’ தொடர் அத்தனை மோசமல்ல.