போர்முனையும் பேனா போராளியும்

போர்முனையும் பேனா போராளியும்
Updated on
1 min read

‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர்.

துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார்.

கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் அந்தக் கோரம் அவருக்கு நடந்தது. ஒற்றைக் கண் பறிபோன இடத்தை ஒட்டுவில்லை ஒன்றால் மூடிக்கொண்டு, அதன் பின்னரும் தனது அதிரடிப் பணிகளைத் தொடர்ந்தார். ஆனால், போரின் அவலங்களை நெருக்கமாகக் கண்டதில் கடும் மனவழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். தனது 28 ஆண்டுகாலப் பத்திரிகையாளர் பணியின் நிறைவாக 2012-ல் சிரிய உள்நாட்டுப் போரில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தார்.

அவரது மறைவையொட்டி ‘மேரி கால்வின்ஸ் பிரைவேட் வார்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை ஒன்றை அடிப்படையாக வைத்து ‘எ பிரைவேட் வார்’ திரைப்படம் உருவாகி உள்ளது.

மேரி கால்வினாக ரோஸ்மண்ட் பைக் நடித்துள்ளார். தமிழ்ச்செல்வன் என்ற பாத்திரத்தில் ஈழ எழுத்தாளர் ஷோபாசக்தி வருகிறார். மேத்யூ ஹெயின்மேன் இயக்கியுள்ள ‘எ பிரைவேட் வார்’ திரைப்படம் நவம்பர் 16 அன்று திரைக்கு வருகிறது.ஹாலிவுட் ஜன்னல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in