ஹாலிவுட் ஜன்னல்: பெண்.. பேனா.. புரட்சி!

ஹாலிவுட் ஜன்னல்: பெண்.. பேனா.. புரட்சி!
Updated on
1 min read

தனது எழுத்து, வாழ்க்கையின் மூலம் பெண்ணியப் பொறியைத் தெறிக்கவிட்ட பிரெஞ்சு பெண் எழுத்தாளர் கொலேட். ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னரே எழுத்துப் புரட்சி செய்த இவரின் கதையைச் சொல்ல வருகிறது ‘கொலேட்’ என்ற ஹாலிவுட் திரைப்படம்.

வனப்பும் அறிவும் மிக்க இளம்பெண்ணாக வளருகிறார் காப்ரியேல் கொலேட். வயதில் 14 ஆண்டுகள் மூத்தவரான கணவருடன் பாரிஸ் நகரில் தொடங்கும் அவரது வாழ்க்கை, கடும் தடுமாற்றங்களைச் சந்திக்கிறது. தற்செயலாக மனைவியின் எழுத்தாற்றலை அறிந்துகொண்ட கணவர், தன் பெயரில் அவளது படைப்புகளை வெளியிட்டு பணமும் புகழும் அடைகிறார். கணவரின் துரோகம் புரிந்து குடும்ப வாழ்க்கையிலிருந்து வெடித்துக்கொண்டு வெளிப்படும் கொலேட், அதன் பின்னர் வைத்த அடி ஒவ்வொன்றும் பெண்ணியப் பாதைக்கான புரட்சிச் சரவெடி.

சுதந்திரமான எழுத்தின் வசீகரத்திலும், சொந்த வாழ்க்கையைத் தான் விரும்பியபடி அமைத்துக் கொண்டதிலும் அப்போதைய பிற்போக்கான சமூகச் சூழ்நிலையில் அதிக அளவிலான விமர்சனங்களை எதிர்கொண்டவர் கொலேட். தனது காலத்துக்குப் பின்னர் அவற்றுக்காக உலகம் முழுவதுமிருந்து பெண்ணிய ஆதரவை ஒருசேரப் பெற்றவர். பத்திரிகையாளர், நாடக நடிகை என்ற பன்முகமும் இவருக்கு உண்டு. இவரது நாவல்களில் ஒன்று நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் இவரின் கதையில் வளர்ந்த திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியதும் வரலாறு.

போராட்டமும் பெண்ணியமும் பாலியல் தேடலும் கலந்த இவரது வாழ்க்கையே தற்போது திரைப்படமாகி உள்ளது. கொலேட் கதாபாத்திரத்தை கெய்ரா நைட்லி ஏற்றிருக்கிறார். உடன் டொமினிக் வெஸ்ட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை வாஸ் வெஸ்ட்மோர்லேண்ட் இயக்கி உள்ளார்.

திரைவிழாக்களைத் தொடர்ந்து, விரைவில் உலகின் பெரும்பாலான நாடுகளில் ‘கொலேட்’ வெளியாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in