

நளினம், கவர்ச்சி ஆகியவற்றை ஒரு நடிகை வெளிப்படுத்துகிறார் என்றால் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒரு சிலர் இதோடு நிறுத்தாமல் வித்தியாசமான வேடங்களிலும் ஜொலிப்பார்கள். மிகச் சிலரே மிகவும் வித்தியாசமான, மிகவும் சவாலான வேடங்களை ஏற்று அவை எல்லாவற்றிலும் பிரகாசிப்பார்கள்.
அத்தகைய அரிதான நட்சத்திரமாக இந்தியத் திரை வானில் மின்னிக்கொண்டிருக்கிறார் பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா. அடுத்த மாதம் வரவிருக்கும் ‘மேரி கோம்’ திரைப்படம் அவரது சாதனைகளின் மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக ஜொலிக்கிறது.
2000–ல் உலக அழகிப் பட்டம் வென்ற இவருக்கு, நடிப்பதற்கான முதல் வாய்ப்பைக் கொடுத்த பெருமை தமிழ்த் திரையுலகையே சாரும். 2002-ல் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமானார் ப்ரியங்கா சோப்ரா.
அதன் பிறகு தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை. காரணம் பாலிவுட் அவரை உச்சி முகர்ந்து சுவீகரித்துக்கொண்டது. ‘ஆண்டாஸ் ’ என்ற அறிமுக இந்திப் படத்திற்காகச் சிறந்த அறிமுகக் கதாநாயகிக்கான ‘பிலிம்பேர்’ விருதை அள்ளிக்கொண்டார். இதைத் தொடர்ந்து பல படங்களில் ப்ரியங்காவின் முத்திரை நடிப்புக்காக பாலிவுட் ரசிகர்கள் அவரைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
‘ஃபேஷன் ’ படத்தில் பிஸியான விளம்பர மாடல், ‘7 கூன் மஃப்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தில் ஏழு பேரைக் கொன்று குவிக்கும் சைக்கோ , ‘பார்பி’ திரைப்படத்தில் மனவளம் குன்றிய ஆட்டிஸம் பாதித்த பெண் என பல பரிமாணங்களில் அசத்தினார்.
ப்ரியங்காவின் அவதாரங்களுக் கெல்லாம் மகுடமாக அமைந்தது 2004-ம் ஆண்டு வெளியான ‘ஐத்ராஸ்’ திரைப்படம். இந்தப் படத்தில் கவர்ச்சியான, தைரியமான வில்லியாகத் தோன்றி மிரட்டினார். இதற்காகச் சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருதை வாங்கினார்.
இந்த விருதை ஒரு கதாநாயகி வென்றது அதுவே முதல் முறை.’இமேஜ்’ பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் கதாபாத்திரங்களையும், அவற்றை உருவாக்கிய இயக்குநர்களையும் மட்டுமே நம்பி அவர் ஏற்று நடித்த எல்லா வேடங்களும் அவருக்குப் புகழைச் சேர்த்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், மேரி கோம் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
ஐந்து முறை உலகக் குத்துச் சண்டை போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனையான மேரி கோமாக மாறுவது அத்தனை சுலபமானது அல்ல. பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இப்படத்தை, ஓமங் குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மேரி கோமாக எல்லா வகையிலும் தன்னை மாற்றிக்க்கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா, மேரி கோம் என்று ரசிகர்கள் தன்னைத் திரையில் நம்பியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவருடைய அர்ப்பணிப்பும், முயற்சிகளும் அசாதாரணமானவை என்பதை இந்தப் படத்தின் டிரெய்லரை அல்ல, ஸ்டில்களைப் பார்த்தாலே புரியும்.
மேரி கோம் குத்துச் சண்டைக் களத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டதுபோலவே ப்ரியங்கா நடிப்புக் களத்தில் எத்தகைய கதாபாத்திரத்தையும் கண்டு அஞ்சாத வீராங்கனையாகவே தன்னை வளர்த்துவந்திருக்கிறார். அதற்கு முழுமையான களம் அமைத்துக் கொடுத்துவிட்டது மேரி கோம் திரைப்படம். மேரி கோமாக ப்ரியங்காவின் ஒவ்வொரு பஞ்ச்சையும் செப்டம்பர் 5-ம் தேதியன்று ரசிகர்கள் எதிர்கொள்ளலாம்.