

சித்ராலயா நிறுவனம் எம்.எஸ்.விக்கு பிறந்த வீடு போன்றது. தனது தாயாரிடம் பயமும் பக்தியும்கொண்ட எம்.எஸ்.வி, சிலசமயம் ரெக்கார்டிங் வேலைகள் முடிந்தபிறகு, தனது குழுவில் இருந்த வெங்கடேஷ், நஞ்சப்பா ஆகியோருடன் இரவுப் பார்ட்டிக்குச் சென்றுவிட்டு சற்று தாமதமாக வீட்டுக்குச் செல்வதுண்டு.
அதுபோன்ற சமயங்களில் “ ஏண்டா விசு லேட்?” என்று கேட்பாராம் அவரது அம்மா. அப்படிக் கேட்கும்போதெல்லாம் “சித்ராலயா போயிருந்தேன். ஸ்ரீதரும், சடகோப அண்ணாவும் அடுத்தப் படத்துக்கு கதை சொன்னாங்க. அதான் லேட்” என்று சொன்னால் பேசாமல் போய்விடுவார்.
சித்ராலயா நிறுவனத்தின் மீது அந்தத் தாய்க்கு அவ்வளவு நம்பிக்கை, மதிப்பு. ரெக்கார்டிங் ஸ்டுடியோ மராமத்து வேலைகளுக்காக ஒருவாரம் விடுமுறை விட்டிருந்த நேரத்தில் “சடகோப அண்ணாவைப் பார்த்துட்டு வந்துடுறேன்” எனச் சொல்லிவிட்டு விசு எங்கேயோ போக, கோபுவோ விசுவைத்தேடி அவர் வீட்டுக்குப் போய்விட்டார்.
கோபுவைக் கண்ட விசுவின் தாயார் '' என்ன கோபு.. கதை சொல்லிகிட்டே இருக்கீங்க. என் பிள்ளை டெய்லி லேட்டா வரான்.'' என்று கேட்டுவிட்டார். விஷயம் கோபுவிற்கு புரிந்து விட்டது. ''இல்லேம்மா.கதையை மாத்திக்கிட்டே இருக்கோம். அதனாலதான் விசுவை தொந்தரவு செய்யறோம்'' என்று சமாளித்துவிட்டார். பின்னர் எம்.எஸ்.வியைப் பார்த்தபோது
“என்ன விசு, அம்மாகிட்ட எங்களை மாட்டி விடறே” என்று கேட்டால், “ உங்க பெயரை சொன்னாதான் அம்மா திட்ட மாட்டாங்க'' என்பார் விசு. அவ்வளவு உரிமை எடுத்துக்கொள்ளும் எம்.எஸ்.வி சித்ராலயா படங்களுக்குக் கொடுத்த இசையும் உயர்ந்த தரத்துடன் இருந்தது. ‘நெஞ்சிருக்கும் வரை’யில் எம்.எஸ்.வியின் அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தன.
‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் கோபுவுக்கு இந்தப் படத்தில் வேலை இல்லை என்று நகைச்சுவை பிரியர்கள் வருத்தப்பட்டனர். இது ஸ்ரீதரின் காதுக்கும் எட்டியது. உடனே நண்பனைத் தேடி திருவல்லிக்கேணிக்கு வந்துவிட்டார்.
“கோபு! அடுத்து நான் இரண்டு படம் எடுக்கப் போறேன். எனக்காக ஒன்று. உனக்காக ஒன்று'' என்றவர் அதற்கான அதிகாரபூர்வை அறிவிப்பையும் செய்துவிட்டார். ஒன்று மிகவும் சோகமான படம். மற்றொன்று நகைச்சுவை படம். காலையில் சோகப்படமும் இரவு நகைச்சுவைப் படமும் இடைவிடாமல் படமாக்கப்பட்டன.
அழுகையும் சிரிப்பும்
இரண்டு படங்களிலும் காஞ்சனாதான் கதாநாயகி. கோபு ஒரே மூச்சில் எழுதிய முழு திரைக்கதை ‘உத்தரவின்றி உள்ளே வா’. தான் எழுதிய படங்களிலேயே கோபுவுக்கு மிகவும் பிடித்த படமும் இதுதான். இந்தக் காலத்துக்கும் ஏற்றப் புதுமையான கதை. நாகரீகம் நிறைந்த நகைச்சுவை. படத்தின் இயக்குநர் என்.சி. சக்கரவர்த்தி.
ரமாபிரபா நடித்த ‘தேனாற்றங்கரையினிலே’ பாடல் அற்புதமாகப் படமாக்கப்பட்டது. வானொலியில் வேண்டும் என்றே இரவு நேரங்களில் அந்தப் பாடலை ஒலிபரப்பிப் பயமுறுத்துவார்கள். ரமாபிரபாவுக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. நாகேஷ் பாகவதராக ‘பூமியில் மானிட ஜென்மம் எடுத்து’ என்று பாடியபோது, விசிலும் கைதட்டலும் அரங்கை அதிரச் செய்தன.
ஸ்ரீதர் இயக்கிய படம் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ பெண்களை மிகவும் பாதித்த படம். ஜெமினி, காஞ்சனா, பாரதி, முத்துராமன், ருக்மணி ஆகியோர் நடித்த இந்தப் படம் பெண்களைக் கண்ணீர் விட வைத்தது. காஞ்சனா காலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிழிய பிழிய அழுது விட்டு, இரவு ‘உத்தரவின்றி உள்ளே வா’ படத்தில் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பார்.
இடைவெளியில் ஒரு நாடகம்
‘உத்தரவின்றி உள்ளே வா’ படத்தில் கோபு பிஸியாக இருந்தபோது செட்டில் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி அங்கலாய்ப்பார். “கோபு சார், திருவல்லிக்கேணி யூனிட்டி கிளப் ஆட்கள் உங்கமேல ரொம்ப கோபமா இருக்காங்க. நீங்க அவங்களுக்கு நாடகம் எழுதித் தராம சினிமாவுலயே கவனம் செலுத்தறீங்கன்னு ஃபீல் பண்றாங்க..'' என்றார். மனோரமாவும் “என்ன அண்ணே. அடுத்த டிராமா எப்போ எழுதப் போறீங்க?'' என்று கேட்டபடி இருந்தார்.
கோபுவின் மூளைக்குள் மீண்டும் நாடக அரங்கம் ஒளிர்ந்தது. கரகோஷம் காதுகளுக்கு ஒலித்தது. ‘உத்தரவின்றி உள்ளே வா’ படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் யூனிட்டி கிளப்புக்காக ஒரு நாடகத்தை எழுதத் தொடங்கினார். பிறகு நாடகத்தை அவர் படித்து காட்டுவதற்காக கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டில் நடிகர்களும் கிளப் ஆட்களும் ரகசியமாகத் திரண்டனர்.
1971-ல் பங்களாதேஷ் யுத்தத்தை முன்னிட்டு வெளியே ‘பிளாக் அவுட்’ நடந்து கொண்டிருக்க, உள்ளே கோபு வசனங்களைப் படித்து காட்டுவார். நகைச்சுவை வசனங்களைக் கேட்டு ஒரே சிரிப்பு சத்தமாக இருக்கும். நாடக வாசிப்பும் அதன்பின் விவாதமும் நடந்துமுடிந்தபிறகு
“இந்த நாடகம் உங்களுக்குப் பெரிய பெயரை வாங்கித் தரப்போகிறது. பாருங்க.'' என்று ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சொன்னார்.
‘காதலிக்க நேரமில்லை’ வாங்கிக் கொடுத்த பெயரை இந்த நாடகம் திரைப்படமாகும்போது உங்களுக்கு வாங்கிக் கொடுக்கும், சந்தேகமேயில்லை'' என்றார் முத்துராமன். அந்த நாடகம்தான் ‘காசேதான் கடவுளடா’.
மறக்கமுடியாத மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்
கோபுவுக்கு ஒரு செண்டிமெண்ட். அவரது நாடகங்கள் எல்லாமே மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்ஸில் அரங்கேறுவதுதான் வழக்கம். மறைந்த மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் ராஜகோபாலனுக்கு கோபுவின் நகைச்சுவை மீது அலாதி பிரியம். ‘காசேதான் கடவுளடா’ நாடகம் அரங்கேற்றம் ஆனது. அரங்கில் ஒரே சிரிப்பு அதிர்வெடி, கலாட்டாதான். பார்வையாளர்கள் சிரிப்பதற்கு வசதியாக நடிக நடிகையர் காத்திருந்து அடுத்த வசனத்தைப் பேசவேண்டி இருந்தது. அந்த நாடகத்தை அடுத்துவந்த மூன்று மாதங்களுக்கு அட்வான்ஸ் புங்கிங் செய்துகொண்டது மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்.
கதைப்படி சித்தியின் கண்டிப்பால் கையில் பணம் இல்லாமல் தவிக்கும் மூர்த்தியின் மூத்த தாரத்து மகனும் அவனது சிற்றப்பா மகனும் தங்கள் டீக்கடைக்கார நண்பனை பத்ரிநாத் சாமியார் வேடம் போட்டு அழைத்து வருவார்கள். டீக்கடைக்காரர் சாமியாராக வந்து, வீட்டுப் பையன்கள் பணப் பற்றாக்குறைக்காக, திட்டம் போட்டு சொந்த வீட்டில் திருடுவார்கள். இந்த நாடகம் திரைவடிவம் பெற்றபோது சினிமாவில் லட்சுமி நடித்த கதாபாத்திரத்தை நாடகத்தில் மனோரமா நடித்தார். முத்துராமன் நாடகத்திலும் அதே கதாபாத்திரத்தை செய்தார்.
ஒரு பக்கம் பாலசந்தரின் ராகினி கிரியேஷன்ஸ் நாடகங்கள். மறுபக்கம் சோவின் விவேகா ஃபைன் ஆர்ட்ஸின் அரசியல் நையாண்டி நாடகங்கள், வி.எஸ்.ராகவனின் நாடகங்கள், எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்கள், ஆர்.எஸ்.மனோகரின் புராண நாடகங்கள், காத்தாடி ராமமூர்த்தி குழுவின் சமூக நாடகங்கள் என்று ஆரோக்கியமான போட்டிகள் இருந்த காலகட்டம் அது.
கோபுவின் நாடகங்கள் முழுநீள நகைச்சுவை வகை என்பதால், அவருக்கு எந்தவித போட்டியும் இல்லை. ஒரு நாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சபாவில் ‘காசேதான் கடவுளடா’ நாடகம் நடந்துகொண்டிருந்த சமயம், யாரும் எதிர்பாராத வகையில் அந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது…
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்