

இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்று ஒருவர் உணரும் கணத்தில், அதுவரையில்லாத சக்தியும், புத்தியும் அவருக்கு ஒருங்கே சேரும். இதைப் பழிவாங்கல் கதையொன்றின் வாயிலாகச் சொல்ல வருகிறது செப்டம்பர் 7 அன்று வெளியாகவிருக்கும் ‘பெப்பர்மிண்ட்’ திரைப்படம்.
கோமாவிலிருந்து மீண்டெழும் அந்த இளம் தாய், தன் கணவனையும் ஆசை மகளையும் காணாது தேடுகிறாள். கொடூரர்கள் சிலரால் காரணமின்றி அவர்கள் கொல்லப்பட்ட விவரம் அவளுக்கு நினைவூட்டப்படுகிறது. அழுது அரற்றும் அவளுக்கு, கொலையாளிகள் கைதான செய்தி ஆசுவாசம் தருகிறது. ஆனால், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்குமென்ற அவளது எதிர்பார்ப்பில் மண் விழுகிறது. கறைபடிந்த காவலர்களின் அலட்சியமும் லஞ்சத்தில் திளைக்கும் நீதிபதியும் குற்றவாளிகளைத் தப்பவிடுகின்றனர். விரக்தியில் அந்த அப்பாவிப் பெண் காணாது போகிறாள்.
அதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து, அச்சுறுத்தலாகும் தொடர் கொலைகளைத் துப்புத்துலக்கும் அமெரிக்கப் புலனாய்வுக் காவல்துறையின் விசாரணை, காணாமல்போன, அநீதியால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணிடம் வந்து நிற்கிறது. தனது குடும்பம் கொல்லப்பட்ட ஐந்தாவது நினைவு நாளில் வீறுகொண்டு எழுந்து எதிரிகளை, அவள் வேட்டையாடுவதும் அந்தப் பழிவாங்கும் படலத்துக்குச் சமூக ஊடகங்களில் ஆதரவு வலுப்பதும் தொடர்கிறது. இத்தனை வருடங்களாக அந்தப் பெண் எங்கே மறைந்திருந்தாள், பிரத்தியேக கொரில்லா தாக்குதல்களை எங்கே கற்றுக்கொண்டாள், அவளது வேட்டையாடல் எங்கே சென்று முடிகிறது என்பதான முடிச்சுகள் பின்னர் அவிழ்கின்றன.
திரைக்கதை மீதான நம்பிக்கையில் இந்த அரதப்பழசான பழிவாங்கல் கதையை ‘பெப்பர்மிண்ட்’ ட்ரெயிலரிலேயே துணிந்து சொல்லிவிடுகிறார்கள். ‘டேக்கன்’(Taken) உள்ளிட்ட ஆக்ஷன் த்ரில்லர் படங்களால் கவனம் பெற்ற பிரெஞ்சு இயக்குநர் பீயர் மொரெல் இயக்கிய திரைப்படத்தில், ஜெனிஃபர் கார்னர், டைசன் ரிட்டர், மைக்கேல் மோஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.