

‘தேசம்’ என்னும் பொருள்படும் ‘டைட்டில்’ வைக்க, ‘தேஷ்’ எனும் இந்திச் சொல்லையே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ‘முல்க்’ எனும் உருதுச் சொல்லைத் தேர்வு செய்ததிலிருந்தே இயக்குநர் அனுபவ் சின்ஹா தன்னுடைய அரசியலைப் பேசத் தொடங்கிவிடுகிறார்.
வாரணாசியில் வசித்து வருகிறது, வழக்கறிஞர் முராத் அலி முகமதுவின் (ரிஷி கபூர்) குடும்பம். தங்கள் வீட்டு விசேஷத்தில் இந்துக்களும் கலந்துகொள்ளும் அளவுக்கு மரியாதையான செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்கள் முகமதுவின் குடும்பத்தினர். முகமதுவின் தம்பி பிலாலின் (மனோஜ் போவா) மகன் ஷாஹித் (பிரதீக் பாப்பர்), சில தவறான தொடர்புகளால் ‘ஜிஹாத்’ பாதையைத் தேர்வு செய்கிறார். அவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அதோடு பிரச்சினை முடிந்ததா என்றால் இல்லை.
ஷாஹித் விட்டுச்சென்ற குற்றம், அவர் குடும்பத்தின் மீது படிகிறது. முகமதுவின் வீட்டின் முன் சுவரில், ‘பாகிஸ்தானுக்குப் போ!’, கதவில் ‘தீவிரவாதி’ என்றெல்லாம் அருகில் உள்ள இந்துக்களால் எழுதப்படுகின்றன. ஷாஹித்தின் தந்தை பிலால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரை வெளியில் கொண்டு வர, முராத் அலி முகமதுவும் அவருடைய மருமகளும் வழக்கறிஞருமான ஆர்த்தியும் (தாப்ஸி) சட்டப் போராட்டத்தை நடத்துகிறார்கள்.
இதனிடையே, சிறையில் பிலால் இறந்துவிட, வழக்கை முடித்துவிடலாம் என்று பலரும் முகமதுவிடம் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்தால், தன்னுடைய குடும்பம் தேசத் துரோகிப் பட்டத்துக்கு ஆளாகிவிடும் என்று வேதனைப்படுகிற முகமது, வழக்கைத் தொடர்ந்து நடத்துகிறார். அந்த வழக்கின் தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக முடிந்ததா என்பது மீதிப் படம்.
இந்திய இஸ்லாமியர்களின் நிலை
படத்தின் முதல் பாதி ‘ஃபேமிலி டிராமா’வாகச் செல்ல, இடைவேளைக்குப் பிறகு ‘கோர்ட் ரூம் டிராமா’வாக மாறுகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞராக வரும் சந்தோஷ் ஆனந்த் (அஷுதோஷ் ராணா), ‘இஸ்லாமியர்கள் என்றால் தாடி வைத்திருப்பார்கள், ஐந்து வேளை தொழுவார்கள், கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெடிப்பார்கள்’ எனப் பொதுப் புத்தியில் ஊறிப்போன வாதங்களை முன் வைக்க, முராத் அலி முகமதுவும் ஆர்த்தியும் அவற்றை ‘இந்த வழக்குக்குச் சம்பந்தமில்லாதவை’ என்று சொல்ல, ‘வழக்கே இதுதான்’ என்கிறார் சந்தோஷ். அந்த இடத்தில், இந்தியாவில் இன்றைய இஸ்லாமியர்களின் நிலையைத் தெளிவாக உணர்த்திவிடுகிறார் இயக்குநர் அனுபவ் சின்ஹா.
கதாபாத்திரங்களின் தேர்ந்த நடிப்பு, ஒளிப்பதிவு (இவான் முல்லிகன்) ஆகியவற்றுக்குப் பிறகு, வசனங்கள் இந்தப் படத்துக்கு ஆகப் பெரிய பலம். ‘வரைபடத்தில் உள்ள எல்லைகளுக்கு உட்பட்டு ஒரு நாடு வளர்வதில்லை’, ‘என்னுடைய தாடிக்கும் ஒசாமா பின் லேடனின் தாடிக்கும் உங்களால் வித்தியாசம் காண முடியாவிட்டால், அப்போதும் நான் தாடி வைத்துக்கொள்வதற்கான உரிமை எனக்கு இருக்கிறது’, ‘தீவிரவாதம் என்பது குற்றச் செயல்.
அது எந்த ஒரு மதத்தின் தனிப்பட்ட செயல் அல்ல’ என்பன போன்ற வசனங்கள், ‘நாம்’ (இந்துக்கள்), ‘அவர்கள்’ (இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்) என்ற பிளவு, நம் சமூகத்தில் எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
இன்று ‘பசு’வின் பெயரால் இரக்கமற்ற தாக்குதலுக்கு ஆளாகும் பெருமளவு இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. வாரணாசி அங்குதான் உள்ளது. அது பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி. அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது முகல்சராய் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையம்.
அது சமீபத்தில், காவி நிறம் பூசப்பட்டு, ‘தீன தயாள் உபாத்யாய்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசியல்மயப்பட்ட ஒரு பகுதியில் இப்படி ஒரு கதை நடப்பதாகச் சொன்ன துணிச்சலுக்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். அதுதான் படத்தின் வெற்றி!
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in