Published : 17 Aug 2018 11:06 AM
Last Updated : 17 Aug 2018 11:06 AM

ராகயாத்திரை 18: பொன்மானே சங்கீதம் பாடிவா…

எப்படிப் பந்து வீசினாலும் சிக்ஸ் அடிக்கும் மட்டையாளர்கள் நமது வாசகர்கள்! ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஜெமினி கணேசனின் அடைமொழி பிலஹரி. அந்த ராகத்தில் இசைஞானி இசையமைத்த பாடல், ஸ்ரீதேவி நடித்தது எனக் கேட்டிருந்தோம்.

சரியான விடை ‘பாலநாகம்மா’ (1981) என்ற படத்தில் வரும் ‘கூந்தலில் மேகம் வந்து’ எனும் பாடல்தான் அது. ‘கவியரசு’ கண்ணதாசன் எழுதிய பாடல். யேசுதாஸின் கந்தர்வக் குரலில் ‘தங்கமேனி சிற்ப சித்திரம், தத்தைப் பேச்சு முத்து ரத்தினம்’ எனப் பாடல் வரிகளில் பிலஹரி ராகம்போல் வார்த்தைகள் துள்ளி விளையாடும். சரியாகப் பதிலளித்த பலருள் சென்னை ஸ்ரீராம், கோவில்பட்டி சேதுராமன் ஆகியவர்களுக்குப் பாராட்டுக்கள்.

பிலஹரி ராகம் சங்கராபரணத்தின் குழந்தை ராகம். அதன் ஆரோகணம் ஸ ரி2 க2 ப த2 ஸா. அவரோகணம் ஸ நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ. அதாவது ம வும் நி யும் அவரோகணத்தில் மட்டுமே வரும். அதாவது கமபா என வராது கபமா என வரும். அது போல் பதநிஸ என வராது பதஸநி என வரும். இந்த ராகத்தில் ‘தொரகுணா இட்டுவண்டி சேவா’ என்னும் தியாகய்யர் பாடல் மிகவும் பிரபலம். இந்த ராகத்திலே கர்னாடக சங்கீதத்தின் பால பாடங்களில் ஒன்று ‘ரார வேணுகோபால’ என்பதாகும். அதே மெட்டில் தொடங்கி இளையராஜா பிலஹரியில் ஒரு அட்டகாசமான குத்துப் பாடல் போட்டிருப்பார். ‘எல்லாம் இன்ப மயம்’ (1981) என்ற படத்தில் வரும் ‘மாமன் வூடு மச்சிவூடு’ என்ற பாடல் அது.

பாடியவர் மலேசியா வாசுதேவன். பாடல் தொடங்கும் முன் ‘சங்கராபரணம்’ படத்தில் வருவது போல் ‘ரீஜெண்டா’ மூசிக் போடச் சொல்லிக் கமல் கலாய்ப்பதையும் கவனியுங்கள். எல்லா இசையும் ஏழு ஸ்வரங்கள்தான் என்னும் சங்கதி அடங்கியிருக்கும். இதே செய்தியுடன் ‘உன்னால் முடியும் தம்பி’ (1988) படத்தில் வரும் ‘நீ ஒன்று தானா என் சங்கீதம்’ என்னும் பாடலும் யேசுதாஸின் குரலில் ஒலிக்கும். பாடலின் இறுதியில் ஸ்வரப் பிரயோகங்களோடு அலாதியான அனுபவத்தைத் தரும் பிலஹரியாகும்.

கிராமிய வண்ணம்

பிலஹரியின் தாய் சங்கராபரணம் 29-வது மேளகர்த்தா ராகம். ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ என வரும். சங்கராபரணத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களை இளையராஜா அளித்திருக்கிறார். பொதுவாக மேற்கத்திய இசை பாணியில் இசை அமைக்கவும், மெல்லிசையில் மெட்டமைக்கவும், அதே சமயம் கிராமிய சூழ்நிலைக்கேற்ற நாட்டுப்புற மெட்டுக்களுக்கும் இந்த ராகத்தைப் பயன்படுத்தியிருப்பார். அந்தக் கடலில் சில முத்துக்களைப் பார்ப்போம்

‘ஜெர்மனியில் செந்தேன் மலரே’ என்னும் துள்ளவைக்கும் பாடல் (உல்லாசப் பறவைகள்) ஒரு அட்டகாசமான சங்கராபரணம்; ‘எஜமான்’ படத்தில் இசைக்கருவிகளின் அமர்க்கள சங்கமமாக விளங்கும் ‘ஆலப்போல் வேலப்போல்’; ‘கண்மணி அன்போடு காதலன்’ எனக் ‘குணா’வில் கமல் உருகும் பாடல்; மலேசியாவின் மனதை மயக்கும் குரலில் ஒலிக்கும் ‘இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு’ பாடல் (சிவப்பு ரோஜாக்கள்);

அதே மலேசியா காமெடியாகப் பாடிய ‘மாமாவுக்குக் குடுமா குடுமா’ எனும் ‘புன்னகை மன்னன்’ படப் பாடல்; ‘பொன்மானே சங்கீதம் பாடிவா’ (நான் சிகப்பு மனிதன்) எனும் ஓர் அருமையான டூயட் பாடல்; ‘ராஜாதி ராஜா’வில் ‘மலையாளக் கரையோரம் தமிழ்பாடும் குருவி’ எனும் விறுவிறுப்பான பாடல்; ‘புதுச்சேரி கச்சேரி’ (சிங்கார வேலன்) என்று தொடங்கும் கலாட்டா பாடல் எல்லாமே இந்த ராகம்தான்.

தாலாட்டும் சோகமும்

குறிப்பாகத் தாலாட்டுப் பாடல்களுக்கும், இரவுநேர சோகப் பாடல்களுக்கும் இந்த ராகத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார் இளையராஜா. ‘உதயகீதம்’ (1985) படத்தில் வரும் ‘தேனே தென்பாண்டி மீனே’ என்னும் பாடல் சோக உணர்வுகளை நெஞ்சத்தில் ஊற்றெடுக்க வைக்கக் கூடியது. ‘நினைவுச்சின்னம்’ (1989) என்றொரு படம். அதில் ஓர் இனிமையான சங்கராபரணப் பாடல் உண்டு. அது பி.சுசீலாவின் குரலில் ஒலித்த ‘ஏலே இளங்கிளியே’. அதேபோல் ‘கிழக்கு வாசல்’ (1990) படத்தில் வரும் ‘பச்ச மலப் பூவு’ பாடலும் சங்கராபரணம்தான். சித்ராவின் குரலில் ‘மெல்லத் திறந்தது கதவு’ (1986) படத்தில் இடம்பெற்ற மறக்க முடியாத பாடலான ‘குழலூதும் கண்ணனுக்கு’ எனத் தொடங்கும் பாடலும் இதே ராகம்தான்.

யேசுதாஸ் குரலில் ஒலித்த ஏரிக்கரை எனத் தொடங்கும் இரண்டு பாடல்கள் என்னைக் கவர்ந்த சங்கராபரணங்கள். ஒன்று, ‘தூறல் நின்னு போச்சு’ (1982) படத்தில் வரும் ‘ஏரிக்கரை பூங்காற்றே’, இரண்டு, ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’. ‘சின்னத் தாயி’ (1992) படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் வயலின், குழல் என இசைக் கருவிகளின் துணையுடன் நாட்டுப்புற மெட்டில் சங்கராபரணத்தில் ஓர் இசை ஆபரணமாக இழைத்திருப்பார் இப்பாடலை.

சங்கராபரணத்தின் இன்னொரு சேய் ராகம் கேதாரம். ஸ ம1 க2 ம1 ப நி2 ஸ என்று ஆரோகணமும் ஸ நி2 ப ம1 க2 ரி2 ஸ என அவரோகணமும் கொண்டது. இந்த ராகத்தில் அற்புதமாக ஒரு பாடலை இசைஞானி தந்திருப்பார். ‘வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்’ என்பன போன்ற வைரமுத்துவின் அபாரக் கற்பனையுடன் வரிகள் அமைந்த பாடல். ‘பொன் மாலைப் பொழுது’ எனத் தொடங்கும் ‘நிழல்கள்’ (1980) படப் பாடல். முழுநீள நகைச்சுவைப் படம் ஒன்றில் சீரியஸாக ராக இலக்கணங்களெல்லாம் பொருந்திவரும் ஒரு பாடலை அமைத்திருப்பார் ராஜா. ‘மைக்கேல் மதன காமராஜன்’ (1990) படத்தில் வரும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் யானும்’ எனத் தொடங்கும் கமல், ஜானகி பாடிய பாடல் கேதாரம் தான்.

கேதாரத்தைக் கொஞ்சம் சேதாரம் செய்தால் கிடைப்பது நளினகாந்தி என்னும் ராகம். ஸ க2 ரி2 ம1 ப நி2 ஸ; ஸ நி2 ப ம1 க2 ரி2 ஸ என இடக்கு மடக்காக இருக்கும். ‘மனவியால கிஞ்ச’ என்னும் தியாகய்யர் கீர்த்தனை மிகப் பிரபலம். அந்த ராகத்தில் கமல் நடித்த ‘கலைஞன்’ (1993) திரைப்படத்தில் வரும் ‘எந்தன் நெஞ்சில் நீங்காத’ எனும் பாடல் நம் நெஞ்சங்களை விட்டு நீங்காத ஒன்று. இடையே ‘ஸகரிமாகரி’ என இந்த ராகத்தினை ராஜாவே ஆலாபனைசெய்வது வெகு சிறப்பாக இருக்கும்.

இந்த வாரக் கேள்வி, மழை பொழிய வைக்கும் ராகத்தில் வந்த பாடல். ‘நடிகர் திலக’த்தின் மகன் நடித்த படத்தில். ராகம்? பாடல்?

தொடர்புக்கு:ramsych2@gmail.com
படங்கள் உதவி:ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x