

பொதுவாகவே காமிக்ஸ், சூப்பர்ஹீரோக்கள் எனும் அதிநாயகர்களை எதற்காக உருவாக்குகிறோம், பார்க்கிறோம்? சிந்திக்கும் திறனும் கற்பனைத் திறனும் கொண்ட மனிதர்கள் காலம் முழுக்க புதிதுபுதிதாகத் தங்கள் கற்பனைக்கு வடிவம் கொடுத்தபடியே இருக்கிறார்கள். எவ்வளவுதான் படைப்பூக்கத்துடன் நாம் செயல்பட்டாலும் ஏமாற்றம், விரக்தி, இயலாமை, நெருக்கடிகள் போன்றவை மனிதர்களுக்கு வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் சலித்துக்கொண்டு ஓய்ந்துபோயிருந்தால், மனித குலம் என்றைக்கோ அழிந்துபோயிருக்கும்.
மனித குலத்தின் ஒரு பகுதி, ஒரு சிலர் எப்போதுமே தவறாக, சுயநலமாக, பேராசையாக, வஞ்சனையாக செயல்பட்டாலும், மனிதகுலம் திரும்பத்திரும்ப தன் உள்ளார்ந்த தன்மையை, மனிதத்தன்மையை, மாந்த உணர்வை திரும்பத்திரும்ப ஏதோ ஒரு வகையில் நினைவுபடுத்திக்கொண்டே, உயிர்ப்பித்துக்கொண்டே வந்துள்ளது.
அப்படி விடாமல் செய்துகொண்டே இருப்பதற்கு உத்வேகம் தேவை. இயல்பாகத் தோன்றும் சலிப்பையும் அயர்ச்சியையும் தாண்டியாக வேண்டும். அதற்கு அதிநாயக பிம்பங்கள் (இந்த இடத்தில் நமது மாஸ் ஹீரோக்களை தவறாக ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம்), அவர்களின் ஆற்றல் நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடும். மனிதர்களின் பயன்படுத்தப்படாத ஆற்றல்களை, திறன்களை, மனோதிடத்தை அதிகரித்துக்கொள்ள, பட்டைதீட்டிக்கொள்ள சூப்பர்ஹீரோக்கள் உதவலாம்.
அதிநாயக உலகம்: சூப்பர்மேன், வேதாளர், ஸ்பைடர்மேன், பேட்மேன், டிசி காமிக்ஸ் உலகம்-மார்வெல் உலகம் என ஹாலிவுட்டில் உற்பத்தி செய்து அனுப்பப்படும் சூப்பர்ஹீரோக்கள், உலகின் அனைத்து நாடுகளுக்குமானவர்களாக இருப்பது சாத்தியமில்லை. வேறு வழியில்லாமல்தான் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்நியத்தன்மை, அதீத வன்மறை, மனிதப்பண்புகளுடன் இணக்கமற்றதன்மை போன்றவை ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்களிடம் தூக்கலாக இருக்கின்றன.
இவர்கள் அனைவரையும் தாண்டிச்செல்லும் சூப்பர்ஹீரோக்கள் - அதிநாயகர்கள் நம் மண்ணிலேயே வேர்விட்டு கிளைபரப்பி இருந்திருக்கிறார்கள். நமது தொன்மக்கதைகள், நாட்டுப்புறக் கதைகளில் உள்ள எத்தனையோ மிகைப்புனைவு அம்சங்கள் சிறப்பான பெருங்கதைகளை உருவாக்குவதற்கான திறனைக் கொண்டவை. அவற்றுக்கு காமிக்ஸ், அனிமேஷன், சினிமா போன்ற காட்சி வடிவங்களை முழுவீச்சில் கொடுக்க நாம் தயாராகவில்லை. சமீபத்தில் வெளியான 'லோகா முதல் பாகம்- சந்திரா' இதை சாதித்துக்காட்டியிருக்கிறது.
கேரள யட்சி: கள்ளியங்காட்டு நீலி என்பது கேரளத்தின் யட்சி கதாபாத்திரங்களில் ஒன்று. சந்திரா வடிவில் நடப்பு உலகத்துக்கு நீலி வருவதுதான் கதை. யட்சி, சாத்தான்களை வைத்து பழைய பேய்க்கதைகளை இன்றைக்கும் சொல்லிக்கொண்டிருப்பதால் என்ன பயன்? இன்றைய நிஜங்களுடன் அவற்றுக்குத் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். தொன்மக் கதையின் மைய இழையை மறுகண்டுபிடிப்பு செய்து புதிய அர்த்தங்களை ஏற்ற வேண்டும்.
லோகா கதைப்படி கள்ளியங்காட்டு நீலி எனும் பழங்குடிக் குழந்தையின் வம்சத்தை அப்பகுதியில் இருக்கும் அன்றைய அரசன் அழிக்கிறான். ஆனால், வௌவால்கள் கடிப்பதன்வழி அதீத சக்தியைப் பெறும் நீலி இறப்பை அறுத்து காலம்காலமாக உயிர்வாழ்ந்துவருகிறாள். அநீதியை அழிக்கும் சக்தியாக நீலி எப்படி காலங்களைக் கடந்து சமர் புரிகிறாள் என்பது ஃபிளாஷ்பேக்/நடப்பு காட்சிகள் அடுத்தடுத்து எடிட் செய்யப்பட்டுள்ளதன் மூலம் நமக்குக் காட்டப்படுகிறது.
அதீத சக்தியும் மனிதர்களும்: படத்தில் நிறைய சுவாரசிய முரண்களையும் புதிய ஐடியாக்களையும் வைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று ரத்தம் தொடர்பானது; சந்திராவின் எதிர்வீட்டு இளைஞன் சன்னியின் பூனை/நாய்களுக்கும் யட்சி, சாத்தான்களுக்குமான உறவு போன்றவை படத்தின் முக்கிய உணர்வுகளைக் கடத்த பயன்பட்டிருக்கின்றன. என்னதான் யட்சி அதீத சக்திகளைப் பெற்றவராக இருந்தாலும் உடலில் வெயில் படக்கூடாது, உடலில் ரத்தம் குறைந்துவிடக் கூடாது, இதயம் தாக்கப்பட்டுவிடக் கூடாது என்பது போன்ற பலவீனங்கள் அவர்களுக்கும் இருக்கின்றன. சந்திராவைக் காதலிக்க நினைக்கும் சன்னி, சாதாரண மனிதன்தான் என்றாலும் கிளைமேக்ஸில் சந்திரா உயிர்பெற அவனும் உதவுகிறான்.
கல்யாணி பிரியதர்ஷன் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். சாதாரண மனிதர்போல் ஒரு யட்சி உலவினாலும், பெரிதாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அதேநேரம் சுற்றி இருப்பவர்களுடன் தொடர்பில் இருக்கும் வகையில் ஒரு இண்ட்ரோவெர்ட் போல வருகிறார். அவரது நடைஉடை பாவனைகள், குரல் போன்றவை இதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
சாதனைகள்: பான் இந்தியா சினிமாக்கள் எனப்படும் பெரிய அட்டைக்கத்திகள், பெரிய பட்ஜெட்டில் மட்டுமே படமெடுக்கும் பெரிய இயக்குநர்கள், மாஸ் ஹீரோக்களை லோகா மூலம் மலையாள சினிமா உலகம் மீண்டும் ஒரு முறை அடித்து வீழ்த்தியிருக்கிறது. ஒரு சூப்பர்ஹீரோ படத்தை எடுப்பதற்கு அனுமதிக்காத குறைந்த பட்ஜெட் போன்ற நெருக்கடிகள், அவர்களின் கற்பனைத்திறனை பட்டை தீட்டி நல்ல படத்தைக் கொடுக்க உதவியுள்ளன.
கருத்துரீதியாகவும் லோகா பல உயரங்களைத் தாண்டியிருக்கிறது. உறுப்புக் கடத்தல் மாஃபியாவுக்கு எதிராகவே சந்திரா சமர் புரிகிறார். அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பெண் சூப்பர்ஹீரோவாக வந்திருக்கிறார். மலையாளப் படங்களிலேயே அதிக வசூல், 2025இல் அதிக வசூல் செய்த மலையாளப் படம் எனப் பல சாதனைகளை புரிந்திருக்கிறது. இப்படி லோகா மூலம் மலையாள சினிமா இந்திய அளவில் முன்னோடியாக மாறியிருக்கிறது.
நாம் என்ன செய்கிறோம்? - நீலி போன்ற யட்சிக் கதைகள் தமிழ்ப் பண்பாட்டிலும் உண்டு. விளிம்புநிலை மக்கள் அழிக்கப்பட்ட, நெருக்கடிக்குத் தள்ளப்பட்டதன் விளைவாகவே இதுபோன்ற தொன்மக் கதைகள் உருவாகின. அதீத சக்தி படைத்த அந்த யட்சிகள் ஏன், நவீன காலப் பிரச்சினைகளுக்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கக் கூடாது? நம் ஊரைப் பொறுத்தவரை சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம்தான். ஆனால், அதற்காக அது மழுங்கிப்போன பொழுதுபோக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பொழுதுபோக்கு ஊடகம் வழியாகவே, மக்கள் கூட்டத்தில் யார் பக்கம் ஒரு படம் நிற்கிறது என்கிற செய்தியையும் அதன் மூலம் மன உத்வேகத்தையும் நிச்சயம் ஏற்படுத்த முடியும். சில அதிசயங்களை மக்கள் கூட்டமாக, எதிர்காலத்தில் சாத்தியப்படுத்துவதற்கான உத்வேகத்தை தங்கள் மாயாஜாலம், மிகை ஆற்றல்கள் வழியாக சூப்பர்ஹீரோக்கள் நிகழ்த்திக்காட்டுகிறார்கள்.
இப்படிக் கற்பனையின் புதிய துள்ளலாக லோகா வந்துள்ளது நிலையில், தமிழில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் பேய் படங்களையும், காமெடி பேய்ப் படங்களையும் எடுத்துக்கொண்டிருக்கிறோம். 'சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்று இல்லாத கம்பை சுற்றிக்கொண்டிருக்கிறோம். கேமியோ-கௌரவத் தோற்றத்தை வைத்து சமீபத் தமிழ்ப் படங்களில் தேவையற்ற ஹைப் உருவாக்கப்படுகிறது. படம் வெளியாகும்போது இதற்கா இவ்வளவு பில்டப் என ரசிகர்கள் அடித்துத் துவைத்துவிட்டு போய்விடுகிறார்கள்.
ஆனால், லோகாவிலோ கௌரவத் தோற்றத்தை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அடுத்தடுத்த பாகங்களுக்கான சுவாரசியத் தூண்டிலாகவும் இவை உள்ளன. சந்திராவின் கதை முடிந்த பின்னரும் சொல்லப்படாமல் விடுப்பட்ட சில விஷயங்கள், அடுத்தடுத்த பாகங்களுக்கான முன்னோட்டம் போன்றவை வருகின்றன. அவற்றை வைத்துப் பார்க்கும்போது லோகாவின் சாதனை தொடரும் என்றே தோன்றுகிறது.